தவெக எம்எல்ஏ அருள் விக்னேஷ் கைது! எம்எல்ஏ பதவி பறிபோகுமா? மக்கள் பிரதிநிதித்துவ சட்டம் சொல்வது என்ன?
சென்னை: பெண் ஆட்சியருக்கு ஆபாச மெசேஜ் அனுப்பிய விவகாரத்தில் தவெக எம்எல்ஏ அருள் விக்னேஷ் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், அவரின் எம்எல்ஏ பதவி தானாகவே பறி போய்விடுமா என்ற கேள்வி மக்கள் மத்தியில் எழுந்துள்ளது. அது தொடர்பாக மக்கள் பிரதிநிதித்துவ சட்டம் சொல்வது என்ன என்பது தொடர்பாக விரிவாக பார்க்கலாம்.
பெண் ஆட்சியருக்கு ஆபாச மெசேஜ் அனுப்பிய விவகாரத்தில் கள்ளக்குறிச்சி தவெக எம்எல்ஏ அருள் விக்னேஷ் கைது செய்யப்பட்டுள்ளார். தேசிய மகளிர் ஆணையம் மற்றும் நீதிமன்ற தலையீட்டுக்கு பின் அருள் விக்னேஷ் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது. இதனைத் தொடர்ந்து திருப்பூர் எஸ்பி சிருஷ்டி சிங் தலைமையில் விசாரணை நடைபெற்றது.

இந்த நிலையில் அருள் விக்னேஷ் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்ட 4 நாட்களுக்கு பின், காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளார். இதனைத் தொடர்ந்து அருள் விக்னேஷ் மருத்துவ பரிசோதனைக்கு பின், சிறையில் அடைக்கப்படுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதனிடையே அருள் விக்னேஷ் கைது செய்யப்பட்டுள்ளதால், அவரின் எம்எல்ஏ பதவி பறிபோகுமா என்ற கேள்வி எழுந்துள்ளது.
மக்களிடையே அருள் விக்னேஷ் வகித்து வரும் எம்எல்ஏ பதவி பறிபோகுமா என்ற சந்தேகமும் வலுத்துள்ளது. ஆனால் மக்கள் பிரதிநிதித்துவ சட்டத்தின் படி அருள் விக்னேஷ் கைது செய்யப்பட்டதால், அவரின் எம்எல்ஏ பதவி தானாகவே பறிபோகாது. தற்போது வரை அருள் விக்னேஷ் குற்றம் சாட்டப்பட்டவர் தான். இதனால் எம்எல்ஏ பதவியை அருள் விக்னேஷ் இழக்க மாட்டார்.
மாறாக ஒரு வழக்கில் அவர் குற்றவாளி என்று நீதிமன்றத்தால் நிரூபிக்கப்பட்டு, 2 ஆண்டுகள் அல்லது அதற்கு மேற்பட்ட காலத்திற்கு சிறை தண்டனை விதிக்கப்பட்டால் மட்டுமே அவர் எம்எல்ஏ பதவியை இழக்க நேரிடும். அதற்கு சிறந்த உதாரணம் என்னவென்றால், கடந்த லோக்சபா தேர்தலுக்கு முன் 2023ல் அவதூறு வழக்கு ஒன்றில் ராகுல் காந்திக்கு சூரத் நீதிமன்றம் 2 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்தது.
இதனால் ராகுல் காந்தி லோக் சபா எம்பி பதவியில் இருந்து தகுதி நீக்கம் செய்யப்பட்டார். ஆனால் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்ட பின், அவரின் தண்டனை நிறுத்தி வைக்கப்பட்டது. இதனால் ராகுல் காந்திக்கு மீண்டும் எம்பி பதவி அளிக்கப்பட்டது. தற்போது இந்த வழக்கில் அருள் விக்னேஷ் குற்றவாளி என்று நிரூபிக்கப்பட்டால், அவர் தானாகவே எம்எல்ஏ பதவியை இழப்பார்.
அதேபோல் மக்கள் பிரதிநிதித்துவச் சட்டத்தின் பிரிவுகள் 8(1) மற்றும் 8(2)ன் கீழ் பட்டியலிடப்பட்டுள்ள லஞ்சம் வாங்குதல், சமூகங்களுக்கு இடையில் பகைமையை தூண்டுதல், வரதட்சணைத் தடுப்புச் சட்டத்தின் கீழான குற்றங்கள் போன்ற சில குறிப்பிட்ட குற்றங்களுக்கு, குறைந்த காலச் சிறைத் தண்டனை அல்லது சிறைத் தண்டனை அல்லாத பிற தண்டனைகள் விதிக்கப்பட்டாலும் கூட பதவி தகுதிநீக்கம் செய்யப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.




Click it and Unblock the Notifications
