குழப்பிவிட்டாரா உதயநிதி ஸ்டாலின்? அந்த மென்மையான பேச்சின் அரசியல் கணக்கு.. தடுமாறுகிறதா திமுக?
சென்னை: தொகுதி மறுவரையறை விவகாரத்தில் திமுக எடுத்துள்ள நிலைப்பாடு இப்போது அரசியல் வட்டாரத்தில் கவனத்தைப் பெற்றுள்ளது. குறிப்பாக, சட்டமன்றத்தில் உதயநிதி ஸ்டாலின் பேசிய விதம் பல கேள்விகளை எழுப்பியுள்ளது. தவெகவும் காங்கிரஸும் இணைந்து திமுகவுக்கு நெருக்கடி கொடுக்கிறதா? இந்த விவகாரத்தில் திமுக ஏன் தடுமாறுகிறது? அரசியல் பார்வையாளர் தராசு ஷ்யாம் பேட்டியொன்றில் இதுகுறித்து தன்னுடைய கருத்தை தெரிவித்துள்ளார்.
The TN Voice நேர்காணலில் பேசியிருக்கும் மூத்த பத்திரிகையாளர் தராசு ஷ்யாம், "தவெகவும் காங்கிரஸும் இணைந்து திமுகவுக்கு அரசியல் நெருக்கடி கொடுக்கிறார்கள். திமுக பாஜகவுக்கு ஆதரவான மனநிலையில் இருக்கிறது என்ற கருத்தை உருவாக்குகிறார்கள். அதனால்தான் சட்டமன்றத்தில் உதயநிதி ஸ்டாலின் பேசியதில் குழப்பம் தெரிந்தது.

உதயநிதி ஸ்டாலின் குழப்பம்?
காங்கிரஸின் தேசிய நிலைப்பாடு வேறு.. தமிழ்நாடு காங்கிரஸின் நிலைப்பாடு வேறு.. தெலங்கானா, கர்நாடகா மாநிலங்களில் காங்கிரஸ் இந்த விவகாரத்தை எதிர்க்கவில்லை. ஆனால், ராகுல் காந்தி திமுக பாஜகவை எதிர்க்க வேண்டும் என்று வலியுறுத்துகிறார். திமுக பாஜகவுக்கு ஆதரவாக இருக்கிறதா, எதிராக இருக்கிறதா என்ற குழப்பம் இருக்கும் நேரத்தில், இந்தத் தனித் தீர்மானம் அந்த நெருக்கடியை மேலும் அதிகரித்திருக்கிறது.
கடந்த முறை இதே மசோதாவை திமுகதான் இந்தியாவிலேயே மிகவும் தீவிரமாக எதிர்த்தது. மு.க. ஸ்டாலின் அனைத்து கட்சிக் கூட்டத்தைக் கூட்டி எதிர்ப்பை வெளிப்படுத்தினார். நாடாளுமன்றத்திலும் திமுக கடுமையாக எதிர்த்தது. அப்படியிருக்கும்போது, இப்போது உதயநிதி ஸ்டாலின் சட்டமன்றத்தில் மிகவும் அமைதியாக, "நாங்கள் இதை வரவேற்கிறோம்" என்று பேசியது ஏன் என்ற கேள்வி எழுகிறது.
திமுக தனித் தீர்மானம்
திமுக கொண்டுவந்த தனித் தீர்மானத்திலேயே பல குழப்பங்கள் இருக்கின்றன. ஏற்கெனவே இருக்கும் மக்களவை தொகுதிகளின் எண்ணிக்கையே தொடர வேண்டும் என்று அதில் கூறப்பட்டுள்ளது. ஆனால், நாடாளுமன்றத்தில் எத்தனை உறுப்பினர்கள் இருக்க வேண்டும் என்பதைத் தமிழ்நாடு மட்டும் முடிவு செய்ய முடியாது. ஆந்திரா, கேரளா, உத்தரப் பிரதேசம், ராஜஸ்தான் உள்ளிட்ட மாநிலங்களும் தங்களுக்குக் கூடுதல் தொகுதிகள் வேண்டும் என்று கேட்கலாம்.
இப்போது 543 மக்களவைத் தொகுதிகள் இருக்கின்றன. அவற்றின் எண்ணிக்கை 750 ஆக உயர்த்தப்பட்டாலும் தமிழ்நாட்டுக்கு 39 தொகுதிகள்தான் வேண்டும் என்று சொல்ல முடியுமா? அப்படியொரு தீர்மானத்தால் தமிழ்நாட்டுக்கு என்ன நன்மை கிடைக்கும்?
திமுக இந்தத் தீர்மானத்தைக் கொண்டுவந்ததற்குப் பின்னால் ஒரே நாடு, ஒரே தேர்தல் திட்டம் வந்துவிடக்கூடாது என்ற அச்சமும் இருக்கிறது. அதே நேரத்தில், பாஜகவுக்கு ஆதரவானவர்கள் என்ற முத்திரை தங்கள் மீது விழுந்துவிடக்கூடாது என்றும் நினைக்கிறார்கள்.
3 முக்கியமான குழப்பங்கள்
அரசின் தனித் தீர்மானத்தில் 3 முக்கியமான குழப்பங்கள் இருக்கின்றன. முதலாவது, தொகுதி மறுவரையறையை நிறுத்திவைக்க வேண்டும் என்று ஒரு மாநிலம் மட்டும் கேட்க முடியாது. இரண்டாவதாக, பெண்களுக்கான 33 சதவீத இடஒதுக்கீட்டில் ஓபிசி, எஸ்சி, எஸ்டி பிரிவினருக்கான இடஒதுக்கீடு எப்படி இருக்கும் என்பதற்குத் தெளிவான விளக்கம் இல்லை. மூன்றாவது, தீர்மானத்தில் இடம்பெற்றிருந்த "ஏகமனதாக" என்ற வார்த்தை.
இந்த வார்த்தையை நீக்க வேண்டும் என்று பாமக உறுப்பினர் கணேஷ்குமார் தெளிவாகக் கேட்டார். அது நீக்கப்பட்டதா என்பதுகூடத் தெரியவில்லை. ஆனால், ஏற்போரே அதிகம் என்பதால் தீர்மானம் நிறைவேற்றப்பட்டதாக சபாநாயகர் அறிவித்துவிட்டார்.
திமுக பாஜகவின் வலையில் ?
திமுக இந்தத் தீர்மானத்தை எதிர்த்திருந்தாலும் அது நிறைவேறியிருக்கும். அப்போது திமுக பாஜகவின் வலையில் சிக்கிவிட்டது, பாஜகவுக்கு ஆதரவான நிலைப்பாட்டை எடுத்துவிட்டது என்ற விமர்சனம் எழுந்திருக்கும். அதனால் திமுக இப்போது சாமர்த்தியமாகப் பின்வாங்கியிருக்கிறது. போரில் சில நேரங்களில் பின்வாங்குவதும் ஒரு தந்திரம்தான்.
ஆனால், அந்தப் பின்வாங்கலையே தவெக அரசியல் நெருக்கடியாக மாற்றுகிறது. தவெக தலைவர் திமுகவுக்கு நன்றி தெரிவித்திருக்கிறார். அதே நேரத்தில், நாடாளுமன்றத்தில் சட்ட மசோதா விவாதத்துக்கு வரும்போது திமுக வெளிநடப்பு செய்யக்கூடாது. எதிர்த்து வாக்களிக்க வேண்டும் என்று ஆதவ் அர்ஜுனா வலியுறுத்தியிருக்கிறார். எதிர்த்து வாக்களித்தால்தான் மசோதாவைத் தோற்கடிக்க முடியும் என்பதுதான் அவரது வாதம்.
திமுக வெளிநடப்பு செய்தால்?
தவெகவுக்கு மக்களவையில் உறுப்பினர்கள் இல்லை. காங்கிரஸ் ஏற்கெனவே எதிர்த்து வாக்களிக்க வாய்ப்புள்ளது. திமுக வெளிநடப்பு செய்தாலும் மட்டும் மசோதா தோல்வியடையாது. அதற்குச் சமாஜ்வாதி கட்சியின் ஆதரவும் தேவைப்படும். இந்தச் சூழலில் திமுக வெளிநடப்பு செய்துவிடக்கூடாது என்ற கோணத்தில் தவெக இந்த விவகாரத்தை இணைக்கிறது.
திமுகவின் அணுகுமுறை பாஜகவை எதிர்ப்பதில் மென்மையாக மாறியிருக்கிறது. இந்தத் தீர்மானத்தால் பெரிய பலன் எதுவும் கிடையாது. இதன் நோக்கம் திசைதிருப்புவதுதான். இந்த விவகாரத்திலிருந்து புத்திசாலித்தனமாக விலகிக்கொள்ள வேண்டும் என்று திமுக நினைக்கிறது. வெளிநடப்பு செய்தால் விமர்சனம் வரும் என்பதால் தீர்மானத்தை ஆதரித்துவிட்டு விலகிச் செல்கிறது.
மென்மையான பேசிய உதயநிதி
அதனால்தான் உதயநிதி ஸ்டாலின் இந்த விவகாரத்தில் கடுமையாகப் பேசுவார் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், மிகவும் மென்மையாகப் பேசியிருக்கிறார். எதிர்க்கட்சித் தரப்பில் பாமகவின் கணேஷ்குமார்தான் தெளிவாகத் தனது கருத்துகளை முன்வைத்தார். தீர்மானத்தில் 'ஏகமனதாக' என்ற வார்த்தையை நீக்க வேண்டும் என்றும் வலியுறுத்தினார்.
முதலமைச்சர் விஜய் கூட்டிய மக்களவை உறுப்பினர்கள் கூட்டத்தை திமுக புறக்கணித்தது. பாமக, தேமுதிக, அதிமுக ஆகிய கட்சிகளும் அந்தக் கூட்டத்தைப் புறக்கணித்தன. ஆனால், அந்தக் கூட்டத்தைப் புறக்கணித்த கட்சிகளில் திமுக மட்டும்தான் இப்போது அரசின் தனித் தீர்மானத்துக்கு ஆதரவு தெரிவித்திருக்கிறது. சனிக்கிழமை நடந்த கூட்டத்துக்கும் புதன்கிழமை கொண்டுவரப்பட்ட தீர்மானத்துக்கும் இடையில் ஏதோ ஒரு வகையில் பேச்சுவார்த்தை நடந்திருக்கிறது.
இந்தக் குறிப்பிட்ட விவகாரத்தில் திமுக தடுமாறிவிட்டது. தவெக அரசு திமுகவின் அரசியல் கவசத்தில் ஒரு ஓட்டையையும், அதன் அரசியல் படைபலத்தில் ஒரு பலவீனத்தையும் வெளிப்படுத்தியிருக்கிறது" என்றெல்லாம் மூத்த பத்திரிகையாளர் ஷ்யாம் கருத்து தெரிவித்துளளார்.




Click it and Unblock the Notifications
