ஆக்கிரமிக்கப்பட்ட அரசு நிலத்திலிருந்து.. சாஸ்த்ரா பல்கலைக்கழகத்தை வெளியேற்ற உச்ச நீதிமன்றம் தடை

Subscribe to Oneindia Tamil

தஞ்சாவூர்: தஞ்சாவூர் மாவட்டம் திருமலைசமுத்திரம் பகுதியில் இயங்கி வரும் பிரபல தனியார் நிகர்நிலைப் பல்கலைக்கழகமான சாஸ்த்ரா பல்கலைக்கழகத்திற்கு எதிராகத் தமிழக அரசு எந்தவிதமான கடுமையான நடவடிக்கைகளையும் எடுக்கக் கூடாது என உச்ச நீதிமன்றம் அதிரடித் தடை விதித்துள்ளது. இந்த விவகாரத்தில் சென்னை உயர் நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவிற்கும் உச்ச நீதிமன்றம் இடைக்காலத் தடை விதித்து உத்தரவிட்டுள்ளது.

thanjavur

வழக்கின் பின்னணி என்ன?

தஞ்சாவூர் திருமலைசமுத்திரம் பகுதியில் சாஸ்த்ரா பல்கலைக்கழகம் செயல்பட்டு வருகிறது. இந்தப் பல்கலைக்கழக வளாகத்தை ஒட்டியுள்ள சுமார் 31.37 ஏக்கர் அரசு நிலத்தை பல்கலைக்கழக நிர்வாகம் ஆக்கிரமித்துள்ளதாகத் தமிழக அரசு தரப்பில் குற்றம் சாட்டப்பட்டது. அந்த குறிப்பிட்ட அரசு நிலம் திறந்தவெளிச் சிறைச்சாலை அமைப்பதற்காக ஒதுக்கப்பட்ட இடம் எனக் கூறி, அங்கிருந்து பல்கலைக்கழகத்தை வெளியேற்றத் தமிழக அரசு நடவடிக்கை எடுத்தது.

இதை எதிர்த்துத் தொடரப்பட்ட வழக்குகளில், சாஸ்த்ரா பல்கலைக்கழகத்தை அந்த நிலத்தில் இருந்து காலி செய்ய வேண்டும் என சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. உயர் நீதிமன்றத்தின் இந்த உத்தரவை எதிர்த்து சாஸ்த்ரா பல்கலைக்கழக நிர்வாகம் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தது.

உச்ச நீதிமன்றத்தின் முந்தைய நிலைப்பாடு

கடந்த ஜனவரி 15-ஆம் தேதி இந்த வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்றம், பல்கலைக்கழகத்தை வெளியேற்றும் நடவடிக்கைக்கு இடைக்காலத் தடை விதித்திருந்தது. அப்போது கருத்து தெரிவித்த நீதிபதிகள், அந்த இடத்தில் ஒரு கல்வி நிறுவனம் இயங்கி வருவதையும், அது பொதுமக்களுக்குப் பயனளிக்கும் வகையில் செயல்படுவதையும் சுட்டிக்காட்டினர். மேலும், இந்த விவகாரத்தைத் தமிழக அரசு ஒரு கௌரவப் பிரச்சினையாக பார்க்கக் கூடாது என்றும் அறிவுறுத்தினர்.

அதேபோல், இந்தப் பிரச்சினையை சுமுகமாகத் தீர்த்துக் கொள்ளுமாறு உச்ச நீதிமன்றம் யோசனை தெரிவித்தது. ஆக்கிரமிக்கப்பட்டதாகக் கூறப்படும் 31.37 ஏக்கர் நிலத்திற்குப் பதிலாக, வேறு இடத்தில் மாற்று நிலத்தை வழங்கவோ அல்லது அரசு தேர்வு செய்யும் நிலத்திற்குரிய சந்தை மதிப்பிலான தொகையைச் செலுத்தவோ சாஸ்த்ரா பல்கலைக்கழகம் தயாராக இருப்பதாகத் தெரிவிக்கப்பட்டிருந்தது.

நேற்றைய விசாரணையில் நடந்தது என்ன?

இந்த வழக்கு உச்ச நீதிமன்றத் தலைமை நீதிபதி சூர்யா காந்த், நீதிபதி ஜாய்மால்யா பாக்சி மற்றும் நீதிபதி வி. மோகனா ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்தது.

அப்போது தமிழக அரசு சார்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் ஜெய்தீப் குப்தா, சாஸ்த்ரா பல்கலைக்கழகம் வழங்க முன்வந்த மாற்று நிலத்தை ஏற்றுக்கொள்ளத் தமிழக அரசு தயாராக இல்லை எனத் திட்டவட்டமாகத் தெரிவித்தார். இந்த விவகாரத்தில் சுமுகத் தீர்வு காண அரசு விரும்பவில்லை என்றும், அரசுக்குச் சொந்தமான அந்த 31.37 ஏக்கர் நிலத்தைத் திரும்பப் பெறவே அரசு விரும்புவதாகவும் அவர் வாதிட்டார்.

மறுபுறம், சாஸ்த்ரா பல்கலைக்கழகம் சார்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர்கள் முகுல் ரோத்தகி மற்றும் அபிஷேக் சிங்வி ஆகியோர், பல்கலைக்கழகம் மாற்று நிலம் வழங்கத் தயாராக இருந்தும், தமிழக அரசு இந்தப் பிரச்சினையைத் தீர்க்க முன்வரவில்லை எனத் தெரிவித்தனர்.

நீதிபதிகளின் அதிரடி உத்தரவு

இரு தரப்பு வாதங்களையும் கேட்ட தலைமை நீதிபதி சூர்யா காந்த் தலைமையிலான அமர்வு, தமிழக அரசின் நிலைப்பாட்டைப் பதிவு செய்து கொண்டது. தொடர்ந்து, இந்த விவகாரத்தில் சாஸ்த்ரா பல்கலைக்கழகத்தை நிலத்தில் இருந்து வெளியேற்றவோ அல்லது அங்குள்ள கட்டிடங்களை இடிக்கவோ தமிழக அரசு எந்தவிதமான கடுமையான நடவடிக்கைகளையும் எடுக்கக் கூடாது என ஏற்கனவே பிறப்பிக்கப்பட்ட தடையை உறுதி செய்தது.

மேலும், சென்னை உயர் நீதிமன்றம் பிறப்பித்த வெளியேற்ற உத்தரவு மற்றும் அதனுடன் தொடர்புடைய அனைத்து நடவடிக்கைகளுக்கும் உச்ச நீதிமன்றம் தடை விதித்துள்ளது. இந்த மேல்முறையீட்டு மனு மீது தமிழக அரசு விரிவான பதில் மனு தாக்கல் செய்ய நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்ட நீதிபதிகள், வழக்கின் இறுதி விசாரணையைப் பட்டியலிட்டு உத்தரவிட்டனர். உச்ச நீதிமன்றத்தின் இந்த உத்தரவால் சாஸ்த்ரா பல்கலைக்கழகத்திற்குத் தற்காலிக நிம்மதி கிடைத்துள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+