'அருள் விக்னேஷைக் கைது செய்யணும்'.. ஆளுநரிடம் உதயநிதி ஸ்டாலின் அளித்த மனுவில் உள்ள புகார்கள் விவரம்

Subscribe to Oneindia Tamil

சென்னை: ஆளுநரிடம் உதயநிதி ஸ்டாலின் அளித்த புகார் மனுவில் உள்ள விவரங்கள் பல்வேறு புகார்கள் உள்ளன. குறிப்பாக மாவட்ட ஆட்சியர் ஒருவருக்கு ஆளுங்கட்சி சட்டமன்ற உறுப்பினர் பாலியல் தொல்லை அளித்ததாக 31-07-2026 அன்று அளிக்கப்பட்ட புகாரை, காவல்துறைக்கோ, உள்புகார் குழுவுக்கோ அனுப்பாமல் ஆளுங்கட்சித் தலைமையின் கவனத்திற்குக் கொண்டு சென்றது ஏன் என்பது குறித்து அரசிடம் விளக்கம் கோர வேண்டும். அருள் விக்னேஷைக் கைது செய்யவும், இவ்வழக்கை சி.பி.ஐ. விசாரணைக்கு மாற்றவும் தமிழ்நாடு அரசுக்கு அறிவுறுத்த வேண்டும் போன்றவை இடம் பெற்றுள்ளன.

இன்று (26-11-2026) காலை, சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின், ஆளுநரை இன்று மக்கள் மாளிகையில் சந்தித்து வழங்கிய புகார் மனுவின் விவரங்களை திமுக அதிகாரபபூர்வமாக வெளியிட்டுள்ளது. அதன் விவரம் வருமாறு:

Udhayanidhi Stalin Governor

சட்டம் ஒழுங்கு சீர்குலைவு

தமிழ்நாட்டில் கடந்த ஆறு மாதங்களாகச் சட்டம் - ஒழுங்கு சீர்குலைந்து வருவது, ஆளுங்கட்சியைச் சேர்ந்த சட்டமன்ற உறுப்பினர்கள் மற்றும் நிர்வாகிகள் மீதான குற்றச்சாட்டுகளில் சட்டப்படியான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படாதது, அரசு அதிகாரிகள் மற்றும் பொதுமக்களின் பாதுகாப்பு கேள்விக்குறியாகியிருப்பது ஆகியவை குறித்து மாண்புமிகு ஆளுநரின் கவனத்திற்குக் கொண்டுசெல்லப்பட்டுள்ளது.

சட்டத்துறை அமைச்சரின் செயல்பாடுகள்

மாவட்ட ஆட்சியர் ஒருவருக்கு ஆளுங்கட்சி சட்டமன்ற உறுப்பினர் சி. அருள் விக்னேஷ் பாலியல் தொல்லை அளித்ததாக எழுந்துள்ள புகாரில், 31-07-2026 அன்றே தலைமைச் செயலாளரிடம் புகார் அளிக்கப்பட்டும், ஏறத்தாழ நான்கு மாதங்களாக நடவடிக்கை எடுக்கப்படாதது; உயர்நீதிமன்றத்தில் வழக்கு விசாரணைக்கு வந்த பின்னரே முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்பட்டது; சட்டத்துறை அமைச்சர் இவ்விவகாரத்தைத் தனிப்பட்ட பிரச்சனையாகக் குறிப்பிட்டது ஆகியவை சுட்டிக்காட்டப்பட்டுள்ளன.

துணை சபாநாயகர்

மேலும், குடிநீர் உள்ளிட்ட அடிப்படை வசதிகள் கோரி மனு அளிக்கச் சென்ற பொதுமக்களில் ஒருவரைச் சட்டமன்றத் துணைத் தலைவர் தாக்கியதாக எழுந்துள்ள புகார், அயனாவரம், காரமடை, ஆலந்தூர் ஆகிய இடங்களில் ஆளுங்கட்சி நிர்வாகிகள் மீது எழுந்துள்ள குற்றச்சாட்டுகள், பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்கள், குழந்தைகள் காணாமல் போகும் சம்பவங்கள், காவல் மற்றும் நீதிமன்றக் காவலில் நிகழ்ந்துள்ள குறைந்தது ஒன்பது மரணங்கள் உள்ளிட்டவை குறித்து ஆளுநரின் கவனத்திற்குக் கொண்டுசெல்லப்பட்டுள்ளது.

போதைப்பொருட்கள் விவாகரத்தில் பின்னணி

நாகப்பட்டினத்தில் 137 கிலோ மெத்தாம்பெட்டமைன், சென்னையில் 71.24 கிலோ ஹெராயின் உள்ளிட்ட பெருமளவிலான போதைப்பொருட்கள் ஒன்றிய அரசின் அமைப்புகளால் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதையும், போதைப்பொருள் கடத்தல் வழக்குகளில் ஆளுங்கட்சி நிர்வாகிகள் கைது செய்யப்பட்டிருப்பதையும் சுட்டிக்காட்டி, இவற்றின் பின்னணியில் உள்ள வலையமைப்பு மற்றும் பணப் பரிவர்த்தனைகள் குறித்து விரிவான விசாரணை மேற்கொள்ள வேண்டியதன் அவசியமும் வலியுறுத்தப்பட்டுள்ளது.

இவற்றின் அடிப்படையில், மாண்புமிகு ஆளுநர் அவர்களிடம் பின்வரும் கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டுள்ளன:

1. இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் பிரிவு 167(b)-இன்கீழ், ஜூன் 2026 முதல் தமிழ்நாட்டின் சட்டம் - ஒழுங்கு நிலவரம் குறித்தும், புகார் மனுவில் குறிப்பிடப்பட்டுள்ள ஒவ்வொரு சம்பவத்திலும் மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கைகள் குறித்தும் முதலமைச்சரிடம் விரிவான அறிக்கை கோர வேண்டும்.

2. மாவட்ட ஆட்சியர் ஒருவருக்கு ஆளுங்கட்சி சட்டமன்ற உறுப்பினர் பாலியல் தொல்லை அளித்ததாக 31-07-2026 அன்று அளிக்கப்பட்ட புகாரை, காவல்துறைக்கோ, உள்புகார் குழுவுக்கோ அனுப்பாமல் ஆளுங்கட்சித் தலைமையின் கவனத்திற்குக் கொண்டு சென்றது ஏன் என்பது குறித்து அரசிடம் விளக்கம் கோர வேண்டும்.


அருள் விக்னேஷ் கைது செய்யப்பட வேண்டும்

3. சட்டமன்ற உறுப்பினர் சி. அருள் விக்னேஷைக் கைது செய்யவும், மின்னணு ஆதாரங்களைப் பாதுகாக்கவும், குறிப்பிட்ட காலக்கெடுவுக்குள் விசாரணையை நிறைவு செய்யும் வகையில் இவ்வழக்கை சி.பி.ஐ. விசாரணைக்கு மாற்றவும் தமிழ்நாடு அரசுக்கு அறிவுறுத்த வேண்டும்.

சமயபுரம் காவல் ஆய்வாளர்

4. துறையூரில் பொதுமக்களில் ஒருவர் தாக்கப்பட்டதாக எழுந்துள்ள புகாரில், சட்டமன்றத் துணைத் தலைவர் உள்ளிட்ட சம்பந்தப்பட்ட அனைவரின் பெயர்களையும் குறிப்பிட்டு முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யவும், புகாரை மறுத்துப் பேசுமாறு பாதிக்கப்பட்டவர் மிரட்டப்பட்டதாக எழுந்துள்ள குற்றச்சாட்டில் சமயபுரம் காவல் ஆய்வாளரின் பங்கு குறித்து சுயாதீன விசாரணை நடத்தவும் அரசுக்கு அறிவுறுத்த வேண்டும்.

5. தலைமைச் செயலாளரின் செயல்பாடுகள் குறித்து அனைத்திந்தியப் பணிகள் விதிகளின்கீழ் நடவடிக்கை மேற்கொள்ள, ஒன்றிய அரசின் பணியாளர் மற்றும் பயிற்சித் துறையின் கவனத்திற்குக் கொண்டு செல்ல வேண்டும். சட்டத்துறை அமைச்சரின் பொறுப்பற்ற பொதுவெளிக் கருத்து குறித்து முதலமைச்சரின் கவனத்திற்குக் கொண்டு செல்ல வேண்டும்.


