கல்வி உதவித்தொகை.. QR கோட் ஸ்கேன் செய்ததுமே.. சென்னை ஊறுகாய் வியாபாரியின் ரூ.1.21 லட்சம் காலி

  • சென்னை: தொழில்நுட்ப வளர்ச்சியும் ஆன்லைன் சேவைகளும் பெருகிவரும் இந்த நவீன காலத்தில், அதை சாதகமாக பயன்படுத்தி அப்பாவிகளை இலக்கு வைக்கும் நூதன ஆன்லைன் மோசடிகளும் நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்றன. போலி வாக்குறுதிகளையும், பண ஆசையையும் காட்டி மக்களின் பணத்தை நொடியில் பறிக்கம் கிரிமினல் கும்பல்களும் நாளுக்கு நாள் புது புது டெக்னிக்குகளில் தங்கள் வலைகளை விரித்து வருகின்றன. இதோ சென்னை கொடுங்கையூரிலும் அப்படிப்பட்ட ஒரு அதிர்ச்சி சம்பவம் நடந்துள்ளது.

    Advertisement

    சென்னை கொடுங்கையூர் எம்ஜிஆர் நகர் பகுதியைச் சேர்ந்தவர் முத்து காமாட்சி. இவருக்கு 50 வயதாகிறது.. ஊறுகாய் வியாபாரம் செய்கிறார்... கடந்த 20 ஆண்டுகளாக அந்த பகுதியில் உள்ள பல கடைகளுக்கு ஊறுகாய் ஜாம் விநியோகித்து, தன்னுடைய குடும்பத்தைக் காப்பாற்றி வருகிறார்.

    Advertisement

    சென்னை ஊறுகாய் வியாபாரி

    இவருக்கு மகாலிங்கம் என்ற மகன் இருக்கிறார். இவர் ராயபுரத்தில் உள்ள தனியார் பள்ளியில் 12-ம் வகுப்பு படிப்பை முடித்துவிட்டு, இப்போது சென்னை கோட்டூர்புரத்தில் இருக்கும் ஒரு தனியார் கல்லூரியில் பி.காம் 3-ம் ஆண்டு படித்து வருகிறார்.

    கடந்த கடந்த 17-ம் தேதி, மாணவனுக்கு ஒரு போன் வந்துள்ளது.. அதில் பேசியவர், "தம்பி, நீங்க 12-ம் வகுப்பு நல்லபடியா முடிச்சதுக்காக அரசு மற்றும் கல்வித்துறை சார்பில் உங்களுக்கு 48 ஆயிரத்து 500 ரூபாய் கல்வி உதவித்தொகை ஒதுக்கப்பட்டிருக்கு.. இந்தத் தொகை உடனே உங்க அக்கவுண்ட்டுக்கு வர வேண்டுமானால், நாங்கள் வாட்ஸ்அப்ல அனுப்பியுள்ள க்யூஆர் கோட்டை உடனே ஸ்கேன் பண்ணுங்க" என்று கூறியுள்ளார்.

    Advertisement

    ஸ்கேன் - கியூஆர் கோட்

    இதைக் கேட்டதுமே மாணவன் மகாலிங்கத்திற்கு அளவற்ற மகிழ்ச்சி... பணம் கைக்கு வரப்போகிறது என்ற அவசரத்திலும் ஆசையிலும், மகாலிங்கம் தன்னுடைய போனுக்கு வந்த க்யூஆர் கோடைஉடனே ஸ்கேன் செய்தார்.

    அவ்வளவுதான்! ஸ்கேன் செய்து முடித்த சில நொடிகளிலேயே அவரது செல்போனுக்கு ஒரு மெசேஜ் வந்தது. அதில், அவரது வங்கி கணக்கில் சேமித்து வைக்கப்பட்டிருந்த 1 லட்சத்து 21 ஆயிரம் ரூபாயும் மொத்தமாக எடுக்கப்பட்டுவிட்டதாக போட்டிருந்தது. இதைப் பார்த்ததும் அதிர்ச்சியில் உறைந்துபோன மகாலிங்கம், அப்போதுதான் தான் ஆன்லைன் மோசடி கும்பலிடம் ஏமாந்துவிட்டதை உணர்ந்தார்.

    கல்வி உதவித்தொகை

    உடனடியாக இந்த விஷயத்தை, தன்னுடைய அப்பா முத்து காமாட்சியிடம் சொல்ல, இருவரும் இருவரும் பதறியடித்துக்கொண்டு புளியந்தோப்பு துணை கமிஷனர் அலுவலகத்தில் புகார் அளித்தனர். இந்த புகாரைப் பெற்றுக்கொண்ட அதிகாரிகள், வழக்கை விசாரணைக்காக கொடுங்கையூர் காவல் நிலையத்திற்கு மாற்றினர். இப்போது சைபர் கிரைம் போலீசார் வழக்குப்பதிவு செய்து, அந்த மர்ம நபரின் போன் நம்பர் மற்றும் வங்கி கணக்கு விவரங்களை வைத்துத் தீவிரமாக தேடி வருகிறார்கள்.

    Advertisement

    மகனுக்கு அரசு உதவித்தொகை வந்துள்ளதாக கூறி ஊறுகாய் வியாபாரியின் வங்கிக் கணக்கில் இருந்த பணம் முழுவதும் அபேஸ் செய்யப்பட்டுள்ளது, பெரும் அதிர்ச்சியை உண்டு பண்ணி வருகிறது.

    யாராவது போன் செய்து பணம் தருகிறோம் என்று சொன்னால் க்யூஆர் கோடை ஸ்கேன் செய்யவே கூடாது. க்யூஆர் கோடு என்பது நாம் மற்றவர்களுக்கு பணம் அனுப்ப மட்டும்தான் பயன்படுமே தவிர, நமக்கு யாருமே பணம் அனுப்ப க்யூஆர் கோடை ஸ்கேன் செய்யச் சொல்ல மாட்டார்கள் என்று போலீசார் எச்சரிக்கிறார்கள்.

    English Summary

    Education Scholarship Scam: WhatsApp QR Code Scan Costs Chennai Pickle Trader ₹1.21 Lakh