"சுயமாக உழைத்து முன்னுக்கு வரவில்லை.. நான் பண்ணையார் தான்" துரை வைகோவுக்கு கார்த்தி சிதம்பரம் பதில்!
சிவகங்கை: நான் சுயமாக உழைத்து முன்னுக்கு வரவில்லை, நான் பண்ணையார்தான், அந்த வார்த்தை ஒன்றும் தவறில்லையே என மதிமுக முதன்மைச் செயலாளர் துரை வைகோவுக்கு சிவகங்கை நாடாளுமன்ற உறுப்பினர் கார்த்தி சிதம்பரம் பதிலளித்துள்ளார்.
புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில், வளர்ச்சி மற்றும் கண்காணிப்புக் குழுக் கூட்டம் அதன் தலைவரும், சிவகங்கை நாடாளுமன்ற உறுப்பினருமான கார்த்தி சிதம்பரம் தலைமையில் நடைபெற்றது. இதில் மாவட்ட ஆட்சியர் அருணா, திருச்சி நாடாளுமன்ற உறுப்பினர் துரை வைகோ உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

கூட்டத்தில் மத்திய அரசின் திட்டங்களின் கீழ் மாவட்டத்தில் மேற்கொள்ளப்பட்டு வரும் பணிகள் குறித்தும், நாடாளுமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியின் கீழ் செயல்படுத்தப்படும் திட்டங்களின் முன்னேற்றம் குறித்தும் ஆய்வு செய்யப்பட்டது.
விஜய்க்குத்தான் ஓட்டு
இதைத்தொடர்ந்து செய்தியாளர்களைச் சந்தித்த கார்த்தி சிதம்பரம் கூறியதாவது: தமிழகத்தில் பொதுமக்கள் விஜய்க்காகத்தான் வாக்களித்துள்ளனர். அவருக்கென்று மக்களிடம் தனிப்பட்ட செல்வாக்கு உள்ளது. அந்த செல்வாக்கைக் காப்பாற்றிக் கொள்ள முதல்வர் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
அவர் தன்னை இன்னும் அதிகமாகப் பொதுமக்களுடன் இணைத்துக் கொள்ள வேண்டும். ஒவ்வொரு முக்கியமான சம்பவத்தின்போதும் முதல்வர் தனது கருத்தைத் தெரிவிக்க வேண்டும். போதிய தகவல் தொடர்பு இல்லாததால்தான் தற்போதைய அரசு இவ்வளவு பெரிய சிக்கல்களைச் சந்தித்து வருகிறது.
கள்ளக்குறிச்சி ஆட்சியர்
கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியர் தொடர்பான விவகாரத்தில் முழுமையான விசாரணைக்குப் பிறகே உண்மை நிலவரம் தெரியவரும். இந்த விவகாரம் வெளியில் தெரிந்த உடனேயே தலைமைச் செயலாளரோ அல்லது சம்பந்தப்பட்ட கட்சியினரோ நடவடிக்கையில் இறங்கியிருக்க வேண்டும். அப்போதே பிரச்சினைக்குத் தீர்வு கண்டிருந்தால் இவ்வளவு பெரிய சர்ச்சை ஏற்பட்டிருக்காது.
இந்த விவகாரத்தில் எம்எல்ஏவைக் கைது செய்ய வேண்டிய அளவுக்கு வழக்கு இருப்பதாகத் தெரியவில்லை. அதேவேளையில் சட்டரீதியான நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும். உதயநிதியைக் கைது செய்து அழைத்துச் சென்றதும் தவறான நடவடிக்கைதான். 75 சதவீத கைதுகள் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளுக்காகவே நடத்தப்படுகின்றன.
உயிருக்கு ஆபத்து
மாவட்ட ஆட்சியரின் உயிருக்கு ஆபத்து இருப்பதாக விசாரணை அதிகாரிகளும் விசாரணைக்காக அமைக்கப்பட்ட குழுவும் முடிவு செய்தால் சம்பந்தப்பட்ட எம்எல்ஏவைக் கைது செய்யலாம். ஆட்சியரின் உயிருக்கும் உடைமைகளுக்கும் எம்எல்ஏவால் ஆபத்து இருப்பது உறுதி செய்யப்பட்டால் கைது நடவடிக்கை எடுக்கலாம். அத்தகைய அச்சுறுத்தல் இல்லை என்றால் கைது செய்ய வேண்டிய அவசியமில்லை என்பது எனது கருத்து.
