"லோக்சபா இடங்கள் 50% அதிகரிப்பு.." தொகுதி மறுசீரமைப்பு மசோதாவுக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல்
டெல்லி: பிரதமர் மோடி தலைமையில் இன்று நடந்த அமைச்சரவை கூட்த்தில் தொகுதி மறுவரையறை மற்றும் மகளிர் இட ஒதுக்கீடு மசோதாவுக்கு ஒப்புதல் தரப்பட்டுள்ளது. மக்கள் தொகை அடிப்படையில் இல்லாமல்.. லோக்சபா இடங்களை அப்படியே 50% அதிகரிக்கும் வகையில் இந்த மசோதா மாற்றப்பட்டுள்ளது.
மக்களவையில் மகளிருக்கு 33 சதவீத இடஒதுக்கீட்டை 2029 லோக்சபா தேர்தலுக்கு முன்பே அமல்படுத்துவதுடன், தொகுதி மறுவரையறை மூலம் மக்களவை உறுப்பினர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கும் திட்டத்தையும் மத்திய அரசு மீண்டும் கையில் எடுத்துள்ளது. இதற்காகவே அடுத்த வாரம் மீண்டும் நாடாளுமன்றத்தை கூட்ட மத்திய அரசு முடிவு செய்துள்ளது.

மோடி அமைச்சரவை
இன்றைய தினம் பிரதமர் மோடி தலைமையில் மத்திய அமைச்சரவை கூடியுள்ளது. அதில் இந்த சட்ட மசோதா குறித்து விவாதிக்கப்படும் எனவும் இந்த மசோதாவுக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் தரும் எனவும் தகவல் வெளியாகியுள்ளது. பிற்கபல் 1 மணிக்கு இந்த கூட்டம் கூடியுள்ள நிலையில், இதில் தொகுதி மறுவரையறை மசோதா மற்றும் மகளிர் இட ஒதுக்கீடு மசோதாவில் உள்ள திருத்தங்கள் குறித்து விவாதிக்கப்பட்டன. அதைத் தொடர்ந்து இந்த மசோதாவுக்கு அமைச்சரவை ஒப்புதல் கொடுத்துள்ளது.
தொகுதி மறுவரையறை மசோதாவை மக்கள் தொகை கணக்கெடுப்புடன் இணைக்காமல் தனித்து வைக்கவும், லோக்சபா தொகுதிகளின் எண்ணிக்கையை 50% அதிகரிக்கவும் அமைச்சரவை முடிவெடுக்கக்கூடும். இதன் மூலம் தற்போதுள்ள 543 லோக்சபா உறுப்பினர்களின் எண்ணிக்கையை அதிகபட்சமாக 850 வரை உயர்த்த மத்திய அரசு திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது. இதற்கு எதிர்க்கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்து வரும் போதிலும், இதை நிறைவேற்றுவதில் மத்திய அரசு உறுதியாக உள்ளது.
காங்கிரஸ் ஆலோசனை
இது ஒரு பக்கம் இருக்க நாடாளுமன்ற சிறப்பு கூட்டத்தொடரை எப்படி அணுகுவது என்பது குறித்து ஆலோசிக்க காங்கிரஸ் நாடாளுமன்ற குழு கூட்டமும் இன்று மாலை 4.30 மணிக்கு டெல்லியில் கூடுகிறது. சிறப்புக் கூட்டத்தொடரை கூட்டுவதற்கு பதிலாக வழக்கமான குளிர்கால கூட்டத்தொடரை நடத்த வேண்டும் என்று காங்கிரஸ் மூத்த தலைவர் மணீஷ் திவாரி வலியுறுத்தியுள்ளார்.
ஏற்கெனவே தோல்வியடைந்த மசோதாக்களைக்கூட குளிர்க்கால கூட்டத்தொடரில் மத்திய அரசு மீண்டும் கொண்டுவர முடியும் என்பதால், அதற்காக தனியாக சிறப்பு கூட்டத்தொடரை கூட்ட வேண்டிய அவசியமில்லை என்றும் அவர் கூறியுள்ளார். வழக்கமான குளிர்கால கூட்டத்தொடரை கூட்டி, அதில் தேவையான மசோதாக்களை மீண்டும் தாக்கல் செய்யலாம் என்பதே அவரது வாதம்.
அமைச்சர் கிரண் ரிஜிஜு
மக்களவை நவம்பர் 30ஆம் தேதியும், மாநிலங்களவை டிசம்பர் 2ஆம் தேதியும் மீண்டும் கூடும் என்று நாடாளுமன்ற விவகாரத்துறை அமைச்சர் கிரண் ரிஜிஜு அறிவித்துள்ளார். அத்தியாவசிய அரசு அலுவல்களை மேற்கொள்வதற்காக இரு அவைகளையும் மீண்டும் கூட்டுமாறு சபாநாயகர் மற்றும் ராஜ்யசபா தலைவரிடம் அரசு கோரிக்கை வைத்தாகவும் அதை அவர்கள் ஏற்றுக்கொண்டதாகவும் அமைச்சர் ரிஜிஜு தெரிவித்தார். டிசம்பர் 3ஆம் தேதிக்குள் இந்த கூட்டத்தொடர் நிறைவடையும் என எதிர்பார்க்கப்படுகிறது.
100 நாட்கள் ஆகிவிட்டது
இதற்கிடையே கடந்த மழைக்காலக் கூட்டத்தொடர் முடிந்து 100 நாட்களுக்கும் மேலாகியும், அது முறைப்படி முடிவுக்கு கொண்டுவரப்படவில்லை என்ற சர்ச்சையும் எழுந்துள்ளது. அதாவது எப்போதும் இறுதி நாளில் அவை தலைவர், அவையை காலவரையின்றி ஒத்திவைப்பதாக அறிவிப்பார். அதைத் தொடர்ந்து சில நாட்களில் குடியரசு தலைவர் அதிகாரப்பூர்வமாக ஒரு கூட்டத்தொடர் நிறைவடைவதாக அறிவிப்பார். அந்த அறிவிப்பு 100 நாட்களை கடந்தும் வராமல் இருப்பதே இத்தனை நாட்களாக விவாதமாக இருந்தது. இந்த சூழலில் தான் இப்போது சிறப்பு கூட்டத்தொடரை கூட்டுவது தொடர்பான அறிவிப்பை மத்திய அரசு வெளியிட்டுள்ளது.


Click it and Unblock the Notifications
