கோடிகள் கொட்டியும் வேஸ்ட்.. வெள்ளை யானையாக மாறும் சென்னை - பெங்களூர் எக்ஸ்பிரஸ்வே.. என்னாச்சு?
பெங்களூர்: சென்னை மற்றும் பெங்களூர் ஆகிய இரு பெருநகரங்களுக்கு இடையிலான பயண நேரத்தைக் குறைக்கப் பல ஆயிரம் கோடி ரூபாய் செலவில் பிரம்மாண்டமான நெடுஞ்சாலைத் திட்டங்கள் தொடங்கப்பட்டன. ஆனால், பணிகள் முழுமையடையாமல் ஆமை வேகத்தில் நடப்பதால், ஏற்கனவே கட்டி முடிக்கப்பட்ட சாலைப் பகுதிகள்கூட போதிய வாகனப் போக்குவரத்து இன்றி 'வெள்ளை யானை' போலப் பயனற்றுக் கிடக்கும் அவல நிலை ஏற்பட்டுள்ளது.
ஒரு மிகப்பெரிய திட்டம் பல கோடி கொடுத்து கட்டப்பட்டு பின்னர் பெரிய பயன்பாடின்றி இருந்தால் அதை வெள்ளை யானை அதாவது white elephant என்பார்கள். அப்படித்தான் இந்த சாலை மாறி உள்ளது.

பாதி முடிந்தும் பயனில்லாத சாலைகள்
சென்னை - பெங்களூர் இடையிலான 262 கிலோமீட்டர் தூரப் புதிய விரைவுச்சாலைத் திட்டத்தில், கர்நாடக மாநிலப் பகுதியான ஹோஸ்கோட்டே முதல் பேத்தமங்கலா வரையிலான 71.7 கிலோமீட்டர் சாலையும், ஆந்திரப் பிரதேசத்தின் பைரெட்டிபள்ளி வரையிலான 25 கிலோமீட்டர் சாலையும் ஏற்கனவே திறக்கப்பட்டுவிட்டன. சுமார் 100 கிலோமீட்டர் தூரத்திற்குச் சாலை பளபளப்பாகத் தயாராக இருந்தாலும், தமிழ்நாடு பகுதியில் பணிகள் இன்னும் முடியவில்லை.
குறிப்பாக, தமிழ்நாட்டில் அரக்கோணம் முதல் காஞ்சிபுரம் வரையிலான 25.5 கிலோமீட்டர் சாலைப் பணி ஒப்பந்ததாரர் பிரச்சனை மற்றும் நீதிமன்ற வழக்குகளால் பாதியிலேயே முடங்கிக் கிடக்கிறது. இதனால், கர்நாடகா மற்றும் ஆந்திராவில் திறக்கப்பட்டுள்ள புதிய சாலைகளில் பயணிக்கும் வாகன ஓட்டிகள், மீண்டும் பழைய குறுகலான கிராமப்புறச் சாலைகளுக்குள்ளேயே திரும்ப வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது. சாலை முழுமையாக இணைக்கப்படாததால், முடிக்கப்பட்ட பகுதிகளிலும் எதிர்பார்த்த அளவு வாகனங்கள் செல்வதில்லை. பல இடங்களில் சாலைகள் வெறிச்சோடிக் காணப்படுகின்றன.
பழைய சாலையிலும் தீராத போக்குவரத்து நெரிசல்
புதிய விரைவுச்சாலையின் நிலை இப்படியிருக்க, தற்போது பயன்பாட்டில் உள்ள பழைய சென்னை - பெங்களூர் தேசிய நெடுஞ்சாலையின் (NH-48) விரிவாக்கப் பணிகளும் எட்டு ஆண்டுகளாக இழுபறியில் உள்ளன. ஸ்ரீபெரும்புதூர் முதல் வாலாஜாபேட்டை வரையிலான 70 கிலோமீட்டர் சாலையை ஆறு வழிச்சாலையாக மாற்றும் பணி 2018-ஆம் ஆண்டு தொடங்கப்பட்டது. ஆனால், 2026-ஆம் ஆண்டு இறுதியிலும்கூட இப்பணிகள் முழுமையடையாமல், 2027 ஆகஸ்ட் வரை தள்ளிப் போயுள்ளது.
ஸ்ரீபெரும்புதூர் மற்றும் சுங்குவார்சத்திரம் இடையிலான வெறும் 10 கிலோமீட்டர் தூரத்தைக் கடக்க வாகன ஓட்டிகள் ஒன்றரை மணி நேரத்திற்கும் மேலாகக் காத்திருக்க வேண்டியுள்ளது. ஒரு பக்கம் பழைய சாலையில் கடும் நெரிசல்; மறுபக்கம் பல ஆயிரம் கோடி செலவில் கட்டப்பட்ட புதிய சாலையின் பகுதிகள் இணைப்பு இல்லாமல் காலியாகக் கிடக்கும் முரண்பாடு மக்களைக் கவலையடையச் செய்துள்ளது.
அடிப்படை வசதிகள் இல்லாத அவலம்
கட்டி முடிக்கப்பட்டு திறக்கப்பட்டுள்ள சுமார் 100 கிலோமீட்டர் விரைவுச்சாலைப் பகுதியிலும்கூட கழிப்பறைகள், உணவகங்கள், பெட்ரோல் பங்குகள் மற்றும் மின்சார வாகனங்களுக்கான சார்ஜிங் நிலையங்கள் போன்ற அடிப்படை வசதிகள் இன்னும் முழுமையாக அமைக்கப்படவில்லை. சுங்கச்சாவடிகளில் கட்டணம் வசூலிக்கத் தொடங்கிவிட்ட நிலையில், அவசரத்திற்குக்கூட வசதிகள் இல்லாததால் பொதுமக்கள் இந்தச் சாலையைப் பயன்படுத்தத் தயங்குகின்றனர்.
நஷ்டத்தில் முடியும் அரசுப் பணம்
இந்தியாவில் பல நெடுஞ்சாலைத் திட்டங்கள் சரியான திட்டமிடல் இல்லாமலும், நிலம் கையகப்படுத்துதல் மற்றும் மின்கம்பங்களை மாற்றுதல் போன்ற காரணங்களால் பல ஆண்டுகள் தாமதமாகின்றன. ஒரு சாலையின் தொடக்கமும் முடிவும் சரியாக இணைக்கப்பட்டால் மட்டுமே மக்கள் அதைப் பயன்படுத்துவார்கள். துண்டு துண்டாகச் சாலைகளைத் திறப்பதால், பராமரிப்புச் செலவு மட்டுமே மிஞ்சுகிறது தவிர, அரசுக்குப் போதிய சுங்க வருமானமோ, மக்களுக்குப் பயண நேர மிச்சமோ கிடைப்பதில்லை.
மக்களின் வரிப்பணத்தில் கட்டப்படும் இத்தகைய பிரம்மாண்டத் திட்டங்கள் வெறும் காட்சிப் பொருளாக மாறிவிடாமல் இருக்க, விடுபட்ட இணைப்புப் பணிகளை தேசிய நெடுஞ்சாலை ஆணையம் போர்க்கால அடிப்படையில் விரைந்து முடிக்க வேண்டும் என்பதே அனைவரின் எதிர்பார்ப்பாக உள்ளது.


Click it and Unblock the Notifications
