ராசிபுரம் கமலி டூ மாண்புமிகு அமைச்சர் கமலி.. அவினாசியில் மத்திய அமைச்சரை தோற்கடித்தவரின் பின்னணி
திருப்பூர்: இன்று அமைச்சராகி உள்ள 23 பேர் குறித்து பலரும் ஆச்சரியமான பதிவிடுவதை காண முடிகிறது. பட்டியல் இனத்தவர்கள் ஏழு பேர் அமைச்சர் என்கிறார்கள். ஆச்சரியமான மாற்றம் தான் இது. அதேபோல் முக்கியமான விஷயம் நடந்துள்ள மத்திய இணை அமைச்சர் எல் முருகனை தோற்கடித்த அவிநாசி தொகுதியின் சட்டமன்ற உறுப்பினர் கமலி புதிய அமைச்சராக பொறுப்பேற்றுள்ளார். தனித் தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்ற 28 வயதான இவர் சாதாரண பின்னணியை கொண்டவர் ஆவார். யார் இந்த கமலி என்பதை பார்ப்போம்.
முதல்வர் விஜய் தலைமையிலான அமைச்சரவை இன்று விரிவாக்கம் செய்யப்படுகிறது. இதில் மத்திய இணை அமைச்சர் எல் முருகனை தோற்கடித்த அவிநாசி தொகுதியின் சட்டமன்ற உறுப்பினர் கமலி புதிய அமைச்சராக பொறுப்பேற்கிறார். தனித் தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்ற 28 வயதான இவர் சாதாரண பின்னணியை கொண்டவர். மிகவும் எளிமையான பின்னணி கொண்ட கமலி ஆட்சி அதிகாரத்திற்கு வருவதை பலரும் பாராட்டுகிறார்கள். அதிலும் பெண்கள் இப்படி பொதுவாழ்விற்கு வருவது மிகவும் ஆரோக்கியமானதாக பார்க்கிறார்கள்.

நாமக்கல் மாவட்டம் ராசிபுரத்தில் உள்ள இந்திரா காலனியை சேர்ந்தவர் தான் 27 வயதான கமலி. நாமக்கல் மாவட்டம் குருசாமிபாளையம் கல்வியில் கல்லூரியில் பி.எட் படித்தவர். ராசிபுரம் பாவை மகளிர் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் முதுகலை ஆங்கிலம் படித்தவர். திருமணமானவர் ஆவார். இவருக்கு ஒரு குழந்தை உள்ளது. இவரின் கணவர் அந்த பகுதியில் இ- சேவை மையம் ஒன்றை நடத்தி வருகிறார்.
கமலி குடும்பம் எளிமையான குடும்பத்தினர் ஆவர். குடும்பத்தில் இருந்து யாரும் தீவிர அரசியலில் ஈடுபட்டதே கிடையாது. முதல்முறையாக அரசியலுக்கு நுழைந்த கமலிக்கு முதல்வர் விஜய் வாய்ப்பு கொடுத்தார். அதைப் பயன்படுத்தி மத்திய அமைச்சர் எல் முருகனை தோற்கடித்த கமலி, தமிழகத்தின் அமைச்சராகிறார்.
அண்மையில் கமலி பிபிசி ஊடகத்திற்கு அளித்த பேட்டியும், கமலிக்கு அமைச்சர் பதவி கிடைக்க காரணமாக அமைந்தது. என்ன பேசினார்.. அப்படியே பார்ப்போம். " என்னிடம் பலர் மத்திய அமைச்சரை தோற்கடித்து விட்டேன் என்று நிறைய பேர் கூறினார்கள். தோற்கடித்தது என்பதை தாண்டி, என்னை பொறுத்தவரையில் அது ஒரு வாய்ப்பு தான்.மக்கள் எல்லா முறையும் வாய்ப்பு கொடுத்து கொண்டே தான் இருப்பார்கள். இம்முறை வாய்ப்பு அவருக்கு (எல் முருகனுக்கு) கிடைக்கவில்லை. எனக்கு கிடைத்துள்ளது. இது மட்டும் தான் சொல்ல வேண்டும் எனத் தோன்றுகிறது என்றார்.
மேலும் கமலி பேசுகையில், எங்கள் குடும்பத்தில் இருந்து தீவிர அரசியலில் யாரும் வந்ததில்லை. நான் தான் முதல் முறை. இது தளபதியும், பொதுச் செயலாளரும் கொடுத்த வாய்ப்பு. இதைப் பயன்படுத்தி மக்களுக்கு நல்லது செய்ய வேண்டும் என்று விரும்புகிறேன். எங்களை பொறுத்தவரை அடித்தட்டு மக்களின் வலியை உணர்ந்து வந்துள்ளோம்.
ஏழ்மையான குடும்பத்தில் பிறந்து, அங்கிருக்கும் கஷ்டங்களை உணர்ந்து வந்திருக்கிறேன். அந்த வலியை உணரக்கூடிய யாருக்கும் மீண்டும் அப்படிப்பட்ட வலியை தந்துவிடக் கூடாது. தளபதி சொன்னது போல எல்லோரும் சந்தோஷமாக வாழலாம். இந்த கொள்கையுடன் நான் செயல்பட வேண்டும் என்று விரும்புகிறேன்.
எங்கள் அவினாசி தொகுதியை பொறுத்தவரை நிறைய அடிப்படை வசதிகள் இல்லாமல் இருந்தது. அங்கு நேரில் செல்லவிருக்கிறேன். பாதிக்கப்படும் மக்களுக்கு தேவையான அனைத்தையும் அளித்தே தீர வேண்டும் என விரும்புகிறேன். என்னால் முடிந்த அத்தனை முயற்சிகளையும் மேற்கொள்ள நினைக்கிறேன். அதற்கு தேவையான நம்பிக்கையுடன் இருக்கிறேன்.
இவை அனைத்தும் குறைவாக இருக்கின்றன. மக்களுக்கு தேவையான அடிப்படையான விஷயங்களை சரிசெய்ய வேண்டியது என்னுடைய கடமை. பொது கழிப்பிடங்களை பயன்படுத்தி விட்டு வந்திருக்கிறேன். ஒரு பெண்ணாக அனைத்து கஷ்டங்களையும் அனுபவித்துள்ளேன். என்னுடைய வயதில் இருக்கும் பெண்கள், என் வயதுக்கு கீழ் இருப்பவர்கள், பெரிய பெண்கள் அவர்களின் அடிப்படை வசதிகளை செய்து தருவேன். இதன்மூலம் அனைத்து பெண்களுக்கும் நம்பிக்கை அதிகமாகும் என்று எஸ்.கமலி தெரிவித்தார்.
அவினாசி தொகுதி 2026 தேர்தல் முடிவுகள்
கமலி மத்திய இணையமைச்சர் எல்.முருகனை 15,373 வாக்குகள் வித்தியாசத்தில் தோற்கடித்துள்ளார்.
2026 சட்டமன்றத் தேர்தலில் எஸ்.கமலி பெற்றுள்ள வாக்குகள் 84,209.
பாஜகச் சேர்ந்த மத்திய அமைச்சர் எல்.முருகன் பெற்ற வாக்குகள் 68,836.
திமுகவை சேர்ந்த கோகிலமணி 65,530 வாக்குகள் உடன் மூன்றாவது இடத்தை பிடித்தார்.
நாம் தமிழர் கட்சியின் மேனகா 7,704 வாக்குகள் பெற்று நான்காம் இடத்தை பிடித்தார்














Click it and Unblock the Notifications