கள்ளக்குறிச்சி த.வெ.க. சட்டமன்ற உறுப்பினரைக் கைது செய்து விசாரிக்க வேண்டும்.. ஸ்டாலின்
சென்னை: ஆளுங்கட்சியைச் சேர்ந்த எம்எல்ஏவின் ஒழுங்கீனமான செயல் குறித்து மாவட்ட ஆட்சியர் முறையாகப் புகார் அளித்திருக்கும் செய்தி நாளேட்டில் வந்துள்ளது. இனியும் தாமதிக்காமல், கள்ளக்குறிச்சி த.வெ.க. சட்டமன்ற உறுப்பினர் அருள் விக்னேஷை கைது செய்து விசாரிக்க வேண்டும் என்று முன்னாள் முதல்வரும், திமுக தலைவருமான மு.க.ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார்.
திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள சமூக வலைதளப்பதிவில் கூறுகையில், "ஆளுங்கட்சியைச் சேர்ந்த MLA-வின் ஒழுங்கீனமான செயல் குறித்து மாவட்ட ஆட்சியர் முறையாகப் புகார் அளித்திருக்கும் செய்தி 'தி இந்து' நாளேட்டில் இன்று வெளியாகியிருக்கிறது. இத்தகைய ஒரு சம்பவம் நடைபெற்றதாக பல வாரங்களுக்கு முன்பு செய்திகள் வெளிவரத் தொடங்கியபோதே, முதலமைச்சரும் தலைமைச் செயலாளரும் மாவட்ட ஆட்சியரை அழைத்துப் பேசி இருக்க வேண்டும். அவருக்கு உறுதுணையாக அரசு இருக்கும் என்ற நம்பிக்கையை அளித்திருக்க வேண்டும்.

எம்எல்ஏ மீது சட்ட நடவடிக்கை எடுத்திருக்க வேண்டும்
தவறிழைத்த சட்டமன்ற உறுப்பினரைக் கண்டித்து, சட்டநடவடிக்கை எடுத்திருக்க வேண்டும். பெண்களின் பாதுகாப்பிற்கும், ஆட்சி மாண்பிற்கும் முக்கியத்துவம் அளிக்கும் எந்த ஒரு அரசும் இதைத்தான் செய்திருக்கும். ஆனால், தன் கட்சி சட்டமன்ற உறுப்பினரையும் தன் மைனாரிட்டி அரசையும் காப்பாற்றினால் போதும் என்ற நோக்கத்தில் இவர்கள் இந்த சம்பவத்தை மறைக்க அனைத்து வகைகளிலும் முயற்சித்ததால்தான், பாதிக்கப்பட்ட பெண் அலுவலர் முறையாகப் புகார் அளிக்கவே இத்தனை நாட்கள் ஆகியிருக்கின்றன.
முட்டுக்கொடுத்தது கேவலத்தின் உச்சம்
ஒரு மாவட்ட ஆட்சியருக்கே இந்த நிலைமை என்றால் தமிழ்நாட்டில் வாழும் சராசரிப் பெண்களின் நிலை எப்படி இருக்கும் என்ற கேள்வி கவலை அளிக்கிறது. இதில், பதவிக்கு மாரடிக்கும் சில கட்சித் தலைவர்கள் பாதிக்கப்பட்டவரின் பக்கம் நிற்காமல், எம்எல்ஏ பாவம் என்று முட்டு கொடுத்தது கேவலத்தின் உச்சம்.
கைது செய்து விசாரிக்க வேண்டும்
பல்வேறு வகைகளிலும் இந்த சம்பவம் அரசின் கவனத்திற்கு வந்த பிறகும், இந்த அரசு நடவடிக்கை எடுக்காமல் நீதிமன்றத்திலும் பொய் சொல்கிறார்கள் என்பது கடும் கண்டனத்துக்குரியது. பாலியல் குற்றங்களிலும், போதைப் பொருள் கடத்தலிலும், கொள்ளைச் சம்பவங்களிலும் த.வெ.க.வினர்தான் அதிகம் ஈடுபடுகிறார்கள் என நாங்கள் தொடர்ந்து சொல்லி வருவது ஒவ்வொரு நாளும் உண்மையாகி வருகிறது. இனியும் தாமதிக்காமல், கள்ளக்குறிச்சி த.வெ.க. சட்டமன்ற உறுப்பினரைக் கைது செய்து விசாரிக்க வேண்டும்" இவ்வாறு கூறியுள்ளார்.
தமிழக அரசு தகவல்
முன்னதாக தவெக எம்எல்ஏ அருள் விக்னேஷ் மீது நடவடிக்கைக எடுக்கக்கோரி சென்னையைச் சேர்ந்த வழக்குரைஞர் ஆர். திரிசூலி என்பவர் ரிட் மனு ஒனறை உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்திருந்தார். அந்த மனு சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி வி. லட்சுமிநாராயணன் முன்பு நேற்று (நவ. 23) விசாரணைக்கு வந்தது. அப்போது தமிழக அரசுத் தரப்பில் ஆஜரான மாநில தலைமைக் குற்றவியல் வழக்குரைஞர் ஆர். ஜான் சத்யன், "கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியரிடமிருந்து மாநிலத் தலைமைச் செயலர் எம். சாய்குமாருக்கோ அல்லது காவல்துறைக்கோ இதுவரை எந்தவொரு புகாரும் வரவில்லை" என்று கூறியிருந்தார்.
கலெக்டர் எஸ்பியிடம் புகார்
இப்படி தமிழகஅரசு தரப்பில் தெரிவிக்கப்பட்ட நிலையில், கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியர் பத்மஜா, திங்கள்கிழமை பிற்பகல் மாவட்டக் காவல் கண்காணிப்பாளரிடம் எம்.எல்.ஏ அருள் விக்னேஷுக்கு எதிராக எழுத்துப்பூர்வமான புகார் மனுவை நேரில் ஒப்படைத்துள்ளதாக இந்து நாளேட்டில் செய்திகள் வந்துள்ளது.
தகாத முறையில் நடந்து கொண்டார்
அந்தப் புகாரில், தவெக எம்.எல்.ஏ அருள் விக்னேஷ் தன்னிடம் தகாத முறையில் அணுகியதாகவும், தேவையற்ற குறுஞ்செய்திகளை அனுப்பித் தொல்லை கொடுத்ததாகவும் மாவட்ட ஆட்சியர் குற்றம் சாட்டியுள்ளதாகக் கூறப்படுகிறது. இந்தப் புகாரின் அடிப்படையில் எம்.எல்.ஏ மீது பெண் வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் காவல்துறை வழக்குப் பதிவு செய்துள்ளதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளது. இந்த செய்தியை சுட்டிக்காட்டி தான் ஸ்டாலின், தவெக எம்எல்ஏ அருள் விக்னேஷை கைது செய்ய வேண்டும் என்று கோரிக்கை வைத்துள்ளார்.


Click it and Unblock the Notifications
