கள்ளக்குறிச்சி MLA மீது FIR போட்ட அரசு.. மெசேஜ்களை ஆய்வு செய்த நீதிபதி! கோர்ட்டில் நடந்தது என்ன?
சென்னை: பெண் மாவட்ட ஆட்சியருக்கு ஆபாச மற்றும் தேவையற்ற குறுஞ்செய்திகளை அனுப்பி தொல்லை கொடுத்ததாக கூறப்படும் விவகாரத்தில், ஆளும் தமிழக வெற்றிக் கழகத்தின் கள்ளக்குறிச்சி தொகுதி எம்.எல்.ஏ சி. அருள் விக்னேஷ் மீது முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்பட்டு, வழக்கு தொடரப்பட்டுள்ளதாகக் காவல்துறை மற்றும் மாநில தலைமைக் குற்றவியல் வழக்கறிஞர் சென்னை உயர்நீதிமன்றத்தில் அதிகாரப்பூர்வமாகத் தெரிவித்துள்ளனர்.
இதனையடுத்து, பெண் மாவட்ட ஆட்சியருக்கு எம்.எல்.ஏ அனுப்பியதாகக் கூறப்படும் குறுஞ்செய்திகளின் விவரங்களை நீதிமன்றம் ஆய்வு செய்து வருகிறது.

நீதிமன்றத்தில் நடந்த அதிரடி திருப்பம்
பெண் மாவட்ட ஆட்சியருக்கு எம்.எல்.ஏ அருள் விக்னேஷ் தகாத முறையில் குறுஞ்செய்திகளை அனுப்பியதாகக் கூறி, அவர் மீது வழக்குப் பதிவு செய்ய உத்தரவிடக் கோரி வழக்கறிஞர் ஆர். திரிசூலி சென்னை உயர்நீதிமன்றத்தில் ரிட் மனுத் தாக்கல் செய்திருந்தார்.
இந்த மனு நீதிபதி வி. லட்சுமிநாராயணன் முன்பு நேற்று விசாரணைக்கு வந்தபோது, மாவட்ட ஆட்சியரிடமிருந்து எந்தப் புகாரும் வரவில்லை என அரசுத் தரப்பு தெரிவித்திருந்தது. அதனைத் தொடர்ந்து, மாவட்ட ஆட்சியரிடம் மீண்டும் ஒருமுறை கேட்டு உறுதிப்படுத்திவிட்டு நாளை தெரிவிக்க வேண்டும் என நீதிபதி உத்தரவிட்டிருந்தார்.
எப்.ஐ.ஆர் பதிவு செய்யப்பட்டதாக அரசுத் தரப்பு தகவல்
இந்நிலையில், இந்த வழக்கு நீதிபதி வி. லட்சுமிநாராயணன் முன்பு இன்று (நவம்பர் 24) மீண்டும் விசாரணைக்கு வந்தது. முன்னதாக, கள்ளக்குறிச்சி நகர காவல் ஆய்வாளர் செல்வநாயகம் தலைமையிலான போலீஸ் குழுவினர், மாவட்ட காவல் கண்காணிப்பாளரின் (SP) முதற்கட்ட விசாரணை அறிக்கை அடங்கிய சீல் வைக்கப்பட்ட கோப்புடன் நீதிமன்றத்திற்கு வந்திருந்தனர்.
இன்றைய விசாரணையின் போது, தமிழக காவல்துறை சார்பில் ஆஜரான மாநில தலைமைக் குற்றவியல் வழக்கறிஞர் ஆர். ஜான் சத்யன் முக்கியத் தகவலை நீதிமன்றத்தில் சமர்ப்பித்தார். அதில், "பெண் மாவட்ட ஆட்சியர் அளித்த புகாரின் அடிப்படையில், தவெக எம்.எல்.ஏ சி. அருள் விக்னேஷ் மீது எப்.ஐ.ஆர் (FIR) பதிவு செய்யப்பட்டு, முறைப்படி வழக்குத் தொடரப்பட்டுள்ளது" என்று தெரிவித்தார்.
மெசேஜ்களை ஆய்வு செய்யும் நீதிபதி
மக்கள் பிரதிநிதி என்ற முறையில் அரசுப் பணிகள் தொடர்பாகப் பேசுவதைத் தாண்டி, எம்.எல்.ஏ அருள் விக்னேஷ் தன்னிடம் தகாத முறையில் நடந்து கொள்ள முயன்றதாக மாவட்ட ஆட்சியர் புகாரில் குறிப்பிட்டுள்ளார்.
தனது தனிப்பட்ட தொலைபேசி எண்ணுக்கு எம்.எல்.ஏ அருள் விக்னேஷ் தேவையற்ற மற்றும் வரம்பு மீறிய குறுஞ்செய்திகளை தொடர்ந்து அனுப்பி மன உளைச்சலும் தொல்லையும் கொடுத்ததாக அவர் குற்றம் சாட்டியுள்ளார். இது தொடர்பாக காவல்துறை தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட எப்.ஐ.ஆர் நகல் மற்றும் சீல் வைக்கப்பட்ட விசாரணை அறிக்கையைப் பெற்றுக்கொண்ட நீதிபதி வி. லட்சுமிநாராயணன், அந்த ஆவணங்களைத் தீவிரமாகப் பரிசீலனை செய்தார்.
குறிப்பாக, மாவட்ட ஆட்சியரின் தனிப்பட்ட தொலைபேசி எண்ணுக்கு எம்.எல்.ஏ அருள் விக்னேஷ் அனுப்பியதாகக் கூறப்படும் குறுஞ்செய்திகளில் என்னென்ன வாசகங்கள் இடம்பெற்றுள்ளன, அவற்றின் தன்மை என்ன என்பது குறித்த விவரங்களை நீதிமன்றம் ஆய்வு செய்து வருகிறது.
இத்தனை நாட்களாக புகாரே இல்லை.. வதந்தி என்று கூறப்பட்டு வந்த நிலையில், தற்போது காவல்துறையே நீதிமன்றத்தில் எம்.எல்.ஏ மீது எப்.ஐ.ஆர் பதிவு செய்துவிட்டோம் என அதிகாரப்பூர்வமாக அறிவித்திருப்பதும், நீதிபதி அந்த மெசேஜ்களின் விவரங்களை ஆய்வு செய்து வருவதும் தமிழக அரசியலில் உச்சகட்ட பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


Click it and Unblock the Notifications
