ஓட்டுநர் உரிமம்.. தமிழகத்தில் இன்று முதல் புது ரூல்ஸ்.. டிரைவிங் லைசென்ஸ், RC இனி கையில் வேண்டாமே

  • சென்னை: ஓட்டுநர் உரிமம் நடைமுறையில் தமிழகத்தில் இன்று முதல் புது ரூல்ஸ் வந்துள்ளது.. இனி ஓட்டுநர் உரிமம், ஆர்.சி.க்காக அலைந்து திரிய வேண்டிய அவசியம் மொத்தமாகவே குறைய போகிறது... கையிலுள்ள செல்போனிலேயே முக்கிய ஆவணங்களை பெறும் புதிய வசதி தொடங்கப்பட்டுள்ளது. அப்படி என்ன மாற்றம் வந்துள்ளது.. இதை எப்படி பயன்படுத்த வேண்டும் தெரியுமா? இங்கே சுருக்கமாக பார்ப்போம்..!!

    Advertisement

    வாகன ஓட்டிகள் தினமும் பயன்படுத்தும் முக்கிய ஆவணங்களில் ஓட்டுநர் உரிமமும், வாகனப் பதிவுச் சான்றிதழும் முக்கியமானவை. இந்த ஆவணங்களை பெறுவதற்காகவும், அவற்றை பத்திரமாக வைத்திருப்பதற்காகவும் இதுவரை பொதுமக்கள் பல்வேறு சிரமங்களை எதிர்கொண்டு வந்தனர்.

    Advertisement

    ஓட்டுநர் உரிமம் புதிய நடைமுறை

    முக்கியமாக, புதிய லைசென்ஸ் பெறுவதிலும், RC பெறுவதிலும் தாமதம் ஏற்படுவது வழக்கமாகி இருந்தது. இந்த நிலையை மாற்றும் வகையில் தமிழக அரசு புதிய டிஜிட்டல் நடைமுறையை கொண்டு வந்துள்ளது.

    தமிழக சட்டப்பேரவையில் கடந்த செப்டம்பர் 2ம் தேதி விதி எண் 110-ன் கீழ் முதலமைச்சர் ஜோசப் விஜய் பல்வேறு அறிவிப்புகளை வெளியிட்டார். அதில், ஓட்டுநர் உரிமம் மற்றும் வாகனப் பதிவுச் சான்றிதழ் பெறுவதில் ஏற்படும் காலதாமதத்தைத் தடுக்கும் வகையில் டிஜிட்டல் முறையில் ஆவணங்களை வழங்கும் திட்டமும் அறிவிக்கப்பட்டது. அந்த புதிய நடைமுறை இன்று முதல் அமலுக்கு வருகிறது.

    Advertisement

    ஆர்டிஓ ஒப்புதல்

    இதன்படி, ஓட்டுநர் பயிற்சி தேர்வில் தேர்ச்சி பெற்று, வட்டாரப் போக்குவரத்து அலுவலர் ஒப்புதல் அளித்த அன்றே டிஜிட்டல் ஓட்டுநர் உரிமத்தை செல்போனில் டவுன்லோடு செய்து கொள்ள முடியும். இதற்கு போக்குவரத்துத் துறையின் அதிகாரப்பூர்வ வெப்சைட் அல்லது mParivahan செயலியை பயன்படுத்தலாம். விண்ணப்பத்தின்போது கொடுத்த செல்எண்ணுக்கு வரும் ஓடிபி மூலம் ஆவணத்தை பதிவிறக்கம் செய்யலாம்.

    அதேபோல், அரசு அலுவலகங்கள் மற்றும் பிற நிறுவனங்களின் பெயரில் பதிவு செய்யப்படும் வாகனங்களுக்கான ஆர்.சி.களையும் QR Code மூலம் ஸ்கேன் செய்து மின்னணு முறையில் சரிபார்க்கவும், டவுன்லோடு செய்யவும் வசதி செய்யப்பட்டுள்ளது. இந்த க்யூ-ஆர் கோடு மூலம் ஆவணத்தின் உண்மைத்தன்மையை அதிகாரிகள் எளிதாக சரிபார்க்க முடியும் என்பதால் போலி ஆவணங்களைத் தடுப்பதற்கும் இது உதவும்.

