மீனவர்கள் பக்கமே நிற்போம்.. இடம் மாறும் புதிய தலைமைச் செயலகம்? சூசகமாக சொன்ன ஆதவ் அர்ஜுனா!

  • சென்னை: பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமைச் செயலகம் அமைக்கும் விஷயத்தில் முதல்வர் விஜய் இன்னும் இறுதி முடிவை எடுக்கவில்லை என்று அமைச்சர் ஆதவ் அர்ஜுனா சூசகமாக தெரிவித்துள்ளார். மீனவர்களா அல்லது தலைமைச் செயலகமா என்று வந்தால், முதல்வர் மீனவர்கள் பக்கமே நிற்பார் என்றும் பேசி இருக்கிறார்.

    Advertisement

    2 வாரங்களுக்கு முன்பாக பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமைச் செயலகம் அமைக்கப்படும் என்று தமிழக அரசு அரசாணை வெளியிட்டது. மொத்தமாக 25 ஏக்கர் நிலத்தில் 15 மாடிகள் கொண்ட கட்டடமாக தலைமைச் செயலகம் கட்ட முடிவு எடுக்கப்பட்டது. புதிய கட்டடம் மற்றும் அதன் டிசைன் குறித்து இறுதி செய்ய 3 குழுக்களும் அமைக்கப்பட்டது. இதற்காக ரூ.1,200 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டது.

    Advertisement

    பட்டினப்பாக்கத்தில் தலைமைச் செயலகம் கட்டப்படும் இடம் முதல்வர் விஜய்யின் வீட்டில் இருந்து 50 மீட்டர் தூரத்தில் மட்டுமே இருக்கிறது. அதேபோல் கடலை பார்த்தவாறு மீண்டும் தலைமைச் செயலகம் கட்டப்பட இருக்கிறது. ஏற்கனவே ஜோசியர் ஆலோசனைப்படி கடல் பார்த்தவாறு முதல்வர் அலுவலகம் நாமக்கல் கவிஞர் மாளிகைக்கு மாற்றப்பட்டு வருகிறது.

    இதனால் பட்டினப்பாக்கம் இடமும் ஜோசியர் ஆலோசனைப்படியே தேர்வு செய்யப்பட்டதாக விமர்சனங்கள் எழுந்தன. ஆனால் பட்டினப்பாக்கத்தில் தலைமைச் செயலகம் வந்தால், 9 மீனவ கிராமங்கள் பாதிக்கப்படும். இதனை கண்டித்து மீனவர்களுடன் இணைந்து கம்யூனிஸ்ட் கட்சிகள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

    Advertisement

    இதனால் புதிய தலைமைச் செயலகம் திட்டம் வேறு இடத்திற்கு மாற்றம் செய்ய தவெக ஆலோசித்து வந்தது. தற்போது அமைச்சர் ஆதவ் அர்ஜுனா புதிய தலைமைச் செயலகம் பட்டினப்பாக்கத்தில் கட்டப்படாது என்று சூசகமாக பேசி இருக்கிறார். மதுராந்தகத்தில் தவெக நிர்வாகிகள் ஆலோசனை கூட்டத்தில் ஆதவ் அர்ஜுனா பேசுகையில், தலைமைச் செயலகம் இருக்கும் இடம் தமிழக அரசுக்கு சொந்தமானது அல்ல.

    இட நெருக்கடியும் அதிகம் இருக்கிறது. மீனவ மக்கள் பட்டினப்பாக்கத்தில் போராடி வருகிறார்கள். பட்டினப்பாக்கத்தில் தலைமைச் செயலகம் கட்டுவது தொடர்பாக திட்ட அறிக்கை மட்டுமே கேட்கப்பட்டிருக்கிறது. முதல்வர் விஜய் இன்னும் அந்த விஷயத்தில் இறுதி முடிவை எடுக்கவில்லை. மீனவர்களா அல்லது தலைமைச் செயலகமா என்றால், மீனவர்கள் பக்கமே நிற்போம் என்று தெரிவித்துள்ளார்.

    Advertisement

    நேற்று தலைமைச் செயலகம் திட்டத்தை இடமாற்றம் செய்துவிட்டு மீனவர்கள் தோழன் விஜய் என்று பிராண்ட் செய்ய தவெக திட்டமிட்டிருப்பதாக ஒன் இந்தியா தமிழ் தளத்தில் எழுதி இருந்தோம். அதற்கேற்ப மீனவர்கள் பக்கமே நிற்போம் என்று ஆதவ் அர்ஜுனா பேசி இருக்கிறார். இதனால் மீனவர்களை விரைவில் விஜய் சந்திக்கும் காட்சிகள் அரங்கேறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

    English Summary

    Aadhav Arjuna: CM Vijay Yet to Take Final Call on Pattinapakkam Secretariat, Hints Minister Aadhav Arjuna