வழக்கு முடிவடையும் வரை யாரும் சிறையில் இருக்கக்கூடாது. குற்றம் நிரூபிக்கப்பட்டு தண்டனை அறிவிக்கப்பட்ட பிறகுதான் சிறைக்கு அனுப்ப வேண்டும் என்பதே எனது கருத்து என்றும் தெரிவித்தார்.
திருப்பரங்குன்றம்
திருப்பரங்குன்றம் விவகாரத்தில் உச்சநீதிமன்றத்தில் ஆட்சியர் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ள கருத்துகளின் உண்மைத்தன்மை குறித்து உச்சநீதிமன்ற நீதிபதிகள்தான் விசாரித்து முடிவெடுக்க வேண்டும். உச்ச நீதிமன்றத்தின் உத்தரவை நிறைவேற்ற ஆட்சியர் முடிவு செய்திருந்த நிலையில், அவரை யார் தடுத்தது என்பது குறித்தும் நீதிபதிகள் விசாரித்து உண்மையை வெளிக் கொண்டு வர வேண்டும்.
தீபத்தூணில் தீபம் ஏற்றுதல்
கடந்த காலங்களைப் போலவே இந்த ஆண்டும் உச்சிப்பிள்ளையார் கோவில் தீபத்தூணில் தீபம் ஏற்றியது வரவேற்கத்தக்கது என்றும் கூறினார். செங்கோட்டையனைத் தவிர தற்போதைய ஆட்சியில் அமைச்சர்களாக இருப்பவர்களில் பெரும்பாலானோர் இதற்கு முன்பு அமைச்சர்களாக இருந்தவர்கள் அல்ல. எனவே, ஆட்சி அதிகாரம் குறித்தும் அதன் செயல்பாடுகள் குறித்தும், அரசியல் இலக்கணம் குறித்தும், புரோட்டோகால் குறித்தும் அவர்கள் முழுமையாக உணரவில்லை.
மக்களுடன் விஜய் பழகணும்
முதல்வர் விஜய் மக்களுடன் மட்டுமின்றி, அரசின் செயல்பாடுகள் குறித்தும் அதிகமாகத் தகவல் தொடர்பு மேற்கொள்ள வேண்டும். கள்ளக்குறிச்சி ஆட்சியர் விவகாரத்தில் என்ன நடந்தது என்பது தெரிந்திருந்தும் தெரியாததுபோல் தவெக அமைச்சர்கள் பேசியது தவறு என்றும் விமர்சித்தார்.
துரை வைகோவுக்கு பதிலடி
தமிழகத்தின் தற்போதைய அரசியல் சூழலில் தவெகவைத் தவிர்த்துவிட்டு வேறு யாராலும் ஆட்சி அமைக்க முடியாது. எனவே, தற்போதைக்கு இந்த ஆட்சிக்கு எந்த ஆபத்தும் இல்லை என்றும் கார்த்தி சிதம்பரம் தெரிவித்தார். திருச்சி நாடாளுமன்ற உறுப்பினர் துரை வைகோ தன்னைப் பண்ணையார் என்று குறிப்பிட்டது குறித்து செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர்.
அதற்குப் பதிலளித்த கார்த்தி சிதம்பரம், துரை வைகோ தன்னைப் பண்ணையார் என்று சொன்னதில் எந்தத் தவறும் இல்லை. அவர் தன்னை மகாராஜா என்று சொல்லவில்லையே என்றுதான் ஏமாற்றமாக இருக்கிறது. நான் உழைத்து முன்னுக்கு வந்தவன் கிடையாது. எனது குடும்பம் செல்வந்தர் குடும்பம். எனது தந்தை முதல் பாட்டனார் வரை செல்வந்தர்களாக இருந்தவர்கள். அந்தப் பின்னணியில்தான் நான் வந்துள்ளேன். எனவே, பண்ணையார் என்ற வார்த்தை எனக்குத் தவறாகத் தெரியவில்லை என்று நகைச்சுவையாகப் பதிலளித்தார். இவ்வாறு கார்த்தி சிதம்பரம் தெரிவித்தார். இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்ட துரை வைகோ வெளியே வந்த போது செய்தியாளர்களை பார்த்து, உங்கள் கேள்விகளுக்கு பதில் சொல்ல பண்ணையார் வராரு, அவர்கிட்ட பதில் வாங்கிக்கோங்க" என தெரிவித்திருந்தார். அதற்கு கார்த்தி சிதம்பரம் பதில் அளித்திருந்தார்.



Click it and Unblock the Notifications
