எனக்கு இன்னும் 50 வயசு ஆகலப்பா.. பேசி பேசியே வயசை ஏத்திட்டாங்க.. கலகலப்பாக பேசிய உதயநிதி ஸ்டாலின்!
சென்னை: தனக்கு 50 வயது அல்ல.. 49 வயது தான் ஆகிறது என்று எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் கலகலப்பாக பேசியுள்ளார். அனைவரும் பேசிப் பேசியே என்னுடைய வயதை உயர்த்திவிட்டார்கள் என்று கூறிய உதயநிதி ஸ்டாலின், வாழ்த்து சொன்ன அனைவருக்கும் நன்றி என்றும் கூறியுள்ளார்.
எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலினின் 49வது பிறந்தநாள் இன்று திமுகவினரால் கொண்டாடப்பட்டு வருகிறது. இதனையொட்டி திமுக தலைவர் ஸ்டாலினை சந்தித்து உதயநிதி ஸ்டாலின் வாழ்த்து பெற்றார். இதன்பின் அண்ணா நினைவிடம், கலைஞர் கருணாநிதி நினைவிடத்திற்கு சென்று மரியாதை செலுத்தினார். பின்னர் திக தலைவர் கி.வீரமணியை சந்தித்து பிறந்தநாள் வாழ்த்து பெற்றார்.

இதனைத் தொடர்ந்து சென்னையில் முன்னாள் அமைச்சர் சேகர்பாபு சார்பாக நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழாவிற்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. அதில் உதயநிதி ஸ்டாலின் பங்கேற்றார். அப்போது உதயநிதி ஸ்டாலினுக்கு 50வது பிறந்தநாள் என்று முழங்கினர். இதன்பின் உதயநிதி ஸ்டாலின் பேசுகையில், எனக்கு இது 50வது பிறந்தநாள் கிடையாது.
49 வயது தான் ஆகிறது.. பேசிப் பேசியதே ஒரு வயதை ஏற்றிவிட்டார்கள்.. இந்த ஆட்சியில் எது உயர்கிறதோ இல்லையோ, வயதை ஏற்றிவிடுகிறார்கள். சேகர்பாபு ஒவ்வொரு ஆண்டும் பெரியார் திடலுக்கு வரும் போது நலத்திட்ட நிகழ்ச்சியை நடத்துவது வழக்கம். எப்போதும் போல் வரும் போது, பேசுவதற்கு நேரம் இல்லை என்று சொல்லி கொண்டே வருவேன்.
வழக்கம் போல் இன்று உங்களை பார்த்த பின், ஒரு நிமிடமாவது பேசிவிட்டு செல்ல வேண்டும் என்று தான் பேசுகிறேன். வாழ்த்து சொன்ன அனைவருக்கும் என் நன்றியை தெரிவித்து கொள்கிறேன் என்று பேசியுள்ளார். உதயநிதி ஸ்டாலினின் பேச்சு அங்கிருந்த திமுகவினர் மத்தியில் உற்சாகத்தை ஏற்படுத்தியது.
திமுகவினர் பலரும் உதயநிதி ஸ்டாலின் பிறந்தநாளுக்கு வைத்துள்ள பேனரில் 50வது பிறந்தநாள் என்று அடித்துள்ளனர். தற்போது உதயநிதி ஸ்டாலின் எனக்கு 49 வயது தான் ஆகிறது என்று கூறி இருப்பது கலகலப்பான சம்பவமாக அமைந்தது. இம்முறை உதயநிதி ஸ்டாலினின் பிறந்தநாளை இளைஞரணி நிர்வாகிகள் கூடுதல் உற்சாகத்துடன் கொண்டாடி வருகின்றனர்.


Click it and Unblock the Notifications
