சோனியா, ராகுல் நேரில் வருவதால் ஸ்டாலின் முடிவை மாற்றுவாரா? தொகுதி மறுவரையறை குறித்து தராசு ஷ்யாம்!
சென்னை: தொகுதி மறுவரையறை விவகாரத்தில் திமுகவின் நிலைப்பாடு தொடர்பாக ஆலோசிக்க இந்தியா கூட்டணி தலைவர்கள் சென்னை வருகிறார்கள். சோனியா காந்தி, ராகுல் காந்தி, கார்கே உள்ளிட்ட தலைவர்கள் பிற்பகலில் ஸ்டாலினை சந்திக்கிறார்கள். இந்த சந்திப்பு நடந்தாலும் கூட ஸ்டாலின் தனது நிலைப்பாட்டை மாற்றமாட்டார் என்று மூத்த பத்திரிக்கையாளர் தராசு ஷ்யாம் தெரிவித்துள்ளார்.
தராசு ஷ்யாம்
இது தொடர்பாக மூத்த பத்திரிக்கையாளர் தராசு ஷ்யாம் சன் டிவிக்கு அளித்த பேட்டியில், அகில இந்திய அரசியலின் மையப்புள்ளியாக திமுக திகழ்கிறது, அப்படித்தான் பார்க்க வேண்டும். காரணம், நாளை கொண்டு வரப்படவுள்ள தொகுதி மறுவரையறை மசோதாவிற்கு ஆதரவு தெரிவித்திருக்கிறார் திமுக தலைவர் மு.க. ஸ்டாலின். இதற்காகவே சோனியா காந்தி மற்றும் ராகுல் காந்தி உள்ளிட்ட மூத்த தலைவர்கள் ஸ்டாலினை சந்திக்க வருகிறார்கள்.

மாறாது
இவர்கள் வந்து வலியுறுத்துவதால் திமுகவின் நிலைப்பாடு மாறப்போகிறதா, இல்லையா என்பதுதான் முக்கிய கேள்வி. என்னை பொறுத்தவரை மாறாது என்றே சொல்கிறேன். என்ன காரணம் என்றால், எம்பிக்களின் எண்ணிக்கையைக் கூட்டும்போது எம்எல்ஏக்களின் எண்ணிக்கையும் கூட்டப்பட வேண்டும். அதற்கு அந்த மசோதாவிலேயே இடம் இருக்கிறது. 50 சதவீதம் எம்எல்ஏக்களின் எண்ணிக்கையை உயரும்போது, உள்ளாட்சிப் பிரதிநிதிகளின் எண்ணிக்கையையும் உயரும். ஒட்டுமொத்தமாக ஜனநாயகத்திற்கு இது நல்லது.
காரணம்
தொகுதிகளின் எண்ணிக்கையை உயர்த்துவதை இரண்டு முறை முடக்கி வைத்திருந்தோம். இந்த இரண்டு முறை முடக்கப்பட்டதையும் நான் பார்த்திருக்கிறேன். அதற்கு முன்பு 60களில் நடந்த தொகுதி மறுவரையறையையும் பார்த்திருக்கிறேன். ஆக மூன்று முறையும் என்ன நடந்தது என்பதை நான் பார்த்திருக்கிறேன். 60களில் நடந்த மறுவரையறைக்கு பிறகு நமக்கு 1967ல் எம்பி எண்ணிக்கை குறைந்தது. அது மக்கள்தொகை அடிப்படையில் செய்யப்பட்டது. அரசியல் சாசனத்தில் அதற்கான வழிமுறை இருப்பதால் மக்கள் தொகை அடிப்படையில்தான் முடிவாகும்; விகிதாச்சார அடிப்படை செய்யப்படும்.
ஆனால், இப்போது வரப்போவது 'ப்ரோரேட்டா' (Pro-rata). 'ப்ரோபோர்ஷனேட்' என்றால் மக்கள் தொகை அடிப்படையிலான எதுவும் மாறாது. எல்லோருக்கும் சமச்சீரான உயர்வு கிடைக்கும். அதன்படி எல்லா மாநிலங்களுக்கும் 50 சதவீதம். போன மசோதாவுக்கும் இந்த மசோதாவுக்குமான மாபெரும் வித்தியாசம் இதுதான். மாநில சட்டமன்றங்களுக்கும் அதே மாதிரியான உயர்வு இருக்கும்.
என்ன நடக்கும்
திமுக எந்த முடிவையும் எடுக்காமல் விட்டால்.. 1967ல் நடந்தது போல மறுவரையறை நடக்கும். அப்போது எம்பிக்களின் எண்ணிக்கை குறையும். எனது கணக்கின்படி 39 எம்பிக்கள் என்பது 31ஆகும். அது நல்லதா என்று யோசித்துப் பார்த்தால் நிச்சயம் ஆபத்து தான். அது நடந்துவிட்டால் அதை மாற்றுவது கடினம். ஏனென்றால் அப்போது நமக்கு போதிய ஆதரவு இருக்காது. நாட்டின் தேர்தல் வரைபடமே மாறியிருக்கும்.
எனவே, இந்த இடத்தில் எந்த முடிவும் எடுக்காமல் திமுக ஒதுங்கி இருக்க முடியாது; சரியான முடிவை தான் அவர்கள் எடுத்திருக்கிறார்கள். என்னை கேட்டால் இந்தியா கூட்டணியும் இந்த முடிவை ஆதரிக்க வேண்டும். திமுக மட்டுமின்றி, பாஜகவுக்கு எதிராக சித்தாந்த ரீதியில் களமாடுகிற கட்சிகளும் இதை ஆதரிக்கின்றன. அதையும் சேர்த்து நாம் பார்க்க வேண்டும். இந்த ஒன்றை மட்டும் வைத்து கொண்டு திமுக- பாஜக இடையே கூட்டணி என்பது அர்த்தமற்ற வாதம்.
ஸ்டாலின் முடிவை மாற்ற மாட்டார்
இங்கு நாம் பார்க்க வேண்டியது எளிமையான ஒன்று! இப்போது எம்பிக்கள் எண்ணிக்கை கூடினால்.. எம்எல்ஏ மற்றும் உள்ளாட்சி பிரதிநிதிகள் எண்ணிக்கை கூடும். நல்லதுதான். ஆனால், இந்த முடிவை எடுக்கவில்லை என்றால் 2027 மக்கள் தொகை அடிப்படையில் நமக்கு எம்பி எண்ணிக்கை குறையும். இந்த ஆபத்தை திமுக தவிர்த்திருக்கிறது. இருந்தாலும் இந்தியா கூட்டணி தலைவர்கள் மரியாதை நிமித்தமாக சந்திக்கிறார்கள். இதனால் திமுகவின் நிலைப்பாட்டிலே எந்த மாற்றமும் ஏற்படாது என்றே நான் நினைக்கிறேன்" என்றார்.





Click it and Unblock the Notifications
