தண்ணீர் எப்போதும் கெட்டுப்போகாதே.. அப்புறம் ஏன் வாட்டர் பாட்டிலில் 6 மாதத்தில் Best Before தேதி?
டெல்லி: கடந்த இரு நாட்களாகவே பிஸ்லெரி குறித்த சர்ச்சை தான் சமூக வலைத்தளங்களில் உள்ளது. இது தண்ணீர் பாட்டில்களின் தரம் குறித்த விவாதத்தையும் கிளப்பியுள்ளது. இது ஒரு பக்கம் இருக்க பொதுவாக தண்ணீர் என்பது கெட்டுப்போகாத நிலையில், குடிநீர் பாட்டில்களில் Best Before ஏன் போடப்படுகிறது என்ற கேள்வி வரும். அதற்கா பதிலை நாம் பார்க்கலாம்.
சமீபத்தில் பிஸ்லெரி குடிநீர் தொடர்பாக சர்ச்சை எழுந்தது. அதாவது பிஸ்லெரி நிறுவனத்தின் கோவா ஆலையில் தயாரிக்கப்பட்ட குடிநீர் மாதிரியில் நிர்ணயிக்கப்பட்ட அளவைவிட அதிகமாக புரோமேட் இருப்பதாக முதற்கட்டப் பரிசோதனையில் கண்டறியப்பட்டது. மேல்முறையீட்டுக்குப் பிறகு நடத்தப்பட்ட பரிசோதனையில் பாலிசைக்ளிக் அரோமேட்டிக் ஹைட்ரோகார்பன்கள் இருப்பதாக கூறப்பட்டு இருந்தது.

பாட்டில் குடிநீர்
தன் மீதான குற்றச்சாட்டுகளை மறுத்தாலும் கூட இது நமது ஊரில் பாட்டில் குடிநீர் பாதுகாப்பு குறித்து விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது. இது ஒரு பக்கம் இருக்க கடையில் நாம் தண்ணீர் பாட்டில் வாங்கும்போது அதன் மூடிக்கு அருகே 'Best Before' என்ற தேதியை பார்த்திருப்பீர்கள். பால், ஜூஸ், உணவு பொருட்கள் போன்றவை காலப்போக்கில் கெட்டுப்போகும் என்பது புரிகிறது. ஆனால், தண்ணீருக்கு எதற்காக காலாவதி தேதி? தண்ணீர் தான் கெட்டுப்போகாதே என்ற கேள்வி பலருக்கும் எழுந்திருக்கும்.
எதற்காக?
உண்மையை சொல்ல வேண்டும் என்றால் தண்ணீர் தானாகக் கெட்டுப்போவதில்லை. அதில் பாக்டீரியா, பூஞ்சை போன்ற நுண்ணுயிரிகள் வளர்வதற்கு தேவையான சர்க்கரை, கொழுப்பு, புரதம் போன்றவை கிடையாது. சுத்தமான, காற்று புகாத சூழலில் வைக்கப்படும் தண்ணீர் நீண்ட காலத்துக்கு பாதுகாப்பாகவே இருக்கும். அப்படியிருக்க பாட்டிலில் தண்ணீருக்கு மட்டும் ஏன் 6 மாதங்களில் 'Best Before' தேதி இருக்கிறது? இதற்கான காரணம் தண்ணீர் இல்லை. அதை அடைத்து வைக்கும் பிளாஸ்டிக் பாட்டில் தான். உணவுப் பாதுகாப்பு விதிகள், சேமிப்பு மற்றும் விற்பனை நடைமுறைகள் காரணமாகவே இந்த தேதி போடப்படுகிறது.
தண்ணீருக்கு அல்ல
PET ஒருமுறை பயன்படுத்தும் தண்ணீர் பாட்டில்களில் தான் குடிநீர் விற்கப்படுகிறது. காலப்போக்கில் இந்த பிளாஸ்டிக்கின் தன்மை மாறக்கூடும். குறிப்பாக வெப்பம், சூரிய ஒளி ஆகியவை இதன் மீது நேரடியாக படும்போது பிளாஸ்டிக்கில் இருந்து மிக சிறிய அளவிலான கெமிக்கல் தண்ணீரில் கலக்க வாய்ப்புள்ளது. ஆண்டிமனி போன்ற கெமிக்கல்கள், நுண்ணிய பிளாஸ்டிக் துகள்கள் இப்படி கலக்கும். இதனால் தண்ணீரின் சுவை, வாசனை மாறக்கூடும்.
பிளாஸ்டிக் தண்ணீர் பாட்டில்கள் நேரடியாக சூரிய ஒளியில் படுவது போல வைப்பது அல்லது வெப்பமான காருக்குள் நீண்ட நேரம் வைத்திருப்பது அதன் தரத்தை கடுமையாக பாதிக்கும். இதனால் தண்ணீரின் சுவை தரம் மாறும்!
விதிகள்
இந்தியாவில் பாட்டிலில் அடைக்கப்பட்ட குடிநீர் உள்ளிட்ட உணவு மற்றும் டிரிங்ஸ்களுக்கு உணவு பாதுகாப்பு விதிகளின்படி குறிப்பிட்ட தேதி காலாவதி தேதியாக குறிப்பிட வேண்டும். இதன் காரணமாகவே உற்பத்தியாளர்கள் பாட்டில்களில் 'Best Before' தேதியை அச்சிடுகின்றனர். தண்ணீர் தானாக கெட்டுப்போகாவிட்டாலும், அதன் தரத்தை உறுதி செய்ய இந்த நடைமுறைகளை பயன்படுத்துகிறார்கள்.
இந்த தேதிகள் இருப்பதால் கடைகளிலும் முதலில் பழைய ஸ்டாக்குகளை விற்பனை செய்துவிடுவார்கள். பழையது என்றால் காலாவதி ஆனது இல்லை. இருக்கும் ஸ்டாக்கிலேயே பழைய பாட்டிலை விற்பார்கள். அது அவர்களின் பிஸ்னஸுக்கு உதவும். ஏதேனும் ஒரு பேட்சில் மாசு இருப்பது கண்டறியப்பட்டால், அதன் தயாரிப்பு தேதி மற்றும் பேட்ச் எண்ணை வைத்து அந்த பாட்டில்களை அடையாளம் கண்டு ஈஸியாக வாபஸ் பெறலாம்.
குடிக்க வேண்டாம்
நம்ம ஊரில் எப்போதுமே சூரிய ஒளி படாமல் பிளாஸ்டிக் பாட்டில்களை வைத்திருப்பார்கள் என சொல்ல முடியாது. பல இடங்களில் வெயிலிலேயே அவை இருப்பதை நாம பார்த்திருக்கிறோம். இதனால் 'Best Before' தேதியைக் கடந்துவிட்ட தண்ணீரை குடிக்காமல் இருப்பது நல்லது!
அதாவது தண்ணீருக்கு இயல்பாகக் காலாவதி தேதி இல்லை என்றாலும், அதை அடைத்து வைக்கும் பாட்டிலின் தரம், சேமிப்பு முறை, உணவுப் பாதுகாப்பு விதிகள் ஆகியவை தான் 'Best Before' தேதி போட காரணமாக இருக்கிறது.


Click it and Unblock the Notifications