    Advertisement

    டிஜிட்டல் டிரைவிங் லைசென்ஸ்

    மத்திய அரசின் தகவல் தொழில்நுட்பச் சட்ட விதிகளின்படி DigiLocker அல்லது mParivahan செயலியில் பதிவிறக்கம் செய்யப்பட்ட டிஜிட்டல் டிரைவிங் லைசென்ஸ் மற்றும் ஆர்சி போன்றவை அசல் ஆவணங்களுக்கு இணையான செல்லுபடியாகும் தன்மை கொண்டவை. அதனால் டிராபிக் போலீசார் செக்கிங் செய்யும்போது, அல்லது போக்குவரத்துத் துறை அதிகாரிகளிடம் இந்த செயலிகளில் உள்ள ஆவணங்களை காட்டினாலே போதும். அசல் ஸ்மார்ட் கார்டை கட்டாயமாக கையில் வைத்திருக்க வேண்டிய அவசியம் இல்லை.

    ஆனால் இன்னொரு முக்கியமான விஷயத்தை வாகன ஓட்டிகள் கவனிக்க வேண்டும். செல்போனில் சாதாரணமாக எடுத்துவைத்திருக்கும் டிரைவிங் லைசென்ஸ் அல்லது RC போட்டோ, அல்லது PDF-ஐ மட்டும் காட்டினால் அது அதிகாரப்பூர்வ டிஜிட்டல் ஆவணமாக கருதப்படாது... DigiLocker அல்லது mParivahan போன்ற அதிகாரப்பூர்வ தளங்களில் உள்ள ஆவணங்களையே பயன்படுத்த வேண்டும்.

    Advertisement

    ஆர்சி தொலைந்துவிட்டால்?

    மேலும், லைசென்ஸ் அல்லது ஆர்சி தொலைந்துவிட்டாலோ, டேமேஜ் ஆகிவிட்டாலோ டிஜிட்டல் ஆவணத்தை மறுபடியும் டவுன்லோடு செய்து பயன்படுத்தும் வசதியும் கிடைக்கும். தேவைப்பட்டால் e-Seva மையங்களில் டிஜிட்டல் ஆவணத்தை பிரிண்ட் எடுத்தும் வாங்கிக்கொள்ளலாம்.

    இதுவரை தமிழகத்தில் 38 மாவட்டங்களில் 91 ஆர்ஓடி அலுவலகங்களும், 56 யூனிட் அலுவலகங்களும் செயல்பட்டு வருகின்றன. புதிய டிரைவிங் லைசென்ஸ், உரிமம் புதுப்பித்தல், ஆர்சி, பெயர் மாற்றம், சான்றிதழ் புதுப்பித்தல், வாகன வரி உள்ளிட்ட பணிகள் இவற்றின் மூலமே நடைபெற்று வந்தன. இனி இந்த சேவைகளை மேலும் எளிமைப்படுத்தும் வகையில் "Anywhere Registration/Licensing" திட்டமும் படிப்படியாக செயல்படுத்தப்பட உள்ளது.

    Advertisement

    இதனால் ஆவணங்களுக்காக அலுவலகங்களுக்கு நேரில் சென்று காத்திருக்கும் நிலை குறைவதுடன், போக்குவரத்துத் துறை சேவைகள் வேகமாகவும் எளிமையாகவும் கிடைக்கும் வாய்ப்பு ஏற்பட்டுள்ளது, அதுமட்டுமல்லாமல், இதுவரை DL ஸ்மார்ட் கார்டுக்கு ரூ.200 மற்றும் அஞ்சல் கட்டணமாக ரூ.50 என ரூ.250 தனியாக வசூலிக்கப்பட்ட நிலையில், புதிய டிஜிட்டல் நடைமுறை மூலம் ஆவணங்களை மின்னணு வடிவில் உடனடியாகப் பெறும் வசதி முக்கிய மாற்றமாக பார்க்கப்படுகிறது...!!

    English Summary

    Driving Licence.. New Rules in Tamil Nadu From Today.. Do You Still Need to Carry Your Driving Licence and RC? New Facility Explained