எல்லை மீறிய தவெக எம்எல்ஏ.. தவெக அரசின் நடவடிக்கை கண்டனத்திற்குரியது! ‘தோழர்’ பாலகிருஷ்ணன் காட்டம்!
திண்டுக்கல்: கள்ளக்குறிச்சி தவெக சட்டமன்ற உறுப்பினர் விவகாரத்தில் தமிழக அரசு நடந்து கொள்ளும் விதம் முறையற்றது, வன்மையான கண்டனத்திற்குரியது எனவும், இந்தப் பிரச்சினை வெளிவந்து, மாவட்ட ஆட்சியர் புகார் அளித்த அன்றே தமிழக அரசும் காவல்துறையும் வழக்கைப் பதிவு செய்து நடவடிக்கை எடுத்து நியாயம் வழங்கியிருக்க வேண்டும் என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் கே. பாலகிருஷ்ணன் கூறியுள்ளார்.
இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாவட்டக் குழு சார்பில், 'வாக்குரிமை பாதுகாப்பு உறுதிமொழி ஏற்பு நிகழ்ச்சி' இன்று திண்டுக்கல் பேருந்து நிலையத்தில் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் கட்சியின் அரசியல் தலைமைக் குழு உறுப்பினர் கே. பாலகிருஷ்ணன் சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டார்.

தொடர்ந்து செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசிய பாலகிருஷ்ணன்," பாஜக மேற்கொண்டுள்ள அரசியல் சாசன திருத்தங்கள் அனைத்தும் கூட்டாட்சி கோட்பாடு, மதச்சார்பின்மை மற்றும் சமத்துவத்திற்கு விரோதமாக உள்ளது.
கே. பாலகிருஷ்ணன்
காஷ்மீரின் சிறப்பு அந்தஸ்தை ரத்து செய்து அம்மாநில மக்களின் உரிமைகள் பறிக்கப்பட்டுள்ளது. 'ஒரே நாடு, ஒரே தேர்தல்' என்ற பெயரில் கூட்டாட்சி தத்துவத்தை சிதைக்க நினைக்கின்றனர். மேலும், மத அடிப்படையிலான ஆட்சியை உருவாக்க முயற்சிப்பதாகவும், நாடாளுமன்ற உறுப்பினர்களின் எண்ணிக்கையை அதிகரித்து மூன்றில் இரண்டு பங்கு பெரும்பான்மை பெற்று புதிய அரசியல் சாசனத்தை உருவாக்கும் சதி நடைபெற்று வருகிறது. எஸ்.ஐ.ஆர் நடைமுறையை திணித்து நாடு முழுவதும் அடிப்படை வாக்குரிமைகள் சிதைக்கப்பட்டுள்ளது.
கள்ளக்குறிச்சி தவெக எம்எல்ஏ
கள்ளக்குறிச்சி தவெக சட்டமன்ற உறுப்பினர் விவகாரத்தில் ஐஏஎஸ் அதிகாரிகள் சங்கம் தலைமைச் செயலாளரிடம் மனு அளித்துள்ளது. யாரிடம் மனு கொடுத்தாலும் இந்த அரசுதான் நடவடிக்கை எடுக்க வேண்டும். இந்தப் பிரச்சினை வெளிவந்து, மாவட்ட ஆட்சியர் புகார் அளித்த அன்றே தமிழக அரசும் காவல்துறையும் வழக்கைப் பதிவு செய்து நடவடிக்கை எடுத்து நியாயம் வழங்கியிருக்க வேண்டும்.
ஐஏஎஸ் அதிகாரிகள்
அரசு நியாயம் வழங்காமல் தாமதித்ததால் தான், ஐஏஎஸ் அதிகாரிகள் சங்கம் மனு கொடுப்பது, நீதிமன்றம் தலையிடுவது, சிபிஐ விசாரணை கோருவது போன்ற தேவையற்ற நிலைமைகள் தமிழ்நாட்டில் உருவாகி வருகிறது. அனைத்திற்கும் அரசின் தாமதமே காரணம். கள்ளக்குறிச்சி த.வெ.க எம்எல்ஏ விவகாரத்தில் குழு அமைத்து இரண்டு மாத அவகாசம் வழங்கப்பட்டுள்ளது.
காவல்துறை அதிகாரிகள்
கள்ளக்குறிச்சி விவகாரத்தில் குழு அமைக்க வேண்டிய அவசியமே இல்லை. நியமிக்கப்பட்டுள்ள இரண்டு காவல்துறை அதிகாரிகள் விசாரித்து உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும். ஏற்கனவே காலதாமதம் ஆகிவிட்ட நிலையில், குழு அமைப்பது உள்ளிட்ட வேறு எந்த வகையான தாமதத்தையும் ஏற்க முடியாது. கைது நடவடிக்கை உட்பட எந்த நடவடிக்கையும் எடுக்காமல் இருப்பது வன்மையான கண்டனத்திற்குரியது. இதை வலியுறுத்தித் தொடர்ந்து பலகட்டப் போராட்டங்களை நடத்தி வருகிறோம்.
முதல்வர் விஜய்
தேர்தலுக்கு முன் முதல்வர் விஜய் 'தூய சக்தி' எனக் குறிப்பிட்டார். அது தூய சக்தியா இல்லையா என்பது வேறு விஷயம், ஒவ்வொரு பிரச்சினையிலும் அரசு எவ்வாறு செயல்படுகிறது என்பதைப் பொறுத்தே அரசாங்கத்தின் மீதான தங்களது அணுகுமுறை அமையும்.
அரசின் அணுகுமுறை
கள்ளக்குறிச்சி சம்பவத்தைப் பொறுத்தவரை அரசின் அணுகுமுறை நியாயமற்றதாகவும், நேர்மையற்றதாகவும் உள்ளது. ஒரு சட்டமன்ற உறுப்பினர் மீது இத்தகைய புகார் வரும்போது நடவடிக்கை எடுப்பதில் தாமதிக்கக் கூடாது என்றும், இந்த விவகாரத்தில் தாமதிப்பது எந்த விதத்திலும் நியாயமானதோ, நேர்மையானதோ அல்லது சரியான நடவடிக்கையோ அல்ல." என்றார்.




Click it and Unblock the Notifications
