நூலிழையில் தப்பிய 322 பேர்.. சென்னை - சிங்கப்பூர் விமானத்தில் திடீர் தொழில்நுட்ப கோளாறு.. பைலட் சாதுர்யம்

  • சென்னை: சென்னையில் இருந்து சிங்கப்பூருக்கு 'ஸ்கூட் ஏர்லைன்ஸ்'க்கு சொந்தமான விமானம் புறப்பட்டது. ரன்வேயில் சென்று கொண்டிருந்தபோது திடீரென்று தொழில்நுட்ப கோளாறு ஏற்பட்டது. இதனை உடனடியாக பைலட் கண்டுபிடித்ததால் விமானத்தில் பயணித்த 322 பேரும் அதிர்ஷ்டவசமாக தப்பினர்.

    Advertisement

    சென்னை - சிங்கப்பூர் இடையே 'ஸ்கூட் ஏர்லைன்ஸ்' நிறுவனத்துக்கு சொந்தமான விமானம் இயங்கி வருகிறது. நேற்று இரவு 10.50 மணிக்கு சிங்கப்பூரில் இருந்து 'ஸ்கூட் ஏர்லைன்ஸ்' விமானம் சென்னை விமான நிலையத்திற்கு வந்திறங்கியது.

    Advertisement

    இந்த விமானம் மீண்டும் நள்ளிரவு 12 மணிக்கு சென்னையில் இருந்து சிங்கப்பூருக்கு புறப்பட்டது. விமானத்தில் மொத்தம் 310 பயணிகள், 12 விமான பணியாளர்கள் என்று மொத்தம் 322 பேர் இருந்தனர்.

    விமானம் சென்னை விமான நிலையத்தில் இருந்து புறப்பட தொடங்கியது. ரன்வேயில் விமானம் சென்று கொண்டிருந்தபோது திடீரென்று தொழில்நுட்ப கோளாறு ஏற்பட்டது. அதனை சரிசெய்ய பைலட் முயன்றார். ஆனால் முடியவில்லை. இதனால் உடனடியாக சென்னை விமான நிலைய கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் தெரிவித்தார். ரன்வே-யிலேயே விமானத்தை நிறுத்தினார். அதன்பிறகு விமானம் ரன்வே-யில் இருந்து 'டோவிங்' மெஷின் உதவியுடன் ஓரம்கட்டப்பட்டது.

    Advertisement

    விமானத்தில் இருந்து அனைவரும் இறக்கிவிடப்பட்டனர். விமான நிலைய லாஞ்சில் தங்க வைக்கப்பட்டனர். கோளாறை சரிசெய்துவிட்டு மீண்டும் சிங்கப்பூர் அழைத்து செல்வதாக பயணிகளிடம் தெரிவிக்கப்பட்டது. இன்ஜினியர்கள் விமானத்தின் தொழில்நுட்ப கோளாறை சரிசெய்ய முயன்றனர். ஆனால் உடனடயாக அதனை சரிசெய்ய முடியவில்லை. இதனால் அந்த விமான சேவை ரத்து செய்யப்பட்டது.

    பயணிகள் அனைவரும் பஸ்களில் சென்னையில் பல்வேறு ஹோட்டல்களில் தங்கவைக்கப்பட்டனர். இந்த பயணிகள் இன்று இரவு வேறு விமானத்தில் மீண்டும் சிங்கப்பூருக்கு செல்ல உள்ளனர். விமானத்தில் தொழில்நுட்ப கோளாறு ஏற்பட்டதை பைலட் உடனடியாக கண்டுபிடித்ததால் ஆபத்து எதுவும் ஏற்படவில்லை.

    English Summary

    A Scoot Airlines flight departed from Chennai for Singapore. While moving along the runway, it suddenly developed a technical glitch. Thanks to the pilot immediately detecting the issue, all 322 people on board fortunately escaped harm.