Delimitation: நாங்கள் எட்டப்பர்கள் அல்ல! கட்டபொம்மன்கள்! ராகுல் காந்திக்கு ஸ்டாலின் பதிலடி
சென்னை: "வரலாறு எங்களை எட்டப்பர்களாக அல்ல, கட்டபொம்மன்களாகவே மதிப்பிடும் என்ற நம்பிக்கை உள்ளது" என திமுக தலைவரும் முன்னாள் முதல்வருமான மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். அன்று எட்டப்பர் என கூறிவிட்டு இன்று தொகுதி மறுவரையறை மசோதாவுக்காக தன்னை சகோதரர் என அழைத்து ட்வீட் போட்டுள்ள ராகுல் காந்திக்கு, ஸ்டாலின், பதிலடி கொடுத்துள்ளார்.
தொகுதி மறுவரையறை விவகாரத்தில் திமுகவின் நிலைப்பாட்டால் காங்கிரஸ் கட்சி ஆடி போயுள்ள நிலையில், இன்று திமுக தலைவர் ஸ்டாலினை சந்திக்க இந்தியா கூட்டணி தலைவர்கள் மல்லிகார்ஜுன கார்கே, சோனியா, ராகுல், மம்தா பானர்ஜி உள்ளிட்டோர் சென்னை வருகிறார்கள். இதனிடையே ஸ்டாலினுக்கு, நாடாளுமன்ற எதிர்க்கட்சித் தலைவர் ராகுல்காந்தி சமூகவலைதள பக்கத்தில் ஒரு கோரிக்கையை வைத்துள்ளார்.

ராகுல் கோரிக்கை
ராகுல் காந்தி வெளியிட்டுள்ள பதிவில் கூறியிருப்பதாவது: "இந்தியா கூட்டணியின் மூத்த தலைவர்களும் நானும் ஸ்டாலினை சந்திக்க சென்னை வருகிறோம். தொகுதி மறுவரையறை மசோதாவை எதிர்க்க வேண்டும் என திமுகவை கேட்டுக் கொள்ள போகிறோம்.
850 இடங்களாக மக்களவையை உயர்த்துவது என்பது இந்தியாவில் ஜனநாயகத்தை முடிவுக்குக் கொண்டு வரும். சகோதரர் ஸ்டாலின் எப்போதும் தமிழர்களுக்கு எதிரான சக்திகளுக்கு எதிர்த்து ஒரு பாறை போன்ற உறுதியாக நின்றிருக்கிறார். எப்போதும் தமிழர், தமிழர்களின் நலனையும் அரசியலமைப்பு சட்டத்தையும் பாதுகாப்பதில் திமுக உறுதியாக நின்றுள்ளது. எனவே நாம் அனைவரும் சேர்ந்து தொகுதி மறுவரையறை மசோதாவை தோற்கடிக்க வேண்டும் என ராகுல் காந்தி கோரிக்கை விடுத்துள்ளார்.
ஸ்டாலினின் பதிலடி
திடீர் ட்விஸ்ட்டாக தன்னை சகோதரர் என அழைத்த ராகுல் காந்திக்கு ஸ்டாலின் பதிலடியை கொடுத்துள்ளார். இதுகுறித்து அவர் தனது ட்விட்டர் பக்கத்தில் கூறியிருப்பதாவது: சகோதரர் ராகுல் காந்தி அவர்களே! அரசியலமைப்பு சட்டத்தையும், மாநில உரிமைகளையும் பாதுகாப்பதில் திமுக வரலாற்று சிறப்புமிக்க பங்களிப்பை செய்துள்ளதாக கூறியதற்கு நன்றி. தமிழகத்தின் நலனையும் தமிழக மக்களின் நலனையும் முதன்மையாக கொண்டே நாங்கள் எப்போதும் ஒவ்வொரு முடிவையும் எடுத்துள்ளோம்.
மாநில உரிமைகளில் நாங்கள் எப்போதும் சமரசம் செய்துக் கொண்டதே இல்லை. வரலாறு எங்களை எட்டப்பர்களாக அல்ல, கட்டபொம்மன்களாகவே மதிப்பிடும் என்பதில் எனக்கு நம்பிக்கை உள்ளது என ஸ்டாலின் பதில் அளித்துள்ளார்.
எட்டப்பர் என சொன்ன ராகுல் காந்தி
கடந்த ஆகஸ்ட் 3ஆம் தேதி நாடாளுமன்ற எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தி மாமல்லபுரத்தில் செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது அவர், "தொகுதி மறுவரையறை மூலம் தமிழக மக்களின் உரிமையை பறிக்க பாஜக அரசு சதி செய்கிறது. தமிழகத்தில் எட்டப்பன் என்ற ஒரு முக்கிய கதாபாத்திரம் உள்ளது. அந்த பெயர் துரோகத்தின் அடையாளமாக கருதப்படுகிறது. யாராவது தமிழகத்தில் தொகுதி மறுவரையறை மசோதாவை ஆதரிக்கிறார்கள் என்றால் அவர்கள்தான் துரோகிகள்" என பேசியிருந்தார். அவர் திமுக பெயரை குறிப்பிடாமல் அக்கட்சியை மறைமுகமாக விமர்சித்ததாகவே பார்க்கப்பட்டது. இது திமுகவினரிடையே கொந்தளிப்பை ஏற்படுத்தியது.
சகோதரர் ஸ்டாலின்
அன்றைய தினம் எட்டப்பர் என கூறிவிட்டு இன்று சகோதரர் ஸ்டாலின் என ராகுல் பதிவிட்டிருக்கிறார். இதை திமுகவினர் விமர்சித்து வருகிறார்கள். அன்று எட்டப்பர், இன்று சகோதரரா? என கேட்டுள்ளனர். மேலும் திமுகவை கடுமையாக விமர்சித்து பேசிய மாணிக்கம் தாகூரையும் உடன் அழைத்து வாருங்கள் என இந்தியா கூட்டணி தலைவர்களுக்கு திமுகவினர் கோரிக்கை விடுத்து வருகிறார்கள்.




Click it and Unblock the Notifications
