Delimitation: ஸ்டாலினின் ஒரே ஒரு மூவ்! ஒட்டுமொத்த டெல்லியே பதறிகிட்டு சென்னை வருகை! கிங்மேக்கர் திமுக!
சென்னை: தொகுதி மறுவரையறை மசோதா விவகாரத்தில் திமுக தலைவர் ஸ்டாலினின் ஒரே ஒரு முடிவால் ஒட்டுமொத்த டெல்லியே பதறி அடித்துக் கொண்டு சென்னைக்கு வருவதால் தற்போது தேசிய அரசியலில் திமுக தவிர்க்க முடியாத கிங்மேக்கராக உருவெடுத்துள்ளது.
நாடாளுமன்ற சிறப்பு கூட்டத் தொடரில் நாளை தொகுதி மறுவரையறை மசோதாவை மத்திய அரசு கொண்டு வருகிறது. தொகுதி மறுவரையறை மசோதா விவகாரத்தில் திமுக நியாயமான டீலிமிட்டேஷனை கேட்டிருந்தது.

ஸ்டாலினின் இரு கோரிக்கைகள்
அதிலும் ஸ்டாலின் இரு திருத்தங்களை கோரியிருந்தார். அதில் நாடாளுமன்றத் தொகுதிகளின் எண்ணிக்கை உயர்த்தப்பட்டால், எக்காரணத்தைக் கொண்டும் தமிழ்நாட்டின் பங்கு தற்போதுள்ள 7.18%-ல் இருந்து குறையக் கூடாது!
1971 மக்கள்தொகை அடிப்படையில், மாநிலங்களுக்கு இடையேயான நாடாளுமன்றப் பிரதிநிதித்துவ விகிதாசாரத்தின் அடிப்படையில் நிர்ணயிக்கப்பட்டு, முன்னர் நிலைப்படுத்தப்பட்டவாறே, அடுத்த 25 ஆண்டுகளுக்கும் எந்தவித மாற்றமும் செய்யப்படக் கூடாது! ஆகியவை ஆகும்.
ஸ்டாலின் சொன்ன இந்த இரு திருத்தங்களையும் மத்திய அரசு ஒப்புக் கொண்டு மசோதாவில் திருத்தியுள்ளது. இந்த மசோதா நகலும் திமுகவுக்கு கிடைத்துள்ளது. இந்த நிலையில்தான் நேற்றைய தினம் திமுக எம்பிக்கள் கூட்டம் சென்னை அண்ணா அறிவாலயத்தில் நடந்தது.
இந்த கூட்டத்தில் தொகுதி மறுவரையறை மசோதாவுக்கு நிபந்தனையுடன் கