பாஜகவுக்கு திமுக ஆதரவு? தொகுதி மறுவரையறை மசோதாவை ஆதரிக்க முடிவு? ஆனால் ஸ்டாலின் போட்ட ஒரே கண்டிஷன்
சென்னை: மத்திய அரசு மீண்டும் நாடாளுமன்றத்தை கூட்டியுள்ள நிலையில், தொகுதி மறுவரையறை விவகாரம் மீண்டும் பெரிதாக வெடித்துள்ளது. இதற்கிடையே இந்த விவகாரத்தில் பாஜகவுக்கு ஆதரவான நிலைப்பாட்டை திமுக எடுக்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. தமிழகத்திற்கு இப்போது கிடைக்கும் 7.2% என்ற பிரதிநிதித்துவம் உறுதி செய்யப்பட்டால் தொகுதி மறுவரையை மசோதாவை ஆதரிக்க திமுக முடிவ செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
தமிழகத்தில் ஆட்சியை இழந்துள்ள திமுக, தொகுதி மறுவரையறை விவகாரத்தில் தனது நிலைப்பாட்டை மாற்றிக்கொள்ள தயாராக இருப்பதாக வெளியாகியுள்ளது. ஒவ்வொரு முறையும் பாஜகவை கடுமையாக எதிர்க்க வேண்டிய அவசியமில்லை என்றும் தமிழகத்தின் தற்போதைய பிரதிநிதித்துவமான 7.2 சதவீதம் தொடர்ந்து உறுதி செய்யப்பட்டால் மசோதாவை ஆதரிக்க திமுக முடிவு செய்துள்ளதாக தெரிகிறது.

தொகுதி மறுவரையை மசோதா
லோக்சபாவில் இப்போது 543 இடங்கள் உள்ளன. அதை அதிகபட்சமாக 850 வரை உயர்த்துவது, மகளிருக்கு 33 சதவீத இடஒதுக்கீட்டை 2029 லோக்சபா தேர்தலுக்கு முன்பே அமல்படுத்துவது உள்ளிட்ட அரசியலமைப்பு திருத்த மசோதாக்களை மீண்டும் கொண்டுவர மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. இதற்காக நாடாளுமன்றத்தின் இரு அவைகளையும் மீண்டும் கூட்ட முடிவு செய்யப்பட்டுள்ளது. நவம்பர் 30ஆம் தேதி லோக்சபாவும், டிசம்பர் 2ஆம் தேதி ராஜ்யசபவாவும் கூட்டப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த சூழலில் தான், திமுக நிலைப்பாட்டில் மாற்றம் ஏற்பட்டுள்ளதாக தெரிகிறது. தமிழ்நாட்டிற்கு இப்போது இருக்கும் லோக்சபா தொகுதிகளின் பிரதிநிதித்துவம் அப்படியே பாதுகாக்கப்பட்டால் கூடுதல் தொகுதிகளை உருவாக்க திமுக ஆதரவு அளிக்கலாம் என்று அக்கட்சியின் இரண்டு மூத்த தலைவர்கள் தி இந்தியன் எக்ஸ்பிரஸ் ஊடகத்திடம் தெரிவித்துள்ளனர்.
தமிழ்நாடு தொகுதிகள்
தமிழகத்தில் தற்போது 39 லோக்சபா தொகுதிகள் உள்ளன. மொத்தமுள்ள 543 இடங்களில் இது சுமார் 7.18 சதவீதமாகும். தொகுதிகளின் எண்ணிக்கை அதிகரிக்கப்பட்டாலும் இந்த பங்கு குறையாமல் பாதுகாக்கப்பட வேண்டும் என்பதே திமுகவின் முக்கியக் கோரிக்கை. இது தொடர்பாக திமுக மூத்த தலைவர் ஒருவர் கூறுகையில், "தொகுதிகளின் எண்ணிக்கையை அதிகரிக்க நாங்கள் ஒப்புக்கொள்கிறோம். ஆனால், எங்களுக்கான பிரதிநிதித்துவம் அப்படியே இருக்க வேண்டும்" என்றார்.
