Paternity leave: தமிழகத்தில் முதல்முறையாக தந்தையருக்கும் பேறு கால விடுப்பு! முதல்வர் விஜய் அறிவிப்பு
சென்னை: தமிழகத்தில் திருமணமான ஆண் அரசு பணியாளர்களுக்கு 15 நாட்களுக்கு தந்தையர் பேறு கால விடுப்பு அளிக்கப்படும் என முதல்வர் விஜய் அறிவித்துள்ளார். தமிழகத்தில் முதன்முறையாக தந்தையர்களுக்கும் பேறு கால விடுப்பு அறிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து வெளியான செய்திக் குறிப்பில் கூறியிருப்பதாவது: தமிழ்நாடு அரசில் பணிபுரியும் ஆண் பணியாளர்களுக்கு முதன்முறையாக தந்தையர் மகப்பேறுகால விடுப்பு (Paternity Leave) அளித்து தமிழ்நாடு முதலமைச்சர் ஜோசப் விஜய் அறிவித்துள்ளார்.

தமிழ்நாடு அரசில் பணிபுரியும் பெண் பணியாளர்களுக்கு 365 நாட்கள் மகப்பேறு விடுப்பு வழங்கப்பட்டுவரும் நிலையில், அரசு ஆண் பணியாளர்களுக்கும் தந்தையர் மகப்பேறுகால விடுப்பு (Paternity Leave) வழங்கப் பரிசீலிக்க வேண்டுமென்ற கோரிக்கை அரசுப் பணியாளர்களிடமிருந்து அரசுக்கு வரப்பெற்றுள்ளது.
குழந்தை பிறக்கும் காலகட்டம் என்பது தாய் மற்றும் குழந்தைக்கு மிகவும் முக்கியமானதாகும். இக்காலகட்டத்தில் தாய்க்கு உடல் மற்றும் மனரீதியான ஆதரவு வழங்குவதுடன், குழந்தை பராமரிப்பிலும் தந்தையின் பங்களிப்பு அவசியமாகிறது. பெண் அரசுப் பணியாளர்களுக்கு 365 நாட்கள் மகப்பேறு விடுப்பு வழங்கப்படுவது தாய்மை மற்றும் குழந்தை நலனுக்கு அளிக்கப்படும் முக்கியத்துவத்தை வெளிப்படுத்துகிறது.
அதேபோன்று, ஆண் அரசுப் பணியாளர்களுக்கும் தந்தையர் மகப்பேறுகால விடுப்பு (Paternity Leave) வழங்கப்படுவது குடும்பப் பொறுப்புகளைப் பகிர்ந்து கொள்ளவும், குழந்தை வளர்ப்பில் தந்தையின் பங்களிப்பை உறுதிப்படுத்தவும் உதவும்.
எனவே, தமிழ்நாடு அரசு இக்கோரிக்கையைக் கனிவுடன் பரிசீலித்து, திருமணமான ஆண் அரசுப் பணியாளர்களுக்கு, அவர்தம் மனைவியின் மகப்பேறு காலத்தில் உடனிருக்க ஏதுவாக 15 நாட்கள் "தந்தையர் மகப்பேறுகால விடுப்பு" (Paternity Leave) வழங்கியும், அவ்விடுப்பினைக் குழந்தை பிறப்பதற்கு 15 நாட்களுக்கு முன்பிருந்தோ அல்லது குழந்தை பிறந்த தேதியிலிருந்து ஆறு மாதங்களுக்குள்ளாகவோ துய்த்துக் கொள்ளவும் என செய்திக் குறிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.


Click it and Unblock the Notifications
