நயினார் நாகேந்திரனையே வீட்டு காவலில் வைத்த விஜய் அரசு.. 480 பேரா? கொதித்த எடப்பாடி பழனிசாமி, வானதி

Subscribe to Oneindia Tamil

நெல்லை: திருப்பரங்குன்றம் தீபம் ஏற்றும் விவகாரம் தமிழகத்தில் மீண்டும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. உச்சநீதிமன்ற உத்தரவின்படி தீபம் ஏற்ற வலியுறுத்தி திருப்பரங்குன்றம் செல்லத் திட்டமிட்ட பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரனை போலீசார் வீட்டுக் காவலில் வைத்துள்ளனர். அவரது வீட்டை சுற்றிலும் போலீசார் குவிக்கப்பட்டுள்ள நிலையில், நெல்லை மாவட்டத்தில் பாஜக மற்றும் இந்து முன்னணியைச் சேர்ந்த 480 பேரும் வீட்டுக் காவலில் வைக்கப்பட்டுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. இதற்கு எடப்பாடி பழனிசாமி, வானதி சீனிவாசன் உள்ளிட்ட தலைவர்கள் கொந்தளித்து கண்டனம் தெரிவித்துள்ளனர்.

மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றம் மலையில் உள்ள தீபத்தூணில் திருக்கார்த்திகை நாளன்று தீபம் ஏற்றுவது தொடர்பாக கடந்த சில மாதங்களாகவே சர்ச்சை நீடித்து வருகிறது. இந்த விவகாரத்தில் தீபத்தூணில் தீபம் ஏற்ற அனுமதி அளித்து உச்சநீதிமன்றம் இடைக்கால உத்தரவு பிறப்பித்தது.

Nainar Nagendran House Arrest BJP Tamil Nadu Tamil Nadu Police

இதையடுத்து, இன்று திருக்கார்த்திகை தீபத் திருநாளில் திருப்பரங்குன்றம் சென்று தீபம் ஏற்றும் நிகழ்ச்சியில் பங்கேற்க பாஜகவினர் திட்டமிட்டனர். குறிப்பாக, மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன் நெல்லையில் இருந்து கட்சி நிர்வாகிகள் மற்றும் தொண்டர்களுடன் திருப்பரங்குன்றம் செல்ல ஏற்பாடு செய்திருந்தார்.

நயினார் நாகேந்திரன் வீட்டுக் காவல்

ஆனால், அவரது திட்டத்திற்கு போலீசார் அனுமதி அளிக்கவில்லை. இன்று காலை நெல்லை பெருமாள்புரத்தில் உள்ள நயினார் நாகேந்திரன் வீட்டுக்குச் சென்ற போலீசார் அவரை வீட்டுக் காவலில் வைத்தனர். அவரது வீட்டைச் சுற்றிலும் ஏராளமான போலீசார் குவிக்கப்பட்டு பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

இதேபோல், நெல்லை மாவட்டம் முழுவதும் சட்டம் ஒழுங்கு பிரச்சினை ஏற்படாமல் தடுக்க பாஜக மற்றும் இந்து முன்னணி அமைப்புகளைச் சேர்ந்த 480 பேரை அவரவர் வீடுகளிலேயே போலீசார் வீட்டுக் காவலில் வைத்துள்ளதாக போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தமிழக பாஜக கண்டனம்

தன்னை வீட்டுக் காவலில் வைத்துள்ள போலீசாரின் நடவடிக்கைக்கு நயினார் நாகேந்திரன் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். சுப்ரீம் கோர்ட் உத்தரவை அரசு மதித்து செயல்பட்டிருக்க வேண்டும் என்றும், தீபம் ஏற்றுவதற்கு உரிய ஏற்பாடுகளைச் செய்திருக்க வேண்டும் என்றும் கூறியுள்ளார்.

செய்தியாளர்களிடம் நயினார் பேசும்போது, "உச்சநீதிமன்ற உத்தரவை வணங்கி ஏற்றுக்கொண்டு திருப்பரங்குன்றத்தில் தீபம் ஏற்றுவதற்கு அரசு உடனடியாக ஆணை பிறப்பித்திருக்க வேண்டும். ஆனால், பெரும்பான்மை சமுதாய மக்களின் கோரிக்கையை நிராகரித்து, தேவையில்லாத பதற்றத்தைச் சட்ட ஒழுங்குச் சூழலாக அரசு திசைதிருப்பி வருகிறது .

நீதிமன்ற உத்தரவுகள்

இன்று கார்த்திகை தீபத் திருநாளை முன்னிட்டு தமிழகம் முழுவதும் உள்ள பாஜக மாவட்டத் தலைவர்கள், நிர்வாகிகள் மற்றும் தொண்டர்களை போலீஸார் வீட்டுக்காவலில் வைத்து முடக்கியிருப்பது வன்மையாகக் கண்டிக்கத்தக்கது. நீதிமன்ற உத்தரவுகளை மதிக்காமல் காவல்துறையை ஏவி விடுவதிலேயே அரசு கவனம் செலுத்துகிறது.

அதேபோல, கள்ளக்குறிச்சி மாவட்ட பெண் ஆட்சியருக்கு பாலியல் தொல்லை அளித்ததாக புகாருக்குள்ளான சட்டமன்ற உறுப்பினர் அருண் விக்னேஷ் மீது இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்க முடியாத ஒரு நிர்வாகத் திறமையற்ற அரசாகவே இது செயல்படுகிறது. இன்னமும் கால அவகாசம் உள்ளது.

