TASMAC: டாஸ்மாக் கடைகளை இனி கூட்டுறவுச் சங்கங்களும் நடத்தலாம்.. தமிழக அரசு திடீர் அறிவிப்பு
சென்னை: தமிழகத்தில் டாஸ்மாக் மதுபானக் கடைகளை நடத்துவதில் முக்கிய மாற்றத்தை அரசு அறிவித்துள்ளது. டாஸ்மாக் நிறுவனம் இதுவரை நேரடியாக நடத்தி வந்த மதுபான சில்லறை விற்பனைக் கடைகளை, இனி அதன் முகவர்களாகச் செயல்படும் கூட்டுறவுச் சங்கங்கள் மூலமாகவும் நடத்த அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. இதற்கான அரசாணையை உள்துறை, மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத் துறை வெளியிட்டுள்ளது.
தமிழகத்தில் தற்போது 4,048 டாஸ்மாக் மதுபான சில்லறை விற்பனைக் கடைகள் செயல்பட்டு வருகின்றன. இந்தக் கடைகளின் மதுபான விற்பனையானது டாஸ்மாக் நிறுவனத்தின் கட்டுப்பாட்டில் தான் உள்ளது. மாநிலம் முழுவதும் உள்ள டாஸ்மாக் கடைகளில் விற்பனையாளர்கள், உதவியாளர்கள், சூப்பர்வைசர் என 22,877 பேர் பணியாற்றி வருகின்றனர். இந்நிலையில், டாஸ்மாக் மதுபான கடைப் பணியில் முக்கிய மாற்றம் செய்து அரசு அறிவித்துள்ளது.

கூட்டுறவுச் சங்கங்கள் மூலமாக விற்பனை
டாஸ்மாக் நிறுவனத்தின் முகவர்களாக செயல்பட்டு வரும் கூட்டுறவுச் சங்கங்களும் இனி மதுபானக் கடைகளை நடத்துவதற்கு தமிழக அரசு அனுமதி வழங்கியுள்ளது. இதுகுறித்து உள்துறை, மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத் துறை வெளியிட்டுள்ள அரசாணையில் கூறியுள்ளதாவது: தமிழ்நாட்டில் மதுபான சில்லறை விற்பனைக் கடைகளை டாஸ்மாக் நிறுவனம் நேரடியாக நடத்தலாம். அதேபோல், டாஸ்மாக் நிறுவனத்தின் முகவர்களாக செயல்படும் கூட்டுறவு சங்கங்கள் மூலமாகவும் இந்தக் கடைகளை நடத்தலாம்.
இதன்படி, ஒரு மாவட்டத்தில் உள்ள மதுபான சில்லறை விற்பனைக் கடைகளுக்கான அங்கீகாரத்தை டாஸ்மாக் நிறுவனத்தின் நிர்வாக இயக்குனர் வழங்க வேண்டும். அந்த அங்கீகாரத்தில், சம்பந்தப்பட்ட கடை டாஸ்மாக் நிறுவனத்தால் நேரடியாக நடத்தப்படுகிறதா அல்லது டாஸ்மாக் நிறுவனத்தின் முகவராக செயல்படும் கூட்டுறவு சங்கத்தின் மூலம் நடத்தப்படுகிறதா என்பதும் குறிப்பிடப்பட வேண்டும்.
ஆட்சியருக்கு பட்டியல்
மேலும், ஒவ்வொரு மதுபானக் கடைக்கும் தனித்தனியாக அங்கீகாரம் வழங்கும் நடைமுறையும் வகுக்கப்பட்டுள்ளது. இதற்கான அதிகாரம் சம்பந்தப்பட்ட மாவட்ட டாஸ்மாக் மேலாளருக்கு வழங்கப்பட்டுள்ளது. ஒரு மாவட்டத்தில் செயல்படும் அனைத்து மதுபானக் கடைகளின் பட்டியலையும் டாஸ்மாக் நிறுவனம் சம்பந்தப்பட்ட ஆட்சியருக்கு வழங்க வேண்டும். அந்தப் பட்டியலில் டாஸ்மாக் நிறுவனம் நேரடியாக நடத்தும் கடைகள், கூட்டுறவு சங்கங்கள் மூலம் நடத்தப்படும் கடைகள் என்ற விவரங்கள் தனித்தனியாக இடம்பெற வேண்டும்.
10 நாட்களுக்குள் தகவல்
புதிதாக ஒரு மதுபானக்கடை செயல்பட தொடங்கினால், அந்தக் கடை தொடங்கிய 10 நாட்களுக்குள் அதன் விவரங்களை கலெக்டரிடம் தெரிவிக்க வேண்டும். அதேபோல், ஏற்கனவே செயல்பட்டு வரும் ஒரு கடையின் செயல்பாட்டில் மாற்றம் ஏற்பட்டாலும், அந்த மாற்றம் குறித்த விவரத்தை 10 நாட்களுக்குள் கலெக்டரிடம் தெரிவிக்க வேண்டும்.
மதுபான சில்லறை விற்பனையில் டாஸ்மாக் நிறுவனத்தின் கட்டுப்பாடு தொடர்ந்து இருக்கும். ஆனால், கடைகளை நடத்தும் பணியில் கூட்டுறவு சங்கங்களுக்கும் வாய்ப்பு அளிக்கப்படுகிறது. கூட்டுறவு சங்கங்களுக்கு தனியாக மதுபான விற்பனை உரிமம் வழங்கப்படவில்லை. அவை டாஸ்மாக் நிறுவனத்தின் முகவர்களாக செயல்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.


Click it and Unblock the Notifications
