பெண் கலெக்டருக்கே இப்படி ஒரு சூழலா? தமிழகம் கண்டிராத சம்பவம்! தவெக அரசை விளாசிய அண்ணாமலை
சென்னை: மாவட்டத்தின் நிர்வாகத் தலைமைப் பொறுப்பில் இருக்கும் ஒரு பெண் ஐஏஎஸ் அதிகாரிக்கே இத்தகைய சூழல் ஏற்பட்டுள்ள செய்தி, தமிழகம் இதுவரை கண்டிராத ஒன்று என அண்ணாமலை கண்டனம் தெரிவித்துள்ளார். கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியர், டிவிகே எம்.எல்.ஏ அருள் விக்னேஷ் மீது புகார் கொடுத்துள்ள நிலையில் இவ்விவகாரத்தில் வெளிப்படையாக விசாரித்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டியது தமிழக அரசின் கடமை என அண்ணாமலை கூறியுள்ளார்.
கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியராக இருக்கும் ஜேஇ பத்மஜாவுக்கு, தவெக எம்எல்ஏ அருள் விக்னேஷ் தனது வாட்ஸ்அப் எண்ணிலிருந்து ஆபாச குறுஞ்செய்திகளை அனுப்பியதாகவும், அவரது அரசு இல்லத்திற்குள் அத்துமீறி நுழைய முயன்றதாகவும் கடந்த சில வாரங்களாகத் தமிழ்நாடு அரசியலில் பெரும் சர்ச்சை வெடித்து இருந்தது. இது தொடர்பாக விசாரணை நடத்துமாறு எதிர்க்கட்சிகளும் தமிழக அரசுக்கு கோரிக்கை விடுத்து வந்தன.

ஆனால் புகார் இன்றி எப்படி விசாரிக்க முடியும் என தவெக அமைச்சர்கள் கூறி வந்தனர். இந்நிலையில், கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சிய டிவிகே எம்.எல்.ஏ மீது மாவட்ட எஸ்பியிடம் புகார் அளித்துள்ளதாக தி இந்து ஆங்கில நாளேடு செய்தி வெளியிட்டுள்ளது. அந்தப் புகாரில், தவெக எம்எல்ஏ அருள் விக்னேஷ் தன்னிடம் தகாத முறையில் அணுகினார் என்றும், தேவையற்ற மற்றும் ஆபாசமான குறுஞ்செய்திகளை அனுப்பி தொல்லை கொடுத்தார் என்றும் குற்றம் சாட்டியுள்ளதாகக் கூறப்படுகிறது.
இதன்படி கள்ளக்குறிச்சி மாவட்ட காவல்துறை, எம்.எல்.ஏ அருள் விக்னேஷ் மீது தமிழ்நாடு பெண் வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது. எனினும் இவ்விவகாரம் குறித்து மூத்த காவல்துறை அதிகாரிகளின் அதிகாரப்பூர்வ கருத்துகள் வெளியாகவில்லை.
இவ்வளவு நாட்களாக மாவட்ட ஆட்சியர் புகார் கொடுக்கவில்லை என்று ஆளும் தவெக அமைச்சர்களும், அரசுத் தரப்பும் கூறி வந்த நிலையில், தற்போது மாவட்ட ஆட்சியரே எஸ்பியிடம் புகார் கொடுத்ததாக தி இந்தி ஆங்கில நாளேடு செய்தி வெளியிட்டதை அடுத்து திமுக, அதிமுக, பாஜக உள்ளிட்ட கட்சிகள் அருள் விக்னேஷ் மீது நடவடிக்கை எடுக்க வேண்டுமென கூறி வருகின்றன. வி த லீடர் அமைப்பின் தலைவர் அண்ணாமலையும் தமிழ்நாடு கண்டிராத சம்பவம் இது என கூறியுள்ளார்.
அண்ணாமலை தனது எக்ஸ் தளத்தில் கூறியிருப்பதாவது:- கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியர், கள்ளக்குறிச்சி தவெக சட்டமன்ற உறுப்பினர் மீது காவல்துறையிடம் புகார் அளித்துள்ளதாகவும், அந்தப் புகாரில் "Inappropriate Advances" மற்றும் "Unwarranted Messages" குறித்த குற்றச்சாட்டுகள் இடம்பெற்றுள்ளதாகவும் The Hindu நாளிதழில் வெளியாகியுள்ள செய்தி மிகுந்த அதிர்ச்சியை ஏற்படுத்துகிறது. மாவட்டத்தின் நிர்வாகத் தலைமைப் பொறுப்பில் இருக்கும் ஒரு பெண் ஐஏஎஸ் அதிகாரிக்கே இத்தகைய சூழல் ஏற்பட்டுள்ள செய்தி, தமிழகம் இதுவரை கண்டிராத ஒன்று.
இந்த விவகாரத்தில் நீதிமன்றத்தில் எழுப்பப்பட்டுள்ள கேள்விகளும், நாளிதழில் வெளியாகியுள்ள தகவல்களும் மிகுந்த கவனத்துடன் விசாரிக்கப்பட வேண்டியவை. குற்றச்சாட்டுகளின் உண்மைத்தன்மையை எவ்வித அரசியல் தலையீடுமின்றி, வெளிப்படையாக விசாரித்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டியது தமிழக அரசின் கடமை.
இந்த விவகாரத்தில் உரிய விசாரணையும் கடுமையான நடவடிக்கையும் எடுக்கத் தவறினால், அரசு நிர்வாகத்தின் மீதும், குறிப்பாகப் பெண்களின் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டிய தமிழக அரசின் மீதும் மக்களுக்கு இருக்கும் நம்பிக்கை கேள்விக்குறியாகிவிடும்.. என்று கூறியுள்ளார்.




Click it and Unblock the Notifications
