தலைமுடி பிரச்சனைக்குமா கோர்ட்டுக்கு வருவீர்கள்! சென்னை ஹைகோர்ட் நீதிபதி கேட்ட கேள்வி.. பின்னணி
சென்னை: சிறையில் உள்ள கணவர் தலைமுடி வளர்க்கும் பிரச்சனையை கூடவா நீதிமன்றத்துக்கு கொண்டு வருவீர்கள்' என, சென்னை உயர் நீதிமன்றம் கேள்வி கேட்ட சம்பவம் நடந்துள்ளது.
மயிலாடுதுறையை சேர்ந்தவர் சுதர்ஷன். இவர் போதைப்பொருள் கடத்திய வழக்கில் கைது செய்யப்பட்டு கடலூர் மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். இவரது மனைவி பிரியதர்ஷினிக்கு அக்டோபர் 17 ல் குழந்தை பிறந்தது.

இந்நிலையில் தான் சுதர்ஷன் மனைவி பிரியதர்ஷினி சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு ஒன்றை தாக்கல் செய்தார். அதில் சிறையில் தனது கணவர் தலைமுடி வளர்க்க அனுமதிக்க வேண்டும் என்று கூறியிருந்தார்.
இதுதொடர்பாக பிரியதர்ஷினி தாக்கல்செய்த மனுவில்,''போதைப்பொருள் கடத்தல் வழக்கில் கைது செய்யப்பட்ட என் கணவர் சுதர்ஷன், கடலுார் மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். என் கணவர் கைதானபோது நான் கர்பபமாக இருந்தேன். அக்டோபர் 17 ல் குழந்தை பிறந்தது.
எங்கள் குடும்பத்தில் குழந்தை பிறந்தால் திருச்செந்தூர் முருகன் கோவிலில் முடிகாணிக்கை செலுத்தும் வழக்கம் உள்ளது. இதனால் எனது கணவர் சிறையில் தலைமுடி, தாடி, மீசை வளர்த்தார். ஆனால் சிறைத்துறை அதிகாரிகள் அதற்கு அனுமதி வழங்கவில்லை. தலைமுடியை வெட்ட வேண்டும் என்று கூறியுள்ளனர்.
நேர்த்தி கடன் உள்ளது. இதனால் எனது கணவர் தலைமுடியை வளர்க்க அனுமதிக்க வேண்டும் என்று கூறி நவம்பர் 13ம் தேதி சிறை அதிகாரியிடம் மனு அளித்தேன். அதனை அவர் பரிசீலனை செய்யவில்லை. இதனால் என் கணவர் தலைமுடி வளர்த்துக் கொள்ள அனுமதியளிக்க சிறைத்துறை அதிகாரிகளுக்கு உத்தரவிட வேண்டும்'' என கூறியிருந்தார்.
இந்த மனுவை உயர்நீதிமன்ற நீதிபதி வி லட்சுமிநாராயணன் விசாரித்தார். அப்போது சிறைத் துறை தரப்பில் அரசு வழக்கறிஞர் எஸ் யோகராஜ சேகர் ஆஜராகி இருந்தார். அவர் வைத்த வாதத்தில், ''உடல் நல பிரச்னைகள் இருந்தால் தான் சிறையில் முடிவெட்டுவதை கட்டாயம் என கூறுவோம். மனுதாரர் கணவர் விவகாரத்தில், அது போன்ற உத்தரவு எதையும் கடலுார் சிறைத்துறை கண்காணிப்பாளர் பிறப்பிக்கவில்லை'' என கூறினார்.
இதை கேட்ட நீதிபதி வி லட்சுமி நாராயணன்,'''தலைமுடி வளர்க்கும் பிரச்னையை கூடவா நீதிமன்றத்துக்கு கொண்டு வருவீர்கள்'' என கேள்வி எழுப்பினார். பிறகு அரசு தரப்பில் சிறை விதிகள் குறித்து விளக்கம் பெறப்பட்டது. அதனை பதிவு செய்து கொண்ட நீதிமன்றம் பிரியதர்ஷினி பதிவு செய்த வழக்கை முடித்து வைத்தது.



Click it and Unblock the Notifications