காணாமல் போன குழந்தைகள்

6. காணாமல் போன குழந்தைகளைக் கண்டறிய மாநில அளவிலான எச்சரிக்கை அமைப்புடன் கூடிய தனிப்பிரிவை உருவாக்க வேண்டும். காவல் மரணங்கள் குறித்து 24 மணி நேரத்திற்குள் தேசிய மனித உரிமைகள் ஆணையத்திற்குத் தகவல் தெரிவிக்கவும், நீதித்துறை நடுவர் விசாரணை மற்றும் காணொலிப் பதிவுடன் கூடிய உடற்கூராய்வு மேற்கொள்ளவும் அரசுக்கு அறிவுறுத்த வேண்டும். உச்சநீதிமன்றத்தின் பிரகாஷ் சிங் வழக்குத் தீர்ப்பின்படி மாநிலப் பாதுகாப்பு ஆணையம் மற்றும் காவல்துறை புகார் ஆணையத்தைச் செயல்பாட்டிற்குக் கொண்டுவர வேண்டும்.

7. மேற்கண்ட விவகாரங்களில் தமிழ்நாடு அரசு உரிய நடவடிக்கை எடுக்கத் தவறினால், மாநிலத்தின் நிலவரம் குறித்து ஒன்றிய அரசுக்குத் தெரிவிக்க வேண்டும்.

8. நாகப்பட்டினம் மற்றும் மாதவரத்தில் பறிமுதல் செய்யப்பட்ட போதைப்பொருட்கள் மற்றும் தொடர்புடைய வழக்குகளில், சட்டவிரோதப் பணப் பரிவர்த்தனைத் தடுப்புச் சட்டம், 2002-இன்கீழ் அமலாக்கத்துறை வழக்குப் பதிவு செய்து, குற்றத்தின் மூலம் ஈட்டப்பட்ட சொத்துகளைக் கண்டறிந்து, முடக்கி, பறிமுதல் செய்ய ஒன்றிய அரசுக்குப் பரிந்துரைக்க வேண்டும்.

9. போதைப்பொருள் கடத்தலுக்கான நிதி ஆதாரங்கள், விநியோக வலையமைப்பு, சேமிப்பிடங்கள், கடல்வழிக் கடத்தல் மற்றும் அதற்குப் பாதுகாப்பு அளிப்பவர்கள் குறித்து வருவாய்ப் புலனாய்வு இயக்குநரகம் (DRI), போதைப்பொருள் தடுப்புப் பிரிவு (NCB) ஆகியவை ஒருங்கிணைந்த விசாரணை மேற்கொள்ளவும், பயங்கரவாதத்திற்கான நிதியுதவி அல்லது வெளிநாட்டு வலையமைப்புகளுடனான தொடர்புகள் தெரியவந்தால் தேசியப் புலனாய்வு முகமையும் (NIA) விசாரணை மேற்கொள்ளவும் பரிந்துரைக்க வேண்டும்.

10. போதைப்பொருள் கடத்தலுக்கு ஆளுங்கட்சி நிர்வாகிகள், மக்கள் பிரதிநிதிகள், அரசு அதிகாரிகள் உள்ளிட்ட அதிகாரத்தில் இருப்பவர்கள் துணைபுரிந்துள்ளார்களா, நிதியுதவி அல்லது பாதுகாப்பு அளித்துள்ளார்களா, அதன் மூலம் ஆதாயம் அடைந்துள்ளார்களா என்பது குறித்து விசாரணை மேற்கொள்ளப்படுவதை உறுதிசெய்ய வேண்டும்.

11. மே 2026 முதல் தமிழ்நாடு காவல்துறையால் பதிவு செய்யப்பட்ட போதைப்பொருள் வழக்குகளின் எண்ணிக்கை, மாநில மற்றும் ஒன்றிய அரசின் அமைப்புகளால் பறிமுதல் செய்யப்பட்ட போதைப்பொருட்களின் அளவு, போதைப்பொருள் வழக்குகளில் தொடர்புடையதாகக் குறிப்பிடப்பட்டுள்ள ஆளுங்கட்சி நிர்வாகிகள் மீது மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கைகள் ஆகியவை குறித்து அரசியலமைப்புச் சட்டத்தின் பிரிவு 167(b)-இன்கீழ் முதலமைச்சரிடம் அறிக்கை கோர வேண்டும்.

குற்றச்சாட்டுகளுக்கு உள்ளானவர்கள் யாராக இருந்தாலும், சட்டம் எளிய மக்களுக்குப் பாதுகாப்பாகவும், அதிகாரத்தில் இருப்பவர்களைக் கட்டுப்படுத்துவதாகவும் அமைந்திட, மாண்புமிகு ஆளுநர் அவர்கள் தமது அரசியலமைப்புச் சட்டக் கடமைகளுக்கு உட்பட்டு உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் எனச் சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார்" இவ்வாறு திமுக கூறியுள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+