இந்திய அரசியலின் மையப் புள்ளியான சென்னை.. ஸ்டாலின் வீட்டில் போலீஸ் படை குவிப்பு!
சென்னை: இந்திய அரசியல் களத்தின் மையப் புள்ளியாக மாறியுள்ளது சென்னை. காங்கிரஸ் உயர்மட்ட தலைவர்களும், இந்தியா கூட்டணி கட்சிகளின் தலைவர்களும், திமுக தலைவர் ஸ்டாலினை சந்திக்க சென்னைக்கு வருகை தருகின்றனர். இதையொட்டி, ஸ்டாலின் வீட்டில் போலீஸ் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.
காங்கிரஸ் மூத்த தலைவர் சோனியா காந்தி, காங்கிரஸ் அகில இந்திய தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி, திரிணாமுல் காங்கிரஸ் தலைவர் மம்தா பானர்ஜி, கம்யூனிஸ்ட் தலைவர் எம்.ஏ.பேபி உள்ளிட்ட இந்தியா கூட்டணி கட்சிகளின் தலைவர்கள் இன்று ஸ்டாலினைச் சந்திக்க உள்ளனர்.

இதன் மூலமாக, ஒட்டுமொத்த நாடும், சென்னை மீது கண் வைத்துள்ளது. இந்தியா கூட்டணித் தலைவர்கள் திமுக தலைவர் மு.க. ஸ்டாலினை சந்திக்க உள்ள நிலையில், சென்னையில் உள்ள அவரது இல்லத்துக்கு கூடுதல் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
மத்திய பாஜக அரசின் புதிய தொகுதி மறுவரையறை மசோதா நாளை (நவ. 30) மக்களவையில் தாக்கல் செய்யப்பட உள்ளது. இந்த மசோதாவை ஆதரிப்பதாகத் திமுக அறிவித்தது. தாங்கள் முன்வைத்த கோரிக்கைகளை ஏற்றுக்கொண்டு, திருத்தப்பட்ட தொகுதி மறுவரையறை மசோதாவை பாஜக உருவாக்கியுள்ள நிலையில், அந்த மசோதாவை ஆதரிப்பதாக திமுக தெரிவித்தது.
திமுகவின் இந்த முடிவு, காங்கிரஸ் கட்சியை நிலைகுலைய வைத்துள்ளது. திமுக ஆதரித்தால் இந்த மசோதா நாடாளுமன்றத்தில் நிறைவேறிவிடும் என்ற நிலையில், அந்த முடிவை மறுபரிசீலனை செய்யுமாறு ஸ்டாலினிடம் நேரில் வலியுறுத்த இந்தியா கூட்டணித் தலைவர்கள் டெல்லியில் இருந்து சென்னைக்கு வந்து கொண்டிருக்கின்றனர்.
முன்னதாக, "இந்த மசோதாவை நாம் ஒன்றாகத் தோற்கடிக்க வேண்டும்" என்று ராகுல் காந்தி அழைப்பு விடுத்திருந்தார். அதற்குப் பதிலளித்த ஸ்டாலின், தமிழ்நாட்டின் நலனை முதன்மையாகக் கொண்டே திமுக முடிவெடுப்பதாகவும், அந்தப் பாதையில் சமரசம் செய்துகொள்ள மாட்டோம் என்றும் தெரிவித்திருந்தார்.
இந்த நிலையில் சென்னை ஆழ்வார்ப்பேட்டை சித்தரஞ்சன் சாலையில் உள்ள திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் இல்லத்துக்கு திமுக தலைவர்கள் வருகை தந்துள்ளனர். மேலும், அகில இந்திய அரசியல் தலைவர்கள் வருகை தர இருப்பதால் ஸ்டாலின் இல்லத்துக்கு போலீசார் கூடுதல் பாதுகாப்பு அளிக்கப்பட்டுள்ளது. அந்த பகுதியில் ஏராளமான போலீசார் குவிக்கப்பட்டு உள்ளனர்.




Click it and Unblock the Notifications
