"மன்னிப்பு கேளுங்க சோனியா காந்தி".. வக்கீல் நோட்டீஸ் அனுப்பிய சாவர்க்கர் பேரன்.. சர்ச்சை பின்னணி
டெல்லி: காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் சோனியா காந்திக்கு, சாவர்க்கரின் பேரன் வக்கீல் நோட்டீஸ் அனுப்பி உள்ளார். நோட்டீஸ் கிடைத்த 15 நாட்களில் மன்னிப்பு கோர வேண்டும். இல்லாவிட்டால் சட்ட நடவடிக்கை தொடங்கப்படும் என்று தெரிவித்துள்ள நிலையில் அதன் பின்ன்ணி பற்றிய பரபரப்பான தகவல்கள் வெளியாகி உள்ளன.

சோனியா காந்தி 'Belonging: A Journey of Love' என்ற பெயரில் சுயசரிதை புத்தகம் எழுதி உள்ளார். இந்த புத்தகம் நாடு முழுவதும் விற்பனையாகி வருகிறது.
இந்த புத்தகத்தில் 201வது பக்கம் மற்றும் 443வது பக்கத்தில் சாவர்க்கர் பற்றிய கருத்துகள் இடம்பெற்றுள்ளது. சாவர்க்கர் இந்துத்துவா கொள்கையில் தீவிரமாக செயல்பட்டு வந்தவர். இதனால் சாவர்க்கரை பாஜகவினர் பாராட்டும் நேரத்தில் காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சியினரை அவரை இன்று வரை விமர்சனம் செய்து வருகின்றனர்.
இதற்கிடையே தான் சோனியா காந்தியின் சுயசரிதை புத்தகத்திலும் சாவர்க்கர் பற்றிய கருத்துகள் சர்ச்சைக்குரிய வகையில் இடம்பெற்றுள்ளதாக கூறப்படுகிறது. புத்தகத்தின் 201வது பக்கத்தில், ''காங்கிரஸ் கட்சியை சேர்ந்த விடுதலை போராட்டக்காரர்கள் ஆங்கிலேயர்களால் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர். தாக்குதலுக்கு உள்ளாகினர்ன. ஆனால் ஆர்எஸ்எஸ் போன்ற கொள்கை கொண்ட விநாயகர் தாமோதர் சார்க்கர் மன்னிப்பு கோரி கடிதம் எழுதினார். அதோடு ஆங்கிலேயர்களிடம் முக்கிய தகவல்களை சொல்லும் ஒற்றர்களாக செயல்பட்டனர்'' என கூறப்பட்டுள்ளது.
அதேபோல் 443வது பக்கத்தில், ''காந்தியடிகளின் சமகாலத்தவராக சாவர்க்கர் இருந்தார். அவர் காந்திக்கு மாறுபட்ட கொள்கையை முன்வைத்தார். இதுதான் இந்துத்துவா என்று சாவர்க்கர் முன்வைத்தார். அதுதான் இந்துத்துவாவின் அடித்தளமாக உள்ளது. இதனை அப்படியே பின்பற்றி ஆர்எஸ்எஸ், பாஜக மற்றும் நாடு முழுவதும் உள்ள அதன் துணை அமைப்புகள் செயல்பட்டு வருகிறது. இவை அனைத்தும் ஒட்டுமொத்த 'சங்பரிவார்' அல்லது ஆர்எஸ்எஸ் குடும்பமாகும்'' என்று கூறியுள்ளார்.
இந்நிலையில் தான் சாவர்க்கர் பேரன் சாத்யகி சாவர்க்கர் சார்பில் வழக்கறிஞர் சங்க்ராம் கோலத்கர், சோனியா காந்திக்கு வக்கீல் நோட்டீஸ் அனுப்பி வைத்துள்ளார். அதில், ''வக்கீல் நோட்டீஸ் கிடைத்த 15 நாட்களுக்குள் நிபந்தனையற்ற மன்னிப்பு கோர வேண்டும். வரக்கூடிய பதிப்புகளில் இந்த கருத்துகளை நீக்க வேண்டும். இதனை செய்யாவிட்டால் சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்'' என்று கூறப்பட்டுள்ளது.


Click it and Unblock the Notifications
