தமிழக வரலாற்றிலேயே மிக மோசமான தீபாவளி.. 13 கொலைகள்.. எல்லாவற்றையும் இணைந்த அந்த ஒரு ஒற்றை வில்லன்!

Subscribe to Oneindia Tamil

சென்னை: தமிழகத்தில் இந்த ஆண்டு தீபாவளி தினம் தமிழக வரலாற்றிலேயே இல்லாத அளவிற்கு ஒரு மிகக் கொடூரமான, ரத்தக்களறியான நாளாக மாறியிருக்கிறது. பட்டாசு சத்தத்தை விட வெட்டுக்காயங்களின் அலறல் சத்தமே மாநிலம் முழுவதும் அதிகமாகக் கேட்டது. தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் ஒரே நாளில் மட்டும் சிறப்பு உதவி ஆய்வாளர் உட்பட 13 பேர் அடுத்தடுத்து படுகொலை செய்யப்பட்டுள்ள சம்பவம் ஒட்டுமொத்த மக்களையும் உலுக்கியுள்ளது.

இந்தக் கொலைகள் அனைத்தையும் உற்று கவனித்தால், அவற்றுக்குப் பின்னால் இருக்கும் பிரதான வில்லன்.. எல்லைமீறிய மதுப் பழக்கமும், இளைஞர்கள் மத்தியில் கட்டுக்கடங்காமல் பரவியுள்ள போதைப் பழக்கமும்தான். பெரும்பாலான சம்பவங்கள் மது போதையில் ஏற்பட்ட தகராறுகளாலும், போதை தலைக்கேறிய இளைஞர்களின் நிதானமற்ற ஆத்திரத்தாலுமே நடந்துள்ளன.

crime diwali deepavali

போதைக் கும்பலை தட்டிக்கேட்ட எஸ்எஸ்ஐ அடித்துக் கொலை

இந்த தொடர் கொலைகளிலேயே மிகவும் அதிர்ச்சியளிக்கும் சம்பவம் தேனி மாவட்டத்தில் நடந்துள்ளது. தேனி டிஎஸ்பி அலுவலகத்தில் பணியாற்றி வந்த 56 வயதான சிறப்பு உதவி ஆய்வாளர் செந்தில்குமார், பணி முடிந்து சாதாரண உடையில் தனது வீட்டிற்குத் திரும்பிக் கொண்டிருந்தார். சமதர்மபுரம் பகுதியில் ஒரு கும்பல் முழு போதையில் நடுரோட்டில் பட்டாசுகளை வெடித்து போக்குவரத்துக்கு இடையூறு செய்து கொண்டிருந்தது.

பொதுமக்களுக்கு தொந்தரவு செய்யாதீர்கள் என்று செந்தில்குமார் அவர்களை எச்சரித்ததுடன், தனது செல்போனில் அவர்களின் செயல்களை வீடியோ எடுக்க முயன்றார். இதனால் போதை தலைக்கேறிய இளைஞர்கள் ஆத்திரமடைந்து, அவர் ஒரு காவல்துறை அதிகாரி என்று கூடப் பாராமல் நடுரோட்டிலேயே கொடூரமாக தாக்கினர். படுகாயமடைந்த அவர் சம்பவ இடத்திலேயே சரிந்து விழுந்து உயிரிழந்தார். பொதுமக்களைக் காப்பாற்ற வேண்டிய காவல்துறையினருக்கே பாதுகாப்பு இல்லை என்பதை இந்த சம்பவம் அப்பட்டமாக காட்டியுள்ளது. உயிரிழந்த அதிகாரியின் குடும்பத்திற்கு முதல்வர் சி. ஜோசப் விஜய் ₹40 லட்சம் நிவாரணம் அறிவித்துள்ளார்.

பட்டாசு தகராறில் ஐடி ஊழியர் கொலையான சோகம்

திருச்சி சமயபுரம் அருகே புரட்டாக்குடி கிராமத்தைச் சேர்ந்த 20 வயதான கிறிஸ்டோபர் என்ற இளைஞர், சென்னையில் உள்ள ஒரு ஐடி நிறுவனத்தில் வேலை பார்த்து வந்தார். தீபாவளி விடுமுறைக்காக சொந்த ஊருக்கு வந்திருந்த அவர், தனது நண்பர்களோடு தெருவில் பட்டாசு வெடித்துக் கொண்டிருந்தார். அப்போது அவ்வழியே வந்த டொனால்ட் மற்றும் எடிசன் ஆகிய இளைஞர்கள், பட்டாசு தீப்பொறி தங்கள் மீது பட்டதாகக் கூறி போதையில் தகராறு செய்தனர்.

வாக்குவாதம் முற்றிய நிலையில், எலக்ட்ரீசியனான டொனால்ட் தான் வைத்திருந்த டெஸ்டர் ஸ்க்ரூடிரைவரால் கிறிஸ்டோபரின் நெஞ்சில் கொடூரமாக குத்தினார். இதில் படுகாயமடைந்த அந்த இளைஞர் பரிதாபமாக உயிரிழந்தார். விடுமுறைக்கு மகிழ்ச்சியாக ஊருக்கு வந்த இளைஞரின் உயிர், மது போதையின் வெறியாட்டத்தால் அநியாயமாகப் பறிபோனது கிராம மக்களை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.

குடிபோதையில் வெடித்த சிறுவர்கள் இரட்டைக் கொலை

திருச்சி சமயபுரம் அருகே கொள்ளிடம் கொள்ளிடம் வாய்க்கால் கரை பகுதியில் மேலும் ஒரு அதிர்ச்சி சம்பவம் நிகழ்ந்தது. ராகுல், விஷால் என்ற 17 வயது சிறுவர்கள், தங்களது சக வயது நண்பர்களுடன் சேர்ந்து தீபாவளியன்று மது அருந்தியதாகக் கூறப்படுகிறது. அப்போது நண்பர்களுக்குள் போதையில் திடீரென வாய்த்தகராறு வெடித்தது. இதில் சக நண்பர்களே ஒன்று சேர்ந்து ராகுல், விஷால் ஆகிய இருவரையும் சரமாரியாக வெட்டிப் படுகொலை செய்துவிட்டு தப்பினர். 17 வயதே ஆன பள்ளி மாணவர்கள் மது அருந்திவிட்டு கொலை செய்யும் அளவுக்கு போதை கலாசாரம் சீரழிந்து போயிருப்பது பேரதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

பழிவாங்கலும், நடுரோட்டு வெறியாட்டங்களும்

தென் மாவட்டங்களிலும் பழைய பகையை தீர்த்துக்கொள்ள இந்த பண்டிகை தின போதை ஒரு சாக்காக பயன்பட்டுள்ளது. சிவகங்கை மாவட்டம் காரைக்குடியில் 24 வழக்குகள் நிலுவையில் உள்ள நவீன் என்ற ரவுடி, தனது தம்பியுடன் பட்டாசு வெடித்துக் கொண்டிருந்தபோது காரில் வந்த கும்பலால் வெட்டிக் கொல்லப்பட்டார். மானாமதுரையில் விக்னேஷ் என்ற சரித்திரப் பதிவேடு குற்றவாளியும் பழிக்குப் பழியாக வெட்டிச் சாய்க்கப்பட்டார்.

கடலூரில் பெரிய காட்டுப்பாளையத்தைச் சேர்ந்த பிரிதிவிராஜ் என்ற ரவுடியை, உடன் அமர்ந்து மது குடித்த அருள்அரசு மற்றும் அன்பரசு ஆகிய சகோதரர்கள் பீர் பாட்டிலால் குத்திக் கொலை செய்தனர். தப்பியோடிய அருள்அரசுவை பிடிக்கச் சென்ற சப்-இன்ஸ்பெக்டர் முகிலரசுவையும் அவன் கத்தியால் குத்தினான். உடனே பெண் இன்ஸ்பெக்டர் இளவரசி அவனது காலில் துப்பாக்கியால் சுட்டு மடக்கிப் பிடித்தார்.

சென்னையில் தனுஷ் என்ற 19 வயது ஆட்டோ ஓட்டுநர் குடும்பத் தகராறில் வெட்டிப் படுகொலை செய்யப்பட்டார். திருவள்ளூர் மாவட்டம் ஊத்துக்கோட்டையில் 24 வயது இளம் பெண் ஒருவர் தனது காதலனாலேயே கொடூரமாகக் கொலை செய்யப்பட்டார். இது தவிர செம்மஞ்சேரி, காஞ்சிபுரம், பெரம்பலூர் மாவட்டங்களிலும் தனித்தனி கொலைச் சம்பவங்கள் அரங்கேறியுள்ளன.

அமைச்சரின் சர்ச்சை பதில்

ஒரே நாளில் 13 பேர் பலியான இந்த சம்பவம் தமிழக அரசியலில் பெரும் புயலைக் கிளப்பியுள்ளது. "தீபாவளி நாளில் பட்டாசு சத்தத்தை விட அரிவாள் சத்தமே அதிகமாகக் கேட்டது. ஒரு டம்மி முதல்வர் சிறைக்குப் போனால் கைதிகள் தப்புகிறார்கள்.. காவல் நிலையத்திற்குப் போனால் போலீஸ்காரரே கொல்லப்படுகிறார்" என்று எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் கடுமையாகச் சாடியுள்ளார்.

அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி, "காக்கிச் சட்டைக்கே பாதுகாப்பில்லை என்றால் சாதாரண மக்களின் கதி என்ன?" என்று கேள்வி எழுப்பியுள்ளார். சினிமா கவர்ச்சியால் ஆட்சிக்கு வந்த முதல்வர் விஜய் வாயைத் திறக்க மாட்டார் என கனிமொழியும், சட்டம் ஒழுங்கு சீர்குலைந்து தொழில் முதலீடுகள் பாதிக்கப்படும் என அன்புமணி ராமதாஸும் அரசை விமர்சித்துள்ளனர்.

ஆனால், இதற்குப் பதிலளித்த பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் ஏ. ராஜமோகன், "கடந்த காலங்களிலும் தீபாவளி நாளில் பல கொலைகள் நடந்துள்ளன; இது ஒன்றும் புதிதல்ல, எதிர்க்கட்சிகள் வீண் வதந்திகளைப் பரப்புகின்றன" என்று பொறுப்பற்ற முறையில் சமாளித்துப் பேசியிருப்பது பொதுமக்களிடையே மேலும் ஆத்திரத்தை மூட்டியுள்ளது.

பண்டிகை நாட்களில் டாஸ்மாக் விற்பனை மற்றும் தெருவுக்குத் தெரு எளிதாகக் கிடைக்கும் போதைப் பொருட்கள் இளைஞர்களின் அறிவை மழுங்கடித்து, மனித உயிர்களைப் பறிக்கும் கொடூர ஆயுதங்களாக மாறிவிட்டன. இந்த போதை கலாசாரத்திற்கு தமிழக அரசு உடனடியாக முற்றுப்புள்ளி வைக்காவிட்டால், எந்தவொரு பண்டிகையுமே சாமானிய மக்களுக்குப் பாதுகாப்பாக இருக்காது என்பதே இந்த ரத்தக் களறியான தீபாவளி உணர்த்தும் எச்சரிக்கை.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+