“அருள் விக்னேஷை கைது செய்ய ஏலியன்கள் பூமிக்கு வரும் வரை காத்திருக்கிறார்களோ என நினைத்தேன்” - கனிமொழி
சென்னை: "ஒருவழியாக அது நிகழ்ந்துவிட்டது. தவெக எம்.எல்.ஏ அருள் விக்னேஷை கைது செய்வதற்கு ஏலியன்கள் பூமிக்கு வரும் வரை காத்திருக்கிறார்களோ என்று தான் நினைக்க ஆரம்பித்துவிட்டேன்" என தாமதமான கைது நடவடிக்கையை விமர்சித்துள்ளார் கனிமொழி.
பெண் கலெக்டருக்கு கள்ளக்குறிச்சி தவெக எம்.எல்.ஏ அருள் விக்னேஷ் ஆபாச குறுஞ்செய்தி அனுப்பி பாலியல் தொல்லை கொடுத்ததாக எழுந்த புகார் தமிழக அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

இது தொடர்பாக சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கறிஞர் ஆர்.திரிசூலி வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கை விசாரித்த நீதிபதி வி.லட்சுமிநாராயணன், அதிரடி உத்தரவுகளைப் பிறப்பித்தார்.
பெண் கலெக்டர் அளித்த புகாரின் அடிப்படையில், நவம்பர் 23 ஆம் தேதி அருள் விக்னேஷ் மீது அனைத்து மகளிர் காவல் நிலைய போலீசார் 5 பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்தனர். இந்த வழக்கின் விசாரணை அதிகாரியாக திருப்பூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஸ்ருஷ்டி சிங் நியமிக்கப்பட்டார். ஐஜி காமினி மேற்பார்வையில் இந்த விசாரணை நடைபெற்று வருகிறது.
கள்ளக்குறிச்சியில் விசாரணையைத் தொடங்கிய ஸ்ருஷ்டி சிங், மாவட்ட வருவாய் அலுவலர், வருவாய் கோட்டாட்சியர், வட்டாட்சியர் உள்ளிட்ட அதிகாரிகளிடமும் விசாரணை நடத்தினார். நவம்பர் 2 ஆம் தேதி மாவட்ட நீதிபதியிடம் மாவட்ட ஆட்சியர் வாக்குமூலம் அளித்தார். மேலும் மாவட்ட ஆட்சியரின் கணவரிடமும் போலீசார் விசாரணை நடத்தினர்.
இந்த நிலையில் இன்று அருள் விக்னேஷின் வீட்டுக்கு விசாரணை அதிகாரியான திருப்பூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஸ்ருஷ்டி சிங் நேரில் சென்றார். அங்கு அருள் விக்னேஷிடம் தீவிர விசாரணை நடத்தினார். இந்த விசாரணையின் முடிவில் தவெக எம்.எல்.ஏ அருள் விக்னேஷை போலீசார் கைது செய்தனர். தியாகதுருகம் சுற்றுலா மாளிகையில் தற்போது விசாரணை நடைபெற்று வருகிறது.
நீண்டநாள் காத்திருப்புக்கு பின்னர் வெகு தாமதமாக கள்ளக்குறிச்சி த.வெ.க எம்.எல்.ஏ அருள் விக்னேஷ் கைது செய்யப்பட்டுள்ளதை திமுக துணைப் பொதுச் செயலாளரும், எம்.பியுமான கனிமொழி கருணாநிதி விமர்சித்துள்ளார்.
"ஒருவழியாக இது நிகழ்ந்துவிட்டது. தவெக எம்.எல்.ஏவை கைது செய்வதற்குப் புவித்தட்டுகள் நகரும் வரை அல்லது ஏலியன்கள் பூமிக்கு வரும் வரை காத்திருக்கிறார்களோ என்று தான் நினைக்கத் தொடங்கிவிட்டேன்" என விமர்சித்துள்ளார் கனிமொழி.
முன்னதாக கனிமொழி வெளியிட்ட பதிவில், "மாவட்ட ஆட்சியர் அளித்த புகாரிலிருந்து தலைமைச் செயலாளரின் பெயரை நீக்க முயற்சிகள் நடைபெற்றதாகக் குற்றச்சாட்டுகள் எழுந்துள்ள நிலையிலும், முதலமைச்சர் விஜய் தொடர்ந்து மௌனம் காப்பது ஏன்? உயர்நீதிமன்றம் இக்குற்றச்சாட்டுகளையும் விசாரணைக்கு உட்படுத்தி, எவ்வித அரசியல் அழுத்தமோ, அதிகாரத் தலையீடோ இல்லாமல் காவல்துறை விசாரணை நடைபெறுவதை உறுதி செய்யும் என நம்புகிறேன்." எனத் தெரிவித்திருந்தார்.




Click it and Unblock the Notifications
