கள்ளக்குறிச்சி தவெக எம்எல்ஏவை "பாவம்" என்ற மாணிக்கம் தாகூர்.. திடீர் பல்டி! ஆக்சன் எடுக்க கோரிக்கை!
கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியருக்கு ஆபாச குறுஞ்செய்திகளை அனுப்பியதாகக் கூறப்படும் விவகாரத்தில், இதுவரை ஆளும் தமிழக வெற்றிக் கழகத்தின் எம்.எல்.ஏ சி. அருள் விக்னேஷுக்கு ஆதரவாகப் பேசி வந்த தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டித் தலைவர் மாணிக்கம் தாகூர், தற்போது திடீரெனத் தனது நிலைப்பாட்டை மாற்றிக்கொண்டு அவருக்கு எதிராகக் கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தியுள்ளார்.
மாவட்ட ஆட்சியரே காவல்துறையில் புகார் அளித்துள்ள நிலையில், கூட்டணி கட்சியான தவெக அரசுக்கு எதிராக மாணிக்கம் தாகூர் முதல்முறையாகக் குரல் கொடுத்திருப்பது தமிழக அரசியலில் புதிய பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

அன்று 'பாவம்' என்ற மாணிக்கம் தாகூர்
கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியர் ஜே.இ. பத்மஜாவுக்கு, கள்ளக்குறிச்சி தொகுதி தவெக எம்.எல்.ஏ அருள் விக்னேஷ் தனது வாட்ஸ்அப் எண்ணிலிருந்து ஆபாச குறுஞ்செய்திகளை அனுப்பியதாகவும், அவரது அரசு இல்லத்திற்குள் அத்துமீறி நுழைய முயன்றதாகவும் நவம்பர் மாதத் தொடக்கத்தில் சர்ச்சை வெடித்தது.
இந்த விவகாரம் பூதாகரமான போது, ஆளும் தவெகவின் கூட்டணி கட்சியான காங்கிரஸின் மாநிலத் தலைவர் மாணிக்கம் தாகூர் எம்.எல்.ஏ அருள் விக்னேஷுக்கு ஆதரவாகக் களமிறங்கினார். கடந்த நவம்பர் 11-ஆம் தேதி செய்தியாளர்களிடம் பேசிய அவர், மிகவும் பிற்படுத்தப்பட்ட சமூகத்திலிருந்து வந்த முதல்முறை எம்.எல்.ஏ-வான அருள் விக்னேஷ் பாவம். எந்த ஆதாரமும் இல்லாமல் வாட்ஸ்அப் வதந்திகளை வைத்து அவர் மீது மீடியா விசாரணை நடத்துவது நியாயமல்ல. சம்பந்தப்பட்ட எம்.எல்.ஏ-வே தனது போனையும், சிசிடிவி காட்சிகளையும் சோதனை செய்யுமாறு பாவமாகச் சொல்கிறார்" என்று கூறி அவரைப் பாதுகாக்கும் வகையில் பேசியிருந்தார். காங்கிரஸ் எம்.பி ஜோதிமணி உள்ளிட்டோர் விசாரணை நடத்த வேண்டும் எனக் கூறியபோதும், மாணிக்கம் தாகூர் தவெகவுக்கு ஆதரவாகவே நின்றார்.
வழக்கை மாற்றிய மாவட்ட ஆட்சியரின் புகார்
இதனிடையே, சென்னை உயர்நீதிமன்றத்தில் இந்த விவகாரம் தொடர்பாகத் தொடரப்பட்ட வழக்கில், மாவட்ட ஆட்சியரிடமிருந்து எந்தப் புகாரும் வரவில்லை" என அரசுத் தரப்பு திங்கட்கிழமை (நவம்பர் 23) காலை தெரிவித்திருந்தது. ஆனால், அதே நாளில் பிற்பகலில் கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியர் நேரடியாக மாவட்ட காவல் கண்காணிப்பாளரிடம் எம்.எல்.ஏ அருள் விக்னேஷுக்கு எதிராக எழுத்துப்பூர்வமான புகாரை அளித்தார். அதன் பேரில் எம்.எல்.ஏ மீது பெண் வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளதாகத் தகவல்கள் வெளியாகின.

திடீர் பல்டி அடித்த மாணிக்கம் தாகூர்
மாவட்ட ஆட்சியரே நேரடியாகப் புகார் அளித்துவிட்ட செய்தி நாளிதழ்களில் வெளியானதைத் தொடர்ந்து, இதுவரை எம்.எல்.ஏ-வுக்கு ஆதரவாகப் பேசி வந்த மாணிக்கம் தாகூர் தனது நிலைப்பாட்டை முழுமையாக மாற்றிக்கொண்டு அறிக்கை வெளியிட்டுள்ளார்.
இது குறித்து அவர் வெளியிட்டுள்ள பதிவில் கூறியிருப்பதாவது
நாளிதழில் வெளியாகியுள்ள தகவல்கள் அதிர்ச்சியளிக்கின்றன. பாதிக்கப்பட்ட பெண் அதிகாரியே புகார் அளித்துள்ள நிலையில், கள்ளக்குறிச்சி சட்டமன்ற உறுப்பினர் அருள் விக்னேஷ் மீது உரிய சட்டப்பிரிவுகளின் கீழ் உடனடியாக வழக்குப் பதிவு செய்து, எவ்வித தாமதமுமின்றி சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும்.
அரசுப் பொறுப்பில் இருக்கும் ஒரு பெண் அதிகாரியின் கண்ணியத்தையும் பாதுகாப்பையும் உறுதி செய்வது அரசின் கடமை. அதிகாரம் படைத்தவர்கள் என்பதற்காக யாருக்கும் சட்டத்திலிருந்து விலக்கு அளிக்கப்படக் கூடாது. கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியருக்கு நீதி கிடைக்க, அரசு உடனடியாகத் தலையிட்டு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
கூட்டணிக்குள் சலசலப்பு
தமிழ்நாட்டில் தவெக தலைமையிலான ஆட்சி அமைந்த பிறகு, கூட்டணி கட்சியான காங்கிரஸ் தலைமை முதல்முறையாக ஆளுங்கட்சிக்கு எதிராகத் தனது கண்டனத்தைப் பதிவு செய்துள்ளது. "ஆதாரம் இல்லை, எம்.எல்.ஏ பாவம்" என்று பேசிய மாணிக்கம் தாகூரே இப்போது "அதிகாரம் படைத்தவர்களுக்குச் சட்டத்திலிருந்து விலக்கு அளிக்கக் கூடாது" எனக் கூறியிருப்பது, ஆளும் தவெக தலைமைக்குப் பெரும் நெருக்கடியையும், கூட்டணிக்குள் சலசலப்பையும் ஏற்படுத்தியுள்ளது.


Click it and Unblock the Notifications
