4 முறை போன் செய்த ஸ்டாலின்! எடுக்காத ராகுல்! டெல்லியில் காங்கிரஸ் கதையையே முடிக்க முடிவெடுத்த திமுக
டெல்லி: வினை விதைத்தவன் வினை அறுப்பான்.. தினை விதைத்தவன் தினை அறுப்பான் என்பார்கள்.. காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல் காந்தி வினைகளை அறுப்பதற்கு தயாராகிவிட்டார் என்கிறார்கள் தேசிய அரசியல் நிபுணர்கள்.
டெல்லி அரசியலில் இப்போது பரபரப்பாகப் பேசப்படும் ஒரே விஷயம்.. மத்திய பாஜக அரசு மீண்டும் கொண்டு வரவுள்ள தொகுதி மறுசீரமைப்பு மசோதாவை திமுக ஆதரிக்கப் போகிறதா? என்பதுதான். நவம்பர் 30-ம் தேதி நாடாளுமன்றச் சிறப்புக் கூட்டத்தொடர் தொடங்கவுள்ள நிலையில், திமுகவின் இந்த நிலைப்பாடு மாற்றம் தேசிய அரசியலில் பெரிய புயலைக் கிளப்பியுள்ளது.

திமுக ஏன் நிலைப்பாட்டை மாற்றுகிறது?
மக்கள்தொகை அடிப்படையில் நாடாளுமன்றத் தொகுதிகளைப் பிரித்தால், தமிழ்நாடு போன்ற தென் மாநிலங்களுக்குப் பாதிப்பு ஏற்படும் எனத் திமுக ஆரம்பத்தில் இருந்தே கடுமையாக எதிர்த்து வந்தது. ஆனால், திமுக எப்போதுமே நியாயமான தொகுதி மறுசீரமைப்பு வேண்டும் என்றுதான் கேட்டு வந்தது. அதாவது, நாடாளுமன்றத்தில் மொத்த இடங்களை 850 ஆக உயர்த்தினாலும், தமிழ்நாட்டின் தற்போதைய 7.2 சதவீதப் பிரதிநிதித்துவம் குறையக்கூடாது என்பதே திமுகவின் முக்கியக் கோரிக்கை. தொகுதி மறுசீரமைப்பை அடியோடு திமுக எதிர்க்கவே இல்லை. மாறாக நியாயமான தொகுதி மறுசீரமைப்புதான் வேண்டும் என்றது!
இதையும் தாண்டி, கடந்த காலங்களில் திமுக இந்த மசோதாவை இவ்வளவு தீவிரமாக எதிர்த்ததற்கு இன்னொரு முக்கியக் காரணமும் இருந்தது. அது காங்கிரஸ் கட்சி மீதான நட்பு! ஏனெனில், வட மாநிலங்களில் பாஜக வலுவாக இருப்பதால், தொகுதி மறுசீரமைப்பு நடந்தால் காங்கிரஸ் கட்சிக்குத் தேசிய அளவில் பெரிய பின்னடைவு ஏற்படும். காங்கிரஸ் கட்சியே அழிந்து போகும். கூட்டணி தர்மத்திற்காகக் காங்கிரஸைக் காப்பாற்றத் திமுகவும் இந்த மசோதாவை எதிர்த்து வந்தது.
நம்பிக்கைத் துரோகமும், 2 அமைச்சர் பதவிகளும்!
ஆனால், 2026 தமிழக சட்டமன்றத் தேர்தலுக்குப் பிறகு அரசியல் காட்சிகள் மொத்தமாக மாறிவிட்டன. தேர்தலுக்கு முன்பு கூட்டணிப் பேச்சுவார்த்தைக்காக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், ராகுல் காந்தியை 4 முறை தொலைபேசியில் தொடர்பு கொள்ள முயன்றும், ராகுல் காந்தி அழைப்பை எடுக்கவில்லை எனக் கூறப்படுகிறது.
