தொகுதி மறுவரையறை மசோதா! திமுக மறுபரிசீலனை செய்யணும்! திருமாவளவன் கோரிக்கை
கடலூர்: தொகுதி மறுவரையறை மசோதாவுக்கு ஆதரவு அளிப்பது என்ற திமுக முடிவை மறுபரிசீலனை செய்ய வேண்டும் என விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் கோரிக்கை விடுத்துள்ளார்.
இதுகுறித்து திருமாவளவன் செய்தியாளர்களிடம் கூறியிருப்பதாவது: மக்களவை தொகுதிகளை உயர்த்தினால் பாஜகவின் கனவு திட்டங்களை நடைமுறைப்படுத்த முடியும் என்ற முடிவு செய்து தொகுதி மறுவரையறை மசோதாவை கொண்டு வருகிறது.

அனைத்து மாநிலங்களுக்கும் 50% இடங்கள் உயர்த்தப்படுவதாக பாஜக கூறுவதால் திமுக உள்ளிட்ட கட்சிகள் இந்த மசோதாவுக்கு ஆதரவு தெரிவித்துள்ளன. பாஜகவின் நோக்கம், ஒரே தேசம் ஒரே தேர்தல் என்பதை நோக்கித்தான் செல்லும்.
எனவே இந்த சட்ட மசோதா தோற்கடிக்கப்பட வேண்டும். திமுக தனது முடிவை மறு பரிசீலனை செய்ய வேண்டும் என்ற கோரிக்கை முன்வைக்கப்படுகிறது. அதையே தான் விடுதலைச் சிறுத்தைகளும் முன்வைக்கிறோம்.
தொகுதி மறுவரையறை அமலுக்கு வந்தால் தமிழகம் உள்ளிட்ட தென் மாநிலங்கள் பாதிக்கப்படும். எந்த மாநிலத்திலும் தொகுதிகளின் எண்ணிக்கையை அதிகரிக்கக் கூடாது. நாடு முழுவதும் ஒரே விதிமுறை பின்பற்றப்பட வேண்டும். 50 சதவீத இடங்கள் நமக்கும் கிடைக்கிறது, அவர்களுக்கும் கிடைக்கிறது என்கிற போது ஏற்கெனவ இருந்த இடைவெளியும் ஏற்றத் தாழ்வும் அப்படியே தொடருமே தவிர, அதனால் எந்தப் பயனும் இல்லை.
திருப்பரங்குன்றம் தீபத்தூண் விவகாரம் தொடர்பாக நீதிமன்றத்தின் தீர்ப்பு வரையறைகளுக்கு உட்படாத தீர்ப்பு. ஆதாரங்களை திரட்டாமல் சாட்சிகளை தேடாமல் நீதிமன்றம் இத்தகைய தீர்ப்பை வழங்கியிருக்கிறது. நீதிமன்ற அவமதிப்பு என்று crpf படையை அங்கு கொண்டு வந்து தீபத்தூணில் தீபம் ஏற்றப்பட்டுள்ளது. இவ்வாறு திருமாவளவன் தெரிவித்துள்ளார்.
தொகுதி மறுவரையறை மசோதாவுக்கு திமுக ஆதரவு நிலைப்பாடு எடுத்தது ஏன் என்பது குறித்து திமுக தலைவர் ஸ்டாலின் விளக்கம் அளித்திருந்தார். அவர் தனது பதிவில் கூறியிருப்பதாவது: #FairDelimitation கோரிக்கைகளை ஏற்ற சட்டமுன்வரைவிற்குத் தி.மு.க. ஆதரவு. கடந்த ஏப்ரல் மாதம் எந்தக் காரணங்களுக்காக #Delimitation சட்டமுன்வரைவை எதிர்த்தோமோ, அந்த இரண்டு கோரிக்கைகளும் எழுத்துப்பூர்வமாகப் புதிய சட்டமுன்வரைவில் சேர்க்கப்பட்டுள்ளன.
இது, 2024-ஆம் ஆண்டுமுதல் தி.மு.கழகம் மேற்கொண்ட தொடர் போராட்டங்களுக்கான வெற்றி! தமிழ்நாடு உள்ளிட்ட தென்மாநிலங்கள் அனைத்துக்குமான வெற்றி! 1971 மக்கள்தொகையின் அடிப்படையிலேயே அனைத்து மாநிலங்களுக்கும் 50% தொகுதிகள் உயர்வு எனும் இந்த #DelimitationBill-ஐத் தவறவிட்டால் என்ன நடக்கும் என உணர்ச்சிவயப்படாமல் சற்று சிந்தித்துப் பார்க்க வேண்டும்.
அதையெல்லாம் தீர ஆராய்ந்துதான், நடைமுறைக்குச் சாத்தியமானதில் நமக்குச் சாதகமான இந்த வடிவிலேயே #Delimitation நடந்திடத் தி.மு.கழகம் ஆதரவளிக்கும் என்ற நிலைப்பாடு இன்றைய நாடாளுமன்ற உறுப்பினர்கள் கூட்டத்தில் எடுக்கப்பட்டுள்ளது. இவ்வாறு ஸ்டாலின் தெரிவித்திருந்தார்.



Click it and Unblock the Notifications