நாடாளுமன்ற விவாதம்
முன்னதாக, நாடாளுமன்ற விவாதத்தின்போது மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா பேசுகையில், தமிழகத்தின் லோக்சபா தொகுதிகள் 39லிருந்து 59 ஆக உயரும் என்றும், இது தற்போதைய மாநிலத்தின் பிரதிநிதித்துவ பங்கை விட சற்று அதிகம் என்றும் கூறியிருந்தார். ஆனால், தொகுதி மறுவரையறை ஆணையம் இந்த உறுதிமொழியை பின்பற்றாவிட்டால் மாநிலங்களுக்கு என்ன வழி இருக்கிறது என்று திமுக எம்பி கனிமொழி கேள்வி எழுப்பியிருந்தார். எனவே, வாய்மொழியாக அளிக்கப்படும் உறுதியைவிட சட்ட பாதுகாப்பே வேண்டும் என்பதில் திமுக உறுதியாக இருப்பதாக அக்கட்சி தலைவர்கள் தெரிவித்துள்ளனர்.
திமுக நிலைப்பாடு
இந்த விவகாரத்தில் மத்திய அரசு தங்களை அணுகியதை திமுகவின் மூத்த தலைவர் ஒருவரும் உறுதிப்படுத்தியுள்ளார். அதேநேரத்தில், எல்லா விவகாரங்களிலும் பாஜகவின் 'ஒரே நாடு' அணுகுமுறைக்கும் தாங்கள் ஆதரவு தரவில்லை என தெளிவுபடுத்தினார்.
அவர் மேலும், "மாநில உரிமைகளுக்கான திமுகவின் அர்ப்பணிப்பு, பாஜகவின் 'ஒரே நாடு' அணுகுமுறைக்கு எதிரானது. ஆனால், அதற்காக அனைத்து விஷயங்களுக்கும் எதிர்ப்பு தெரிவிக்க தேவையில்லை. ஒவ்வொரு விவகாரத்தையும் தனித்தனியாகவே அணுக வேண்டும்" என்று அவர் கூறியுள்ளார். பாஜக மற்றும் காங்கிரஸ் ஆகிய இரு கட்சிகளையும் இப்போது ஒரே தூரத்தில் வைத்தே தாங்கள் அணுகுவதாக மற்றொரு தலைவர் குறிப்பிட்டார்.
ஸ்டாலின் கொண்டு வந்த தீர்மானம்!
கடந்த 2024 பிப்ரவரி 14ஆம் தேதி, அப்போதைய முதலமைச்சர் ஸ்டாலின் தமிழக சட்டப்பேரவையில் தொகுதி மறுவரையறைக்கு எதிரான தீர்மானத்தை கொண்டுவந்தார். 2026 மக்கள்தொகை கணக்கெடுப்பின் அடிப்படையில் தொகுதி மறுவரையறை செய்யும் திட்டத்தைக் கைவிட வேண்டும் என்று அதில் வலியுறுத்தப்பட்டது. மக்கள்தொகை அடிப்படையில் தொகுதிகளின் எண்ணிக்கையை அதிகரிக்க வேண்டிய சூழல் ஏற்பட்டாலும், 1971ஆம் ஆண்டு மக்கள்தொகை அடிப்படையாக வைத்து அந்த விகிதாச்சாரம் மாறாமல் இருக்க வேண்டும் என வலியுறுத்தியிருந்தார்.
மக்கள்தொகையை கட்டுப்படுத்துவதில் வெற்றி பெற்ற தென் மாநிலங்கள், அதற்காக அரசியல் ரீதியாக பாதிக்கப்பட கூடாது என்பதே அவரது அடிப்படை கோரிக்கை. இப்போதும் திமுக அதே நிலைப்பாட்டில் உள்ளது. தற்போதைய விகிதாச்சாரம் குறையாமல் இருந்தால் தொகுதி மறுவரையை தீர்மானத்திற்கு ஆதரவு தரலாம் என திமுக கருதுகிறது.


Click it and Unblock the Notifications
