டாஸ்மாக் வசூல் பணம் ரூ.1.50 கோடி கொள்ளை.. சினிமா பாணியில் அபேஸ் செய்த கும்பல்.. ஒரகடத்தில் அதிர்ச்சி
காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் மாவட்டம் ஒரகடம் அருகே அரசு மதுபான கடைகளில் வசூலான ஒரு கோடியே 50 லட்சம் ரூபாய் பணத்தை, மர்ம கும்பல் வழிமறித்து கொள்ளையடித்துச் சென்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
2 ஊழியர்களை திசைதிருப்பிவிட்டு, காரை ஓட்டிச் சென்று, 10 கி.மீ தொலைவில் காரை விட்டுவிட்டு பணத்துடன் மர்ம நபர்கள் தப்பி ஓடியுள்ளனர். கொள்ளையர்களை பிடிக்க 5 தனிப்படைகள் அமைக்கப்பட்டு தீவிர விசாரணை நடைபெற்று வருகிறது.

திருவள்ளூர், சென்னை புறநகர் உள்ளிட்ட பகுதிகளில் உள்ள டாஸ்மாக் கடைகளில் தினசரி விற்பனையாகும் பணத்தை வங்கி ஏஜெண்டுகள் மூலம் வசூல் செய்வது வழக்கம். அதன்படி நேற்று இரவு வங்கி ஏஜெண்ட் தாஸ் மற்றும் டிரைவர் அபீப் ஆகியோர் வெள்ளை நிற ஸ்விஃப்ட் காரில் 22 கடைகளில் வசூல் செய்துள்ளனர்.
நேற்று இரவு 10 மணிக்கு 23-வது கடையான ஒரகடம் மதுபான கடையில் வசூல் செய்வதற்காக சென்றுள்ளனர். ஒரகடம் டாஸ்மாக் மதுபானக் கடையில் தாஸ் பணத்தை வாங்குவதற்காக கடைக்குள் சென்ற நிலையில், ஓட்டுநர் மட்டும் காரில் இருந்துள்ளார். அப்போது அருகில் இருசக்கர வாகனத்தில் வந்த நபர், வேகமாக வந்து கார் மீது மோதியதாக கூறப்படுகிறது. இதனால் ஓட்டுநருக்கும் அந்த நபருக்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது.
இந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்திய 3-க்கும் மேற்பட்ட மர்ம நபர்கள், வசூல் பணத்துடன் காரையே கடத்திச் சென்றுள்ளனர். பின்னர் 10 கி.மீ தொலைவில் படப்பை அருகே காரணிதாங்கலில் காரை சாலையோரம் நிறுத்திவிட்டு, அதிலிருந்த 1 கோடியே 50 லட்சம் ரூபாய் பணத்தை எடுத்துக் கொண்டு தப்பி ஓடியுள்ளனர்.
இது குறித்து ஒரகடம் போலீஸ் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. சம்பவ இடத்திற்கு விரைந்த ஸ்ரீபெரும்புதூர் துணை போலீஸ் சூப்பரண்டு கீர்த்திவாசன் ஒரகடம் இன்ஸ்பெக்டர் வடிவேல் முருகன் மற்றும் போலீசார் காரனைதாங்கள் பகுதியில் காணப்பட்ட காரை மீட்டு ஆய்வு செய்தனர். கைரேகை நிபுணர்கள் வரவழைக்கப்பட்டு தடயங்கள் சேகரிக்கப்பட்டது.
கொள்ளையர்களை பிடிக்க 5 தனிப்படைகள் அமைக்கப்பட்டு, சுற்றியுள்ள பகுதிகளில் உள்ள சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். டாஸ்மாக் வசூல் பணத்தை சினிமா பாணியில் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் டாஸ்மாக் ஊழியர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியையும், பரபரப்பையும் ஏற்படுத்தி உள்ளது.
காசாளர் தாஸ் அளித்த புகாரின் அடிப்படையில், ஒரகடம் காவல் நிலையத்தில் குற்ற எண் 407/2026-ன் கீழ் பாரதிய நியாய சன்ஹிதா (BNS) பிரிவு 303(2)-ன்படி கவனத்தைத் திசைதிருப்பி திருடியதாக வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்தச் சம்பவத்தில் தொடர்புடைய குற்றவாளிகளை பிடிக்க போலீசார் தீவிர நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனர்.


Click it and Unblock the Notifications
