அப்பாவை காணோம் சொன்னீங்களே.. ஒட்டுமொத்த டெல்லியும் வருது பாருங்க! விஜய்யை விளாசும் திமுக ஆதரவாளர்கள்
சென்னை: தேசிய அரசியல் களம் இப்போது மொத்தமாக மாறியுள்ளது. தொகுதி மறுவரையறை விவகாரத்தில் திமுக எடுக்கும் முடிவே இப்போது தேசியளவில் முக்கியத்துவம் பெறுகிறது. இதன் காரணமாகவே ஒரு பக்கம் பாஜக தரப்பு திமுகவை தொடர்பு கொண்ட நிலையில், இன்னொரு பக்கம் இந்தியா கூட்டணி தலைவர்கள் நேரடியாகவே சென்னை வருகிறார்கள். இதற்கிடையே விஜய்யின் பழைய பேச்சை எடுத்து வைத்து, திமுகவினர் தவெகவுக்கு பதிலடி கொடுத்து வருகிறார்கள்.
அரசியலில் எதுவுமே நிரந்தரம் இல்லை.. எப்போது வேண்டும் என்றாலும் எதுவும் மாறலாம் என சொல்வார்கள். சரியாக இப்போது அப்படியொரு மாற்றம் தான் தமிழக அரசியலில் நடந்து வருகிறது. சில மாதங்களுக்கு முன்பு தமிழகத்தில் திமுக அதிகாரத்தை இழந்திருந்த சூழலில், இப்போது தேசிய அரசியலில் முக்கியமான இடத்தை பிடித்திருக்கிறது. இது தொடர்பாக நாம் பார்க்கலாம்.,

விஜய் பேச்சு
"உங்க அப்பா இங்கதான் இருப்பாருனு சொன்னாங்க.. அதான் தேடிக்கொண்டு இருக்கிறேன்.. அப்பாவையே காணோம்" என்று சட்டப்பேரவையில் முதல்வர் விஜய் பேசிய பேச்சு, அப்போது அரசியல் வட்டாரத்தில் பெரும் விவாதத்தை ஏற்படுத்தியது. இதற்கு அப்போதே மு.க.ஸ்டாலின், "நான் தமிழ்நாட்டு மக்களின் மனங்களில் இருக்கிறேன். அங்கே தேடிப் பாருங்கள்" என்பது போல பதிலளித்திருந்தார்.
திமுக
சில நாட்களுக்கு முன்பு வரையிலும் கூட மாநிலத்தில் அதிகாரம் இழந்தே திமுக இருந்தது. ஆனால், இப்போது சில நாட்களில் நிலைமை மொத்தமாக மாறிவிட்டது. தேசிய அரசியலில் இரு தரப்புமே அழைத்து பேசும் முக்கிய கட்சியாக திமுக மாறியுள்ளது. குறிப்பாக, தொகுதி மறுவரையறை விவகாரத்தில் திமுக எடுத்துள்ள முடிவு, இந்தியா கூட்டணியின் முக்கிய தலைவர்களையே சென்னைக்கு வரவழைத்துள்ளது.
மத்திய அரசு கொண்டுவரத் திட்டமிட்டுள்ள தொகுதி மறுவரையறை மசோதாக்களுக்கு திமுக ஆதரவு அளிக்குமா என்ற கேள்வி எழுந்திருந்தது. இந்த விவகாரத்தில் தமிழகத்தின் மக்களவைப் பிரதிநிதித்துவம் பாதிக்கப்படக் கூடாது என்று திமுக தொடர்ந்து வலியுறுத்தி வந்தது.
பாஜக
இதற்கிடையே, திமுகவின் ஆதரவை பெற பாஜக தரப்பிலிருந்து முயற்சி எடுக்கப்பட்டது. அக்கட்சி தலைவர்கள் நேரடியாக திமுக தரப்பை தொடர்புகொண்டு பேசியதாக தகவல்கள் வெளியாகின. தமிழகத்தின் தற்போதைய 7.18 சதவீத மக்களவைப் பிரதிநிதித்துவத்தை பாதுகாப்பது, அனைத்து மாநிலங்களுக்கும் ஒரே அளவில் 50 சதவீத இடங்களை அதிகரிப்பது, மாநிலங்களுக்கு இடையிலான இடங்களின் விகிதத்தை 25 ஆண்டுகளுக்கு அப்படியை வைப்பது ஆகிய கோரிக்கைகளை திமுக முன்வைத்தது.
இந்த நிபந்தனைகளுக்கு மத்திய அரசு ஓகே சொல்லிவிட்டதாக தெரிகிறது. அதைத் தொடர்ந்தே தொகுதி மறுவரையறை தொடர்பான மசோதாக்களுக்கு ஆதரவு அளிப்பதாக திமுக அறிவித்தது. திமுகவின் இந்த முடிவு இந்தியா கூட்டணிக்குள் புதிய சிக்கலை ஏற்படுத்தியது.
திமுக
திமுகவின் முடிவை மாற்றி, மசோதாக்களுக்கு எதிராக வாக்களிக்க வைக்க வேண்டும் என்பதற்காக இந்தியா கூட்டணியின் முக்கிய தலைவர்கள் தற்போது களமிறங்கியுள்ளனர். காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, சோனியா காந்தி, எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தி ஆகியோர் இன்று சென்னை வந்து ஸ்டாலினை சந்திக்க உள்ளனர். அவர்களுடன் மேற்கு வங்க முன்னாள் முதல்வர் மம்தா பானர்ஜி, தெலுங்கானா முதல்வர் ரேவந்த் ரெட்டி, கர்நாடக முதல்வர் டி.கே. சிவக்குமார், கேரள முதல்வர் வி.டி. சதீசன் உள்ளிட்ட தலைவர்களும் சென்னை வந்து ஸ்டாலினை சந்திக்கிறார்கள்.
நாடாளுமன்றத்தின் சிறப்பு கூட்டத்தொடர் நாளை நவம்பர் 30ஆம் தேதி தொடங்க உள்ள நிலையில், திமுகவின் 22 லோக்சபா உறுப்பினர்களின் ஆதரவு இந்த மசோதாக்களின் வாக்கெடுப்பில் முக்கியத்துவம் பெறுகிறது. அதனால்தான், திமுகவின் முடிவை மாற்றுவதற்காக காங்கிரஸ் தலைமையிலான இந்தியா கூட்டணி இவ்வளவு முக்கியத்துவம் கொடுத்து ஸ்டாலினைச் சந்திக்க வருகிறது.
விமர்சனம்
இந்தச் சூழலில்தான் விஜய் சட்சபையில் பேசிய "அப்பாவைக் காணவில்லை" என்ற வீடியோவை திமுக ஆதரவாளர்கள் சமூக வலைதளங்களில் பகிர்ந்து வருகின்றனர். "அப்பா எங்கே இருக்கிறார் என்று தேடிக்கொண்டிருக்கிறேன் என்று சொன்னீர்களே.. இப்போது பாருங்கள்.. ஒட்டுமொத்த டெல்லியுமே ஸ்டாலினைத் தேடி சென்னைக்கு வருகிறது!" என்ற பதிவிட்டு வருகின்றனர்.




Click it and Unblock the Notifications