உச்சநீதிமன்ற உத்தரவின்படி, இன்று மாலை மாவட்ட ஆட்சியர் தலைமையில் உரிய பாதுகாப்புடன் குறைந்தபட்சம் 10 பேராவது சென்று தீபம் ஏற்ற அனுமதிக்க வேண்டும் .. அப்படி செய்ய தவறினால், தமிழக வரலாற்றில் இந்நாள் ஒரு இருண்ட நாளாக அமையும்" என்றெல்லாம் எச்சரித்துள்ளார்.

மதுரையில் பாதுகாப்பு

நெல்லையில் பாஜக நிர்வாகிகள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ள நிலையில், திருப்பரங்குன்றம் மலையிலும் போலீஸ் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. சுமார் 5,600 போலீசார் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. மலையைச் சுற்றியுள்ள பகுதிகளில் சிசிடிவி கேமராக்கள் மூலமாகக் கண்காணிப்பு மேற்கொள்ளப்படுவதுடன், ட்ரோன்கள் பறக்கவும் தடை விதிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

மேலும், மதுரை மாவட்டத்தில் BNSS சட்டத்தின் 163-வது பிரிவின் கீழ் நேற்று நவம்பர் 23 இரவு முதல் நவம்பர் 25 காலை வரை கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. அனுமதியற்ற கூட்டங்கள், பேரணிகள் மற்றும் ஆர்ப்பாட்டங்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

உச்சநீதிமன்றத்தின் இடைக்கால உத்தரவின்படி, குறிப்பிட்ட குழுவினர் மட்டுமே தீபத்தூணுக்குச் சென்று தீபம் ஏற்றுவதற்கான ஏற்பாடுகளை மாவட்ட நிர்வாகம் செய்ய வேண்டும். பொதுமக்கள் அனைவரும் மலை உச்சிக்குச் செல்ல அனுமதி அளிக்கப்படவில்லை. இதனிடையே, சுப்ரீம் கோர்ட் உத்தரவை எதிர்த்து தமிழக அரசு சீராய்வு மனு தாக்கல் செய்துள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன..

எடப்பாடி பழனிசாமி சீற்றம்

இந்தநிலையில், நயினார் நாகேந்திரன் வீட்டுக் காவலில் வைக்கப்பட்டுள்ளதற்கு அ.தி.மு.க பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி கண்டனம் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக எடப்பாடி பழனிசாமி தனது சமூக ஊடகப் பக்கத்தில் வெளியிட்டுள்ளப் பதிவில், "பாரதிய ஜனதா கட்சியின் மாநிலத் தலைவர், அன்புச் சகோதரர் நயினார் நாகேந்திரனின் திருநெல்வேலி இல்லம் முன்பு காவல்துறையைக் குவித்து, அவரையும் பா.ஜ.க நிர்வாகிகளையும் சட்டவிரோதமாக வீட்டுக்காவலில் முடக்கும் த.வெ.க அரசின் செயல் வன்மையான கண்டனத்திற்குரியது.

ஒரு தேசியக் கட்சியின் மாநிலத் தலைவரையே சட்டவிரோதமாக முடக்குவது பாசிசத்தின் உச்சம்! காவல்துறையை ஏவி அரசே அச்சுறுத்தலையும் பதற்றத்தையும் உருவாக்குவது ஜனநாயகத்திற்கும் சட்டம் ஒழுங்கிற்கும் விடுக்கப்படும் அச்சுறுத்தலாகும்.

உடனடியாக இத்தகைய அடக்குமுறைகளைக் கைவிட்டு, நயினார் நாகேந்திரன் உள்ளிட்ட தமிழக பா.ஜ.க நிர்வாகிகளைச் சட்டவிரோதமாக முடக்கும் போக்கை நிறுத்திக்கொள்ள வேண்டும் என இந்த ஆச்சரியக்குறி அரசை வன்மையாகக் கண்டித்து வலியுறுத்துகிறேன்" என்று பதிவிட்டுள்ளார்.

வானதி சீனிவாசன் ஆவேசம்

இதுதொடர்பாக பா.ஜ.க முன்னாள் எம்.எல்.ஏ வானதி சீனிவாசன் தனது சமூக ஊடகப் பக்கத்தில் வெளியிட்டுள்ளப் பதிவில், "திருப்பரங்குன்றம் தீபத்தூணில் இன்று தீபம் ஏற்றப்பட உள்ள நிலையில், தமிழக பா.ஜ.க. மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன் அவர்களையும், இந்து அமைப்புகளின் நிர்வாகிகளையும் வீட்டுக் காவலில் வைத்துள்ள தமிழக அரசின் நடவடிக்கை கடும் கண்டனத்திற்குரியது!

நீதிமன்றத் தீர்ப்பை மதித்து செயல்படுத்த வேண்டிய அரசு, அதற்காகக் குரல் கொடுப்பவர்களையும், போராடுபவர்களையும் காவல்துறையைக் கொண்டு ஒடுக்க முயல்வது ஏன்?

சட்டத்தின் ஆட்சியை நிலைநாட்ட வேண்டிய காவல்துறையை, மக்களின் உரிமைக் குரலை அடக்கப் பயன்படுத்துவது ஜனநாயகத்திற்கு உகந்ததல்ல.

அரசின் ஒவ்வொரு நடவடிக்கையையும் தமிழக மக்கள் உன்னிப்பாகக் கவனித்துக் கொண்டிருக்கிறார்கள். அதிகாரத்தைக் கொண்டு மக்களின் நம்பிக்கையையும் உரிமைக் குரலையும் ஒரு போதும் ஒடுக்கிவிட முடியாது! " என பதிவிட்டுள்ளார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+