விஜய் அரசுக்கு 'ரியல் அக்னி பரீட்சை' இன்று தான்.. கள்ளக்குறிச்சி எம்எல்ஏ, திருப்பரங்குன்றம்.. ஏன்?
சென்னை: தமிழ்நாட்டில் இதுவரை இருந்த எந்த முதல்வரும் இப்படியான சட்ட நெருக்கடிகளை ஒரே நாளில் சந்தித்து இருப்பார்களா என்றால் அது கேள்விக்குறிதான். அதுவும் ஒரே நேரத்தில் அடுத்தடுத்து வந்திருக்கிறது. ஒன்று கள்ளக்குறிச்சி எம்எல்ஏ விவகாரம், அடுத்ததாக திருப்பரங்குன்றம் விவகாரம்... எல்லாமே எதிர்க்கட்சிகளின் குற்றச்சாட்டு எஸ்கேப் ஆக முடியாத கடுமையான சட்ட நெருக்கடி உள்ள விவகாரங்கள். இதில் கள்ளக்குறிச்சி விவகாரத்தில் என்ன நடவடிக்கை எடுத்தாலும் விஜய்க்கு சிக்கல்தான். அதேபோல்தான் திருப்பரங்குன்றம் விவகாரத்தில் என்ன நடவடிக்கை எடுத்தாலும் பெரிய சிக்கல்தான்.
தவெக அரசு இந்த ஆறு மாத கால ஆட்சியில் பல பிரச்சனைகளை எப்படி வேண்டுமானாலும் கையாண்டு இருக்கலாம். சில விஷயங்களில் எதிர்க்கட்சிகளின் பிரச்சாரங்கள் மற்றும் குற்றச்சாட்டுகள் மக்கள் மன்றத்தில் சுத்தமாக எடுபடாமல் கூட போயிருக்கலாம். சில விஷயங்களை உங்கள் ஆட்சியில் நடக்கவே இல்லையா என்று கேள்வி எழுப்பி விவாதத்தை ஒன்றுமே இல்லாமல் கூட செய்திருக்க முடியும். ஆனால் கள்ளக்குறிச்சி எம்எல்ஏ விவகாரமும் சரி, திருப்பரங்குன்றமும் சரி, அவ்வளவு எளிதாகக் கையாள முடியாது.

கள்ளக்குறிச்சி எம்எல்ஏ மீது நடவடிக்கை
இதில் கள்ளக்குறிச்சி எம்எல்ஏ குறித்து மாவட்ட பெண் ஆட்சியரே நேரடியாகப் புகார் அளித்துள்ளது இன்று உயர்நீதிமன்ற விசாரணையில் அம்பலமாகி உள்ளது. கடந்த ஜூலை மாதமே பெண் ஐஏஎஸ் அதிகாரி புகார் அளித்து உள்ளதும், அந்தப் புகார் மீது அப்போதே ஏன் நடவடிக்கை எடுக்கவில்லை என்றும் நீதிமன்றத்தாலேயே கண்டிக்கப்பட்டிருக்கிறது. தற்போது கள்ளக்குறிச்சி எம்எல்ஏ மீது வழக்கு போடப்பட்டிருக்கிறது. இந்த விவகாரத்தில் கள்ளக்குறிச்சி தவெக எம்எல்ஏ அருள் விக்னேஷ் மீது நடவடிக்கை எடுக்க வேண்டிய கட்டாயமும் ஏற்பட்டுள்ளது.
விஜய் அரசுக்கு எதிராக விமர்சனம்
இந்த விவகாரத்தை எதிர்க்கட்சிகள் அவ்வளவு எளிதாக விட்டுவிடாது. அதேபோல் பொதுவெளியில் விவாதம் ஆன பின்னர், சமூக வலைதளங்களில் கடுமையான கேள்விகள் வரும். ஏன் உடனே நடவடிக்கை எடுக்கவில்லை என்ற விமர்சனங்களும் கடுமையாக எழும். ஆளும் கட்சி எம்எல்ஏ ஒருவர் பெண் ஐஏஎஸ் அதிகாரிக்கு அநாகரீகமாக மெசேஜ் அனுப்பியதற்காகச் சட்ட நடவடிக்கைக்கு உள்ளானார் என்பது விஜய் அரசுக்கு பெரிய விமர்சனத்தை ஏற்படுத்தும்.
திருப்பரங்குன்றம் தீபம்
இன்னொரு பெரிய பிரச்சனையும் இன்றே வந்துள்ளது. அதுதான் திருப்பரங்குன்றம் தீபம் விவகாரம். திருப்பரங்குன்றம் முருகன் கோவிலின் உச்சியில் உச்சிப் பிள்ளையார் கோவில் இருக்கிறது. அதேபோல் திருப்பரங்குன்றம் மலையில் சிக்கந்தர் தர்காவும் இருக்கிறது. அந்த தர்கா அருகே உள்ள தூணில் தீபம் ஏற்ற வேண்டும் என்று கோரி இந்து அமைப்புகள் வழக்கு தொடர்ந்தன.
உச்ச நீதிமன்றம் உத்தரவு
இந்த வழக்கைக் கடந்த ஆண்டு விசாரித்த மதுரை உயர்நீதிமன்றம், தீபம் ஏற்ற உத்தரவிட்டது. ஆனால் அன்றைக்கு ஆட்சியில் இருந்த ஸ்டாலின் தலைமையிலான திமுக அரசு, அந்தக் கல் சர்வே கல் என்றும், அங்கு தீபம் ஏற்ற முடியவே முடியாது என்றும் கூறித் திட்டவட்டமாக மறுத்தது. உயர்நீதிமன்றத்தின் உத்தரவை அமல்படுத்த மறுத்ததுடன், உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தது.
ஆனால் தற்போது விஜய் தலைமையிலான தவெக ஆட்சி நடந்து வருகிறது. தவெக அரசுமே முந்தைய அரசின் நிலைப்பாட்டையே எடுத்தது. எனினும் உச்ச நீதிமன்றம், இடைக்கால உத்தரவாக, தர்கா அருகே உள்ள தூணில் தீபம் ஏற்ற உத்தரவிட்டுள்ளது. இந்த உத்தரவை அமல்படுத்த வேண்டிய கட்டாயமும் விஜய் தலைமையிலான தவெக அரசுக்கு ஏற்பட்டுள்ளது. ஒருபுறம் இஸ்லாமிய அமைப்புகள் கடுமையாக எதிர்ப்புகளைத் தெரிவித்துள்ளன. மறுபுறம் இந்து அமைப்புகள் கண்டிப்பாக உச்ச நீதிமன்ற உத்தரவை அமல்படுத்த வேண்டும் என்று வலியுறுத்துகின்றன. இதனால் விஜய் தலைமையிலான அரசு கடும் நெருக்கடியைச் சந்தித்துள்ளது.
எந்த பக்கம் முடிவு எடுத்தாலும் சிக்கல்
இதில் எந்தப் பக்கம் முடிவெடுத்தாலும் ஒரு தரப்பு கடுமையாக எதிர்ப்பைத் தெரிவிக்கும். மறுபக்கம் உயர்நீதிமன்ற மதுரைக்கிளை அமர்வும் இந்த விவகாரத்தை இன்று கையில் எடுத்து கண்காணித்து வருகிறது. என்ன நடவடிக்கை எடுக்கப்படும் என்பதை உயர்நீதிமன்றத்தில் தமிழக அரசு விளக்கம் அளித்தாக வேண்டும் என்கிற நிலை உள்ளது. உச்ச நீதிமன்றத்தின் உத்தரவை கட்டாயம் அமல்படுத்த வேண்டியது கடமையாகும். இந்த உத்தரவை நிறைவேற்றவில்லை என்றால், பெரிய சட்ட ரீதியான சிக்கலை தவெக அரசு உச்ச நீதிமன்றத்தில் சந்திக்கும்.. இந்தச் சூழலில் தலைமைச் செயலகத்தில் முதல்வர் விஜய், இன்று தலைமைச் செயலாளர் மற்றும் அதிகாரிகளுடன் அவசர ஆலோசனையும் நடத்தினார். கள்ளக்குறிச்சி விவகாரமும், திருப்பரங்குன்றம் விவகாரமும் இன்று தவெக அரசுக்கு நெருக்கடியை ஏற்படுத்தி உள்ளது என்பது எதார்த்தமான உண்மை.




Click it and Unblock the Notifications