அப்போது முதலே விஜய்யின் தமிழக வெற்றிக் கழகம் மீது காங்கிரஸுக்கு ஒரு கண் இருந்தது. தேர்தலில் திமுக கூட்டணியில் நின்று 5 இடங்களில் வென்ற காங்கிரஸ், ஆட்சி அமைக்கும் அளவுக்குத் தவெக வளர்ந்ததும், திமுக கூட்டணியை விட்டு வெளியேறி விஜய் தலைமையிலான தவெக கூட்டணியில் ஐக்கியமானது. தேர்தல் நேரத்திலேயே காங்கிரஸ் தேர்தல் பணிகளை செய்யாமல் தவெகவிற்காக உள்ளடி வேலைகளை பார்த்ததாக தகவல்கள் உள்ளன.
தமிழக அமைச்சரவையில் வெறும் 2 அமைச்சர் பதவிகளைப் பெறுவதற்காக, தங்களுக்குத் தோள் கொடுத்த திமுகவைக் காங்கிரஸ் நட்டாற்றில் விட்டுவிட்டதாகத் திமுகவினர் கடுமையாகக் கொதித்தனர். முதுகில் குத்திவிட்டார்கள் எனக் கூறி இந்தியா கூட்டணியில் இருந்தும் திமுக வெளியேறியது.
போன் காலைத் தவிர்த்த ஸ்டாலின் - பதிலடி ஆரம்பம்!
இந்தக் கசப்புணர்வு சமீபத்தில் நடந்த சோனியா காந்தியின் சுயசரிதை புத்தக வெளியீட்டு விழாவிலும் எதிரொலித்தது. அந்த விழாவுக்கு அழைப்பு விடுக்க ராகுல் காந்தி போன் செய்தபோது, மு.க.ஸ்டாலின் அந்த அழைப்பை ஏற்க மறுத்துவிட்டார். என் உதவியாளரிடம் பேசினார்கள், நான் வாழ்த்துக் கடிதம் அனுப்பிவிட்டேன் என ஸ்டாலின் வெளிப்படையாகவே கூறினார்.
இப்போது அடுத்தகட்டமாக, ராகுல் காந்தி எடுத்த தவறான முடிவுக்கு அரசியல் ரீதியாகப் பதிலடி கொடுக்க ஸ்டாலின் தயாராகிவிட்டதாகத் தெரிகிறது. தமிழகத்தில் 2 அமைச்சர் பதவிகளுக்காகத் திமுகவைப் பகைத்துக் கொண்ட காங்கிரஸ், இப்போது டெல்லியில் தொகுதி மறுசீரமைப்பு மசோதாவைத் தடுத்து நிறுத்த முடியாமல் தவிக்கிறது.
பாஜகவுக்குக் கைகொடுக்கும் 22 எம்பிக்கள் பலம்!
நாடாளுமன்றத்தில் இந்த மசோதாவை நிறைவேற்ற பாஜகவுக்கு மூன்றில் இரண்டு பங்கு (சுமார் 360 எம்பிக்கள்) ஆதரவு தேவை. பாஜக கூட்டணியிடம் சுமார் 319 எம்பிக்கள் உள்ள நிலையில், திமுகவின் 22 மக்களவை எம்பிக்கள் மற்றும் சரத் பவார் கட்சியின் 8 எம்பிக்கள் ஆதரவு கிடைத்தால், மசோதா எளிதாக நிறைவேறிவிடும். இதைக் குறிப்பிட்டே காங்கிரஸ் எம்பி கார்த்தி சிதம்பரம் நேற்று, பாஜக அரசு தன் காய்களைச் சரியாக நகர்த்திவிட்டது போலத் தெரிகிறது எனச் சமூக வலைதளத்தில் பதிவிட்டுள்ளார்.
தமிழ்நாட்டின் 7.2% இடங்களுக்குப் பாதிப்பு வராது என புதிய மசோதாவில் எழுத்துப்பூர்வ உத்தரவாதம் இருந்தால், அதை ஆதரிக்கத் தயார் என மூத்த திமுக தலைவர்கள் வெளிப்படையாகவே அறிவித்துள்ளனர். இதன் மூலம், தமிழ்நாட்டின் உரிமையையும் பாதுகாத்து, அதே சமயம் தங்களுக்குத் துரோகம் செய்த காங்கிரஸுக்குத் தேசிய அளவில் மிகப்பெரிய அரசியல் பாடம் புகட்ட ஸ்டாலின் வியூகம் வகுத்துள்ளார்.


Click it and Unblock the Notifications
