"இறந்த அண்ணன்" விற்ற ரூ.50 லட்சம் நிலம்.. சென்னை சொத்தை கண்டு ஆடிப்போன 70 வயது தங்கை.. என்ன நடந்தது?
சென்னை: சென்னையில் ஒரு பெண் தனது குடும்பச் சொத்தை விற்க முயன்றபோது, அந்த நிலம் ஏற்கனவே இன்னொருவரின் பெயருக்கு மாறியிருப்பது தெரியவந்துள்ளது.. விசாரித்தபோதுதான், இறந்து போன அவரது அண்ணனின் அடையாளத்தை பயன்படுத்தி ரூ.50 லட்சம் மதிப்புள்ள நிலம் விற்கப்பட்டதாக புகார் எழுந்தது. இந்த சம்பவத்தில் கணவன் மனைவி உள்ளிட்ட 3 பேர் போலீசாரிடம் சிக்கியுள்ளனர். மீண்டும் என்ன நடந்தது சென்னையில்?
சென்னை ராயப்பேட்டை நல்லண்ண முதலி தெருவில் வசித்து வருபவர் சியாமளா (70). இவரது குடும்பத்தில் முரளி என்ற அண்ணன் இருந்தார். பெற்றோர் 2 பேருமே ஏற்கனவே இறந்துவிட்டனர். முரளிக்கும் இன்னும் திருமணம் ஆகவில்லை.

சென்னை ராயப்பேட்டை
கடந்த 2023-ம் ஆண்டு நவம்பர் மாதம் முரளி உயிரிழந்தார். அவருக்கு சொந்தமாக திருவள்ளூர் மாவட்டம் வெள்ளானூர் கிராமத்தில் 2,621 சதுர அடி அளவில் வீட்டுமனை இருந்தது. முரளிக்கு மனைவி, குழந்தைகள் என யாரும் இல்லாததால், அவரது தங்கை சியாமளா ஒரே வாரிசாக இருந்தார்.
இந்த நிலையில், அண்ணனுக்கு சொந்தமான வீட்டுமனையை விற்பனை செய்ய சியாமளா திட்டமிட்டார். இதற்கான ஏற்பாடுகளைச் செய்தபோது, அந்த நிலம் ஏற்கெனவே வேறொருவருக்கு கைமாறியிருப்பது தெரியவந்து அதிர்ச்சியடைந்தார்.. அந்த நிலத்தை விற்பனை செய்தது யார், எப்படி பத்திரப்பதிவு நடந்தது என்று அவர் விசாரித்தார். அப்போதுதான் இறந்துபோன முரளியின் அடையாளத்தை வேறொருவர் பயன்படுத்தியதாகக் கூறப்படும் மோசடி வெளிச்சத்துக்கு வந்தது.
பத்திரப்பதிவு - சொத்து
முரளி உயிருடன் இருப்பதுபோல இன்னொரு நபரை அழைத்து சென்று ஆள்மாறாட்டம் செய்துள்ளனர். இதன் மூலம் அந்த வீட்டுமனையை உஷா என்பவருக்கு கடந்த பிப்ரவரி மாதம் விற்பனை செய்துள்ளனர். இதற்கான பத்திரப்பதிவும் நடைபெற்றுள்ளது. சுமார் ரூ.50 லட்சம் மதிப்புள்ள சொத்து இவ்வாறு விற்கப்பட்டதாகக் கூறப்படுகிறது.
தனக்கு சேர வேண்டிய சொத்து வேறொருவருக்கு விற்கப்பட்டிருப்பதை அறிந்த சியாமளா, ஆவடி போலீசில் புகார் கொடுத்தார். ஆவடி போலீஸ் கமிஷனர் செந்தில்குமார் இந்தப் புகார் தொடர்பாக நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டார். இதையடுத்து நில அபகரிப்பு தடுப்பு பிரிவு இன்ஸ்பெக்டர் பாலன் தலைமையில் விசாரணை தொடங்கியது.
3 பேரை தூக்கிய போலீஸ்
விசாரணையில் உஷா, அவரது கணவர் குமார் மற்றும் அவர்களுடன் தொடர்புடைய வெற்றிவேல், ஜெயகுமார், அசன்அலி ஆகியோர் இந்தச் சம்பவத்தில் கூட்டாகச் செயல்பட்டதாக போலீசார் தெரிவித்தனர்.
இதையடுத்து குமார் (35), அவரது மனைவி உஷா (35), வெற்றிவேல் (42) ஆகிய 3 பேரை போலீசார் கைது செய்தனர். இந்த வழக்கில் தொடர்புடையதாகக் கூறப்படும் ஜெயகுமார், அசன்அலி ஆகிய இருவரும் இதுவரை பிடிபடவில்லை. அவர்களைத் தேடும் பணி தொடர்ந்து நடைபெற்று வருகிறது.
எப்போதுமே சொத்து வாங்கும்போது கூடுதல் விழிப்புடன் இருக்க வேண்டியிருக்கிறது.. இறந்துபோன ஒருவரின் அடையாளத்தைப் பயன்படுத்தி அவரது சொத்தையே விற்பனை செய்ததாக எழுந்துள்ள இந்தப் புகார், சொத்து உரிமை தொடர்பான ஆவணங்களை சரிபார்ப்பதன் அவசியத்தை மீண்டும் பொதுமக்களின் கவனத்துக்குக் கொண்டு வந்துள்ளது. குறிப்பாக, வாரிசு சொத்துகளை வாங்கும்போது உரிமையாளர் விவரங்களையும், பத்திரப்பதிவு தொடர்பான தகவல்களையும் முழுமையாகச் சரிபார்ப்பது முக்கியம்.


Click it and Unblock the Notifications
