கள்ளக்குறிச்சி தவெக எம்எல்ஏ அருள் விக்னேஷ் கைதாகிறார்? நேரில் வந்த S.I .. குவிக்கப்பட்ட போலீஸ்!
கள்ளக்குறிச்சி: பெண் மாவட்ட ஆட்சியருக்கு ஆபாச மற்றும் தேவையற்ற குறுஞ்செய்திகளை அனுப்பித் தொல்லை கொடுத்ததாக எழுந்த புகாரில், ஆளும் தமிழக வெற்றிக் கழகத்தின் கள்ளக்குறிச்சி தொகுதி எம்.எல்.ஏ சி. அருள் விக்னேஷ் மீது காவல்துறையினர் எப்.ஐ.ஆர் பதிவு செய்துள்ள நிலையில், தற்போது அவரது வீட்டின் முன்பு ஏராளமான போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.
துணை ஆய்வாளர் லோகேஷ்வரன் தலைமையிலான காவல்துறை அதிகாரிகள் குழுவினர் எம்.எல்.ஏ வீட்டில் முகாமிட்டுள்ளதால், அருள் விக்னேஷ் எந்த நேரத்திலும் கைது செய்யப்படலாம் என்ற பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
வீட்டின் முன் குவிக்கப்பட்ட போலீஸ் படை
பெண் மாவட்ட ஆட்சியர் அளித்த புகாரின் அடிப்படையில், எம்.எல்.ஏ அருள் விக்னேஷ் மீது தமிழ்நாடு பெண் வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளதாகக் காவல்துறை தரப்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் இன்று அதிகாரப்பூர்வமாகத் தெரிவிக்கப்பட்டது.

இதனைத் தொடர்ந்து, கள்ளக்குறிச்சியில் உள்ள எம்.எல்.ஏ அருள் விக்னேஷின் வீட்டின் முன்பு துணை ஆய்வாளர் லோகேஷ்வரன் தலைமையிலான காவல்துறை அதிகாரிகள் மற்றும் போலீசார் திடீரெனக் குவிக்கப்பட்டுள்ளனர். வழக்கின் அடுத்தகட்ட நடவடிக்கையாக எம்.எல்.ஏ-விடம் விசாரணை நடத்தவும், தேவைப்பட்டால் அவரைக் கைது செய்யவும் காவல்துறை தயாராகி வருவதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. இதனால் கள்ளக்குறிச்சி பகுதியில் பெரும் பதற்றமும் பரபரப்பும் நிலவி வருகிறது.
புகார் முதல் எப்.ஐ.ஆர் வரை நடந்தது என்ன?
கடந்த சில வாரங்களாகவே, மாவட்ட ஆட்சியருக்கு தவெக எம்.எல்.ஏ அருள் விக்னேஷ் தகாத முறையில் குறுஞ்செய்திகளை அனுப்பியதாகவும், தொல்லை கொடுத்ததாகவும் குற்றச்சாட்டுகள் எழுந்து வந்தன. ஆனால், புகாரே வரவில்லை; இது எதிர்க்கட்சிகளின் வதந்தி என்று ஆளும் தரப்பு கூறி வந்தது.
இந்நிலையில், சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி வி. லட்சுமிநாராயணன் முன்பு நேற்று இந்த வழக்கு விசாரணைக்கு வந்தபோது, "மாவட்ட ஆட்சியரிடம் கேட்டு உறுதிப்படுத்திவிட்டு நாளை தெரிவிக்க வேண்டும்" என உத்தரவிட்டிருந்தார். அதனைத் தொடர்ந்து, நேற்று பிற்பகலில் மாவட்ட ஆட்சியர் நேரடியாக மாவட்ட காவல் கண்காணிப்பாளரிடம் (SP) எம்.எல்.ஏ மீது எழுத்துப்பூர்வமான புகாரை அளித்தார். சுமார் மூன்று மாதங்களுக்கு முன்பு நடந்த சம்பவம் மற்றும் தேவையற்ற குறுஞ்செய்திகள் குறித்து அந்தப் புகாரில் அவர் குறிப்பிட்டிருந்தார்.
உயர்நீதிமன்றத்தில் நடந்த காரசார விசாரணை
இன்று காலை இந்த வழக்கு மீண்டும் சென்னை உயர்நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தபோது, கள்ளக்குறிச்சி இன்ஸ்பெக்டர் செல்வநாயகம் தலைமையிலான போலீசார் மாவட்ட எஸ்.பி-யின் முதற்கட்ட விசாரணை அறிக்கை அடங்கிய சீல் வைக்கப்பட்ட கோப்புடன் ஆஜராகினர். அப்போது அரசுத் தரப்பு வழக்கறிஞர் ஜான் சத்யன், "மாவட்ட ஆட்சியர் புகாரின் பேரில் எம்.எல்.ஏ மீது எப்.ஐ.ஆர் பதிவு செய்யப்பட்டுவிட்டது" எனத் தெரிவித்தார்.
மேலும், மாவட்ட ஆட்சியருக்கு எம்.எல்.ஏ அனுப்பியதாகக் கூறப்படும் குறுஞ்செய்திகளின் விவரங்களை நீதிபதி வி. லட்சுமிநாராயணன் ஆய்வு செய்தார்.
நடவடிக்கை உறுதி என முதல்வர் விஜய் உத்தரவாதம்
முன்னதாக எடப்பாடி பழனிசாமி, மு.க. ஸ்டாலின், கனிமொழி ஆகியோர் எம்.எல்.ஏ மீது உடனடியாக நடவடிக்கை எடுத்து அவரைக் கைது செய்ய வேண்டும் என வலியுறுத்தி வந்தனர்.
இந்தச் சூழலில், எப்.ஐ.ஆர் பதிவு செய்யப்பட்ட கையோடு, துணை ஆய்வாளர் லோகேஷ்வரன் தலைமையிலான போலீஸ் குழுவினர் எம்.எல்.ஏ அருள் விக்னேஷ் வீட்டின் முன்பு குவிக்கப்பட்டுள்ளதால், அவர் கைதாவது ஏறத்தாழ உறுதியாகிவிட்டதாக அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.


Click it and Unblock the Notifications
