தவெக ஆட்சியை கலைக்கனுமா? தீர்ப்பை மதிக்காமல் செயல்பட்டது யார் யார்? லிஸ்ட் போட்ட பெ சண்முகம்
சென்னை: உச்ச நீதிமன்ற தீர்ப்பை அமல்படுத்தவில்லை என்பதற்காக அரசாங்கத்தை கலைக்க வேண்டும் என்று சொன்னால் முதலில் கலைக்க வேண்டியது அன்றைக்கு இருந்த கல்யாண் சிங் அரசாங்கம் தான்.. என்று சிபிஎம் மாநில செயலாளர் பெ சண்முகம் கூறியுள்ளார். மேலும், காவிரி தீர்ப்பு, ஐயப்பன் கோவிலுக்கு பெண்கள் செல்லலாம் என உச்ச நீதிமன்றம் கூறிய தீர்ப்புகள் அனைத்தும் நிறைவேற்றப்பதா என்றும் பெ சண்முகம் கேள்வி எழுப்பியுள்ளார்.
உச்ச நீதிமன்ற உத்தரவை மதிக்காததால் தமிழகத்தில் தவெக ஆட்சியை கலைக்க வேண்டும் என்று ஆளுநரிடம் நயினார் நாகேந்திரன் கோரிக்கை விடுத்த நிலையில் பெ சண்முகம் இவ்வாறு கூறியுள்ளார்.

தீபத்தூணில் தீபம் ஏற்றப்படவில்லை
திருப்பரங்குன்றத்தில் உள்ள தீபத்தூணில் தீபம் ஏற்ற வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது. எனினும், கடந்த செவ்வாய்க்கிழமை மாலை கார்த்திகை தீபத்திருநாளன்று, திருப்பரங்குன்றம் மலையில் வழக்கமாக தீபம் ஏற்றப்படும் உச்சிப்பிள்ளையார் கோவில் அருகே உள்ள தீப மண்டபத்தில் மகா தீபம் ஏற்றப்பட்டது.
உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டிருந்த தீபத்தூணில் தீபம் ஏற்றப்படவில்லை. இதற்கு ஆதரவும், எதிர்ப்பும் கிளம்பியது. இதையடுத்து நீதிமன்றத்தில் கோர்ட் அவமதிப்பு வழக்கு தொடரப்பட்டுள்ளது. இந்த வழக்கு உச்ச நீதிமன்றத்தில் நாளை விசாரணைக்கு வருகிறது. இதற்கிடையே, தமிழக ஆளுநரை சந்தித்த பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன், உச்ச நீதிமன்ற உத்தரவை மதிக்காததால் தமிழகத்தில் தவெக ஆட்சியை கலைக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்தார்.
இந்த நிலையில்தான் இது தொடர்பாக கம்யூனிஸ்ட் மாநில செயலாளர் பெ சண்முகம் கடுமையாக விமர்சித்துள்ளார். பெ சண்முகம் பேசியதாவது:- உச்ச நீதிமன்ற தீர்ப்பை அமல்படுத்தவில்லை என்பதற்காக அரசாங்கத்தை கலைக்க வேண்டும் என்று சொன்னால் முதலில் கலைக்க வேண்டியது அன்றைக்கு இருந்த கல்யாண் சிங் அரசாங்கம்..
பாபர் மசூதி இடித்து தரைமட்டமாக்கப்பட்டது
பாபர் மசூதியில் இருந்து ஒரு செங்கல்லை கூட அகற்ற மாட்டோம் என்று உறுதிமொழியை உச்ச நீதிமன்றத்தில் கொடுத்துவிட்டு, என்று சொல்லிவிட்டுதான் கரசேவகர்களை அவர்கள் அனுமதித்தார்கள். கண்ணிமைக்கும் நேரத்தில் பாபர் மசூதி இடித்து தரைமட்டமாக்கப்பட்டது. என்ன உங்களால் செய்ய முடிந்தது.
ஐயப்பன் கோவிலில் பெண்களை வழிபாட்டுக்கு அனுமதிக்க வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்து எத்தனை ஆண்டுகள் ஆகிவிட்டது. இந்துத்வா வெறியர்கள் உடைய எதிர்ப்பின் காரணமாக இன்றைக்கு வரை அந்த தீர்ப்பு அமல்படுத்தப்படவில்லை. காவிரியில் தமிழ்நாட்டுக்கு 177 டிஎம்சி தண்ணீர் வழங்க வேண்டும் என்று தீர்ப்பளித்து 13 ஆண்டுகள் ஆகிவிட்டது. இதுவரைக்கும் அந்த தீர்ப்பை கர்நாடக மாநில அரசு அமல்படுத்தவில்லை.
ஆட்சியை கலைப்பதா?
இதுபோன்று பட்டியலிட்டால் உச்ச நீதிமன்றம் தலையில் கைவைத்துக் கொண்டுதான் செல்ல வேண்டும். தீர்ப்பு சொல்லும் இடத்தில் அவர்கள் இருக்கிறார்கள். அமல்படுத்தாத போது, அதை அமல்படுத்த வேண்டும் என்று வற்புறுத்த முடியுமே தவிர அதற்காக ஆட்சியை கலைப்பது என்கிற நடவடிக்கைக்கு செல்ல முடியுமா?
ஆனால் தமிழ்நாட்டு மக்கள் மத்தியில் ஒரு பதட்டத்தையும் அச்சத்தையும் ஏற்படுத்தக்கூடிய வகையில் மத வெறியர்கள், இந்த தீர்ப்பை அமல்படுத்தவில்லை ஆகவே இந்த அரசை கலைக்க வேண்டும் என்ற பிரசாரத்தை அவர்கள் கட்டவிழ்த்து விட்டு இருக்கிறார்கள். இது எல்லாமே சட்டத்திற்கு விரோதமானது. ஏனென்று சொன்னால் இன்றைக்கு இருக்கக்கூடிய ஆட்சியாளர்கள் நம்முடைய அரசியல் சாசனத்தின் முகப்பு என்ன? மதசார்பற்ற ஜனநாயக சோசலிச குடியரசு என்பதுதான் நம்முடைய ஆட்சிக்கு வைத்து இருக்கக் கூடியபெயர்.
அரசியல் அமைப்பு மாற்றப்பட்டால்
இந்த ஜனநாயகம் இருக்கின்ற காரணத்தினால்தான் நாம் இங்கு கூடுகிறோம். பேசுகிறோம். கருத்துகளை தெரிவிக்கிறோம். எல்லா உரிமைகளையும் அரசியல் அமைப்பு சாசனம் இந்திய மக்களுக்கு வழங்கியுள்ளது. இவற்றை பறிக்க கூடிய வகையில் பல்வேறு நடவடிக்கைகளை ஆட்சியாளர்கள் மேற்கொள்கிறார்கள். இத்தைய சூழலில் அரசியல் சாசனத்தின் விழுமியங்களை பாதுகாப்பதுதான் இன்றைக்கு இருக்க கூடிய முக்கியமான பிரச்சினையாக உள்ளது.
அரசியல் அமைப்பு மாற்றப்பட்டாலோ, திருத்தப்பட்டாலோ, அனைவரும் சமமான வாய்ப்பு என்கிற அடிப்படை கோட்பாடு என்பது குழிதோண்டி புதைக்கப்படுவிடும். இந்த அரசியல் சாசனத்தை ஏற்க மாட்டோம் என்ற கூட்டம்தான் ஒன்றிய ஆட்சி பொறுப்பில் இருந்து கொண்டு இருக்கிறது.
ஆகவே, இந்த அரசியல் சாசனத்தை மாற்றுவதற்கு நாடாளுமன்றத்தில் அவர்களுக்கு மூன்றில் இரண்டு பெரும்பான்மை கிடைக்காத காரணத்தினால்தான் அரசியல் சாசனம் இப்போது இருக்கிறதே தவிர இல்லையென்றால் அவர்கள் மாற்றிவிடுவார்கள்" என்றார்.




Click it and Unblock the Notifications
