இன்னைக்கு தான் ஆட்டமே இருக்கு.. டிரம்பால் எகிற போகும் தங்கம் விலை.. ஆனந்த் சீனிவாசன் சொல்வது என்ன?
சென்னை: அமெரிக்க அதிபரான டிரம்ப் இன்று உலக நாடுகள் மீது ரெசிப்ரோக்கல் வரியை அறிவிக்க போகிறார். இதனால் தங்கம் விலை உயர்ந்து புதிய உச்சத்தை தொடும் என்று அஞ்சப்படுகிறது. இதற்கிடையே டிரம்ப் செயல்பாடுகளுக்கும் தங்கம் விலை உயர்வுக்கும் என்ன தொடர்பு என்பதை விளக்கும் ஆனந்த் சீனிவாசன், இது எவ்வளவு தூரம் அதிகரிக்க வாய்ப்பு இருக்கிறது என்பதையும் விளக்கவுள்ளார்.
தங்கம் விலை கடந்த சில நாட்களாகவே உயர்ந்து புதிய உச்சத்தை தொட்டு வருகிறது. சென்னையில் நேற்று ஆபரணத் தங்கம் ஒரு சவரன் ரூ.68,000 தாண்டியது. சென்னையில் ஆபரணத் தங்கம் ஒரு கிராம் ரூ.85 உயர்ந்து ரூ.8510க்கு விற்பனையானது. சென்னையில் ஆபரண தங்கம் ஒரு சவரன் ரூ.680 உயர்ந்து ரூ.68,080க்கு விற்பனை செய்யப்படுகிறது.

தங்கம் விலை
தங்கம் விலை இந்தளவுக்கு உயர ஒரு காரணம் தான்.. அது டிரம்ப். இன்று (ஏப்ரல் 2ம் தேதி) முதல் ரெசிப்ரோக்கல் வரியை அறிவிக்க போகிறார். அதாவது அமெரிக்கா மீது உலக நாடுகள் எவ்வளவு வரி விதிக்கிறதோ.. அதே அளவு வரியை திரும்ப வசூலிப்பதே ரெசிப்ரோக்கல் வரியாகும். இது உலகளவில் ஒரு வர்த்தக போரை தொடங்கலாம் என அஞ்சப்படுகிறது. இதன் காரணமாகவே தங்கம் விலை தொடர்ந்து உயர்ந்து புதிய உச்சம் தொட்டு வருகிறது. இதற்கிடையே தங்கம் விலை வரும் காலத்தில் எப்படி இருக்கும் என்பதை பிரபல பொருளாதார வல்லுநரான ஆனந்த் சீனிவாசன் விளக்கியுள்ளார்.
ஆனந்த் சீனிவாசன்
இது தொடர்பாக ஆனந்த் சீனிவாசன் தனது யூடியூப் பக்கத்தில், "டிரம்ப் நடவடிக்கையால் குறுகிய காலத்தில் பங்குச்சந்தையில் என்ன நடக்கும் என்பதை யாராலும் சொல்ல முடியாது. ஆனால், நீண்ட கால நோக்கில் பங்குச்சந்தை சிறப்பாகவே இருக்கும். ஆனால், ஏற்கனவே அமெரிக்க பங்குச்சந்தைகள் சரிந்து வருகிறது. அமெரிக்காவில் பொருளாதார மந்தநிலை அல்லது தேக்கநிலை நிச்சயம் ஏற்படும்.
அங்கு பணவீக்கமும் கணிசமாக இருக்கிறது. இதனால் அமெரிக்க மத்திய வங்கி தனது வட்டியை விலையை குறைக்க முடியாது. மேலும், அமெரிக்காவில் மக்களின் நம்பிக்கை சரிந்து வருகிறது. இதனால் அமெரிக்காவின் பொருளாதார வளர்ச்சி குறையும். மேலும், மருத்துவ நிறுவனங்களுக்கு வரி போட போவதாக டிரம்ப் அறிவித்துள்ளார். இதனால் இந்தியாவில் உள்ள மருத்துவ நிறுவனங்கள் சிக்கலை சந்திக்கும்.
நிச்சயம் பறக்கும்
அமெரிக்காவில் ஒரு அவுன்ஸ் தங்கம் 3160 டாலராக இருக்கிறது. இப்போது இருக்கும் நிலைமை வைத்து பார்த்தால் அது நிச்சயம் 3600 டாலர் வரை போகும். இப்போது டிரம்பால் தங்கம் விலை அதிகரித்து வருகிறது. இன்னும் அமெரிக்க மத்திய வங்கி வட்டியை குறைக்கும்போதும் தங்கம் விலை அதிகரிக்கும். அமெரிக்க மத்திய வங்கி தனது வட்டியை அதிகரித்தால் மட்டுமே தங்கம் விலை சரியும். ஆனால், அப்படி செய்தால் அமெரிக்க பொருளாதாரமே மந்தநிலைக்கு சென்றுவிடும். தங்கத்தை குறைக்க வட்டியை அதிகரித்தால் அமெரிக்க பங்குச்சந்தைகள் மிக மோசமாக பாதிக்கப்படும்.
நான் எப்போதும் சொல்வது ஒன்று தான் ஆபத்பாண்டவன். எனக்கு ஆபத்பாண்டவனே வேண்டாம் என சொல்லலாம். ஆனால், பெரிய பெரிய ஆட்களுக்கு கூட ஆபத்பாண்டவன் தேவைப்பட்டு இருக்கிறது. நமது உலகிலும் பல எடுத்துக்காட்டுகள் உள்ளன. இலங்கையில் இருந்து வெளிநாடுகளுக்கு சென்றவர்களில் தங்கத்துடன் சென்றவர்கள் நல்ல நிலையில் இருக்கிறார்கள். ஆனால், தங்கம் இல்லாமல் ஓடி வந்தவர்கள் இங்கு சிரமப்படுகிறார்கள்.
ஏன் முக்கியம்
இப்படி பலரை நாம் சொல்ல முடியும். எனவே, பிரச்சினை என்று வரும்போது உங்களிடம் தங்கம் இருக்கிறதா இல்லையா என்பதே கேள்வி. தங்கம் எல்லா இடத்திலும் பேசும்.. டாலரிலும் பேசும்.. ரூபாயிலும் பேசும்.. தங்கத்தை எடுத்து வைத்தால் 22 கேரட் தங்கமா அல்லது 24 கேரட் தங்கமா என மட்டுமே கேட்பார்கள். அடுத்து நோட்டை எடுத்து வைத்துவிடுவார்கள்.
உங்களிடம் எவ்வளவு தங்கம் இருக்கிறது என உங்களுக்கே தெரியக்கூடாது. அந்தளவுக்கு இருக்க வேண்டும். அதுதான் பாதுகாப்பு. யாரும் டிரம்ப் இதுபோல வருவார். வந்து அமெரிக்க குடிமகன்களின் கிரீன் கார்ட்டை கூட ரத்து செய்வார் என யாருமே நினைக்கவில்லை" என்றார்.
இது ஒரு செய்தி மட்டுமே. இதை நிச்சயமாக முதலீட்டு ஆலோசனையாக எடுத்துக் கொள்ளக் கூடாது. முதலீடு சார்ந்த முடிவுகளை எடுக்கும் முன்பு உங்கள் பொருளாதார ஆலோசகரிடம் உரிய ஆலோசனை கேட்ட பிறகு, உங்களுக்கு ஏற்ற முடிவை எடுக்க வேண்டும்.












Click it and Unblock the Notifications