விஜய் பெரம்பூர் வெற்றிக்கு எதிரான வழக்கு.. தள்ளுபடி செய்ய சென்னை ஐகோர்ட் மறுப்பு

Subscribe to Oneindia Tamil

சென்னை: பெரம்பூர் சட்டமன்ற தொகுதியில் தவெக தலைவர் விஜய் வெற்றி பெற்றதை எதிர்த்து தொடரப்பட்ட தேர்தல் வழக்கைத் தள்ளுபடி செய்ய சென்னை உயர் நீதிமன்றம் மறுத்துவிட்டது. முதல்வர் விஜய் தனது பிரமான பத்திரத்தில் வேண்டும் என்றே சொத்தை மறைத்தாரா என்பது விசாரணை நடத்தினால் தான் தெரிய வரும் என்று கூறிய ஐகோர்ட், வழக்கை தள்ளுபடி செய்யக்கோரிய விஜய்யின் மனுவை நிராகரித்தது.

நடந்து முடிந்த சட்டசபை தேர்தலில் விஜய் இரு தொகுதிகளில் போட்டியிட்டு இரண்டிலும் வென்றார். பெரம்பூர் தொகுதியில் களமிறங்கிய விஜய், சுமார் 53,000 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார். திருச்சி கிழக்கு தொகுதியிலும் விஜய் வென்றாலும் அந்த தொகுதியை அவர் ராஜினாமா செய்துவிட்டார்.

Vijay TVK Vijay Election Case

வழக்கு

இதற்கிடையே பெரம்பூர் தொகுதி வாக்காளர் எஸ். தினேஷ், விஜய் வெற்றியை செல்லாது என அறிவிக்க கோரி தேர்தல் வழக்கு தொடர்ந்தார். வேட்புமனுவுடன் தாக்கல் செய்த பிரமாண பத்திரத்தில் தனது சொத்து விவரங்கள் தொடர்பாக விஜய் பல தகவல்களை மறைத்துள்ளதாக அவர் குற்றம்சாட்டினார்.

வாதம்

குறிப்பாக, காஞ்சிபுரம் மாவட்டம் பண்ருட்டி கிராமத்தில் 3 ஏக்கர் நிலத்தை ரூ.30 கோடிக்கு வாங்கிய விவரத்தை தேர்தல் பிரமாண பத்திரத்தில் குறிப்பிடவில்லை என தினேஷ் தரப்பு வாதிட்டது. கொடைக்கானல் வில்பட்டி கிராமத்தில் உள்ள 50 சென்ட் நிலத்தை விஜய் தனது சொத்தாகக் குறிப்பிட்டிருந்தாலும், அது அரசுக்குச் சொந்தமான புறம்போக்கு நிலம் என்றும் குற்றம்சாட்டப்பட்டது. இதற்கு பதிலளித்த விஜய் தரப்பு, அந்த நிலத்தை வாங்கியதற்கான கிரயப் பத்திரத்தை நீதிமன்றத்தில் தாக்கல் செய்தது.

விஜய் தரப்பு கோரிக்கை

இந்த தேர்தல் வழக்கை ஆரம்ப நிலையிலேயே நிராகரிக்க வேண்டும் என்று விஜய் மனு தாக்கல் செய்தார். அவரது தரப்பில் மூத்த வழக்கறிஞர் கோபால் சங்கரநாராயணனும், தினேஷ் தரப்பில் வழக்கறிஞர் என்.சி. அசோக்குமாரும் ஆஜராகி வாதிட்டனர். சில சொத்து விவரங்கள் விடப்பட்டு இருப்பதையும் குற்றவியல் வழக்குகளை வேண்டும் என்றே மறைப்பதையும் ஒரே மாதிரி கருத முடியாது என்பது விஜய் தரப்பு வாதமாகும். மேலும், இது தேர்தல் முடிவுகளை பாதிக்கவில்லை எனவும் விஜய் தரப்பு தெரிவித்து..

விஜய் செல்வந்தர் என்பது வாக்காளர்களுக்கு ஏற்கெனவே தெரியும் என்றும் சில சொத்து விவரங்கள் விடுபட்டிருப்பதால் தேர்தல் முடிவு எப்படிப் பாதிக்கப்படும் என்றும் எழுப்பியது. விஜய்யின் சொத்து மதிப்பு ரூ.600 கோடிக்கும் அதிகமாக இருக்கும்போது, ரூ.30 கோடி சொத்து விவரத்தை மறைத்தது வாக்காளர்களின் முடிவை பாதிக்குமா என நீதிபதி வி. லட்சுமிநாராயணன் விசாரணையின்போது கேள்வி எழுப்பியிருந்தார்.

நிராகரித்த சென்னை ஐகோர்ட்

இந்த வழக்கில் தான் நீதிமன்றம் இன்று முக்கிய தீர்ப்பை வழங்கியது. ஆரம்ப நிலையிலேயே வழக்கை நிராகரிக்க வேண்டும் என்ற விஜய் கோரிக்கை நீதிமன்றம் நிராகரித்தது. விஜய் வெற்றிக்கு எதிரான வழக்கை தொடர்ந்து விசாரிக்க அனுமதி அளித்துள்ளது. விஜய் சொத்துகளை மறைத்தாரா என்பது விசாரித்தால் தான் தெரிய வரும் என்று ஐகோர்ட் தீர்ப்பளித்துள்ளது. இது விஜய் தரப்புக்கு மிக பெரிய ஒரு பின்னடைவாகவே பார்க்கப்படுகிறது. ஐகோர்ட் இதுபோல உத்தரவிட்டுள்ளதால் விஜய் வெற்றியை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கு விசாரணை இனமேல் தீவிரமடையும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+