புதினுக்கு இடியை இறக்கிய ஜெலன்ஸ்கி.. உக்ரைன் தாக்குதலில் ரஷ்யா போர்க்கப்பல் மூழ்கடிப்பு.. அதிர்ந்த லிபியா
கீவ்: உக்ரைனில் இருந்து 2,700 கி. மீட்டர் தொலைவில் உள்ள லிபியாவின் துறைமுகத்தில் எரிபொருள் நிரப்புவதற்காக நிறுத்தப்பட்டு இருந்த ரஷ்ய போர்க்கப்பலை டிரோன் தாக்குதலால், மூழ்கடித்து இருப்பதாக உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி தெரிவித்துள்ளார். உக்ரைனின் இந்த தாக்குதலால் இருநாடுகளுக்கும் இடையேயான போர் வட ஆப்பிரிக்கா வரை விரிவடையுமோ? என்ற அச்சம் எழுந்துள்ளது.
உக்ரைனுக்கும் ரஷ்யாவுக்கும் இடையேயான மோதல் 4 ஆண்டுகளை கடந்தும் தொடர்ந்து நீடித்து வருகிறது. சமீப வாரங்களாக இருநாடுகளுக்கும் இடையேயான தாக்குதல் அதிகரிக்க தொடங்கியுள்ள நிலையில், ரஷ்யாவுக்கு சொந்தமான கடற்படை கப்பல் ஒன்றை உக்ரைன் டிரோன் மூலம் தாக்கி மூழ்கடித்துள்ளது.

பயங்கர சத்தத்துடன் வெடித்து சிதறிய கப்பல்
லிபியா கடற்பகுதியில் நின்று கொண்டிருந்த ரஷ்யாவுக்கு சொந்தமான மெர்குரி என்ற கப்பலை டிரோன்களை கொண்டு தாக்கி அழித்ததாக உக்ரைன் தெரிவித்துள்ளது. உக்ரைனில் இருந்து 2,700 கிலோ மீட்டர் தொலைவில் கப்பல் நிறுத்தப்பட்டு இருந்த நிலையில், உக்ரைன் முற்றிலும் உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட டிரோன்களை கொண்டு ரஷ்ய போர்க்கப்பலை தாக்கியுள்ளது. இதில், கப்பலில் தீ பிடித்ததுடன், பயங்கர சத்தத்துடன் வெடித்துள்ளது.
தொடர்ந்து கப்பல் மூழ்க தொடங்கியது. இது தொடர்பான சேட்டிலைட் காட்சிகளும் வெளியாகியுள்ளன. இந்த தாக்குதல் குறித்து உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி தனது எக்ஸ் தளத்தில் வெலியிட்டுள்ள பதிவில் கூறியிருப்பதாவது:-
7 கடற்படை டிரோன்கள் பயன்படுத்தப்பட்டது
"ரஷ்யாவின் போருக்கு பதிலடி கொடுக்கும் வகையில் உக்ரைன் படை, மிகச்சிறந்த நடவடிக்கையை மேற்கொண்டுள்ளது. இந்த நடவடிக்கையை வெற்றிகரமாக செயல்படுத்திய உக்ரைன் வீரர்கள் மற்றும் பாதுகாப்புப் படையினருக்கு நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன். ரஷ்யாவின் அத்துமீறலுக்கு நாங்கள் பதிலடி கொடுப்போம். உக்ரைனிய ஆயுதங்களை நாங்கள் மேம்படுத்தி வருகிறோம்.
உக்ரைனில் தயாரிக்கப்பட்ட 7 கடற்படை டிரோன்கள் இந்த ஆபரேஷனுக்கு பயன்படுத்தப்பட்டது. ரஷ்யா ஆயுதங்களை கொண்டு செல்ல பயன்படுத்தி வந்த எம்வி அங்காரா கப்பல் மீது தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. ka 27 ராணுவ ஹெலிகாப்டரும் அழிக்கப்பட்டது" என்று கூறியுள்ளார்.
லிபியாவின் துறைமுக நகர்
கருங்கடல் பகுதியையும் தாண்டி சுமார் 2,700 கிலோ மீட்டர் தொலைவில் நின்ற கப்பல் மீது உக்ரைன் தாக்குதல் நடத்தியிருக்கிறது. லிபியாவின் துறைமுக நகரான பெங்காசியில் எரிபொருள் நிரப்புவதற்காக ரஷ்ய போர்க்கப்பல் நிறுத்தப்பட்டுள்ளது. ரஷ்யாவுக்கு திரும்ப இந்த கப்பல் திட்டமிட்டு இருந்த நிலையில், தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. பெங்காசியில் உள்ள துறைமுகம் லிபியாவின் தேசிய ராணுவத்தின் கட்டுப்பாட்டில் உள்ளது. ரஷ்யாவுடன் நெருக்கமான உறவை கடைப்பிடித்து வரும் நிலையில், அந்த நாட்டின் துறைமுகத்தில் வைத்தே உக்ரைன் தாக்கியுள்ளது.
வட ஆப்பிரிக்கா வரை பரவும் போர்?
இது குறித்து லிபியாவின் ராணுவ அதிகாரிகள் கூறுகையில், "கப்பலை நோக்கி சில உக்ரைன் டிரோன்கள் ஏவப்பட்டு இருந்தன. அவற்றில் 4 டிரோன்களை இடைமறித்து அழித்தோம். 2 டிரோன்கள் போர்க்கப்பல்களை தாக்கின. இந்த டிரோன்கள் எப்படி இலக்கை எட்டின? எப்படி ஏவப்பட்டன? என்பது பற்றி தெளிவாக தெரியவில்லை. ரஷ்யாவின் மெர்குரி கப்பல் மீது உக்ரைன் தாக்குதல் நடத்திய நிலையில், ரஷ்யா - உக்ரைன் போர் வட ஆப்பிரிக்கா வரை பரவக்கூடுமோ என்ற அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.
பெங்காசி அருகே நிறுத்தப்பட்டு இருந்த கப்பல் மீதான தாக்குதலை லிபியாவில் உள்ள ஐக்கிய நாடுகள் அவையின் உதவிகர திட்டக்குழுவும் கண்டித்துள்ளது. ரஷ்யா - உக்ரைன் போரை நிறுத்த பல கட்ட முயற்சிகள் நடைபெற்று அனைத்தும் தோல்வி அடைந்துள்ளன இத்தகைய சூழலில், ரஷ்ய போர்க்கப்பலை உக்ரைன் தாக்கி மூழ்கடித்து இருப்பது புதிய பதற்றத்தை ஏற்படுத்திஉள்ளது.





Click it and Unblock the Notifications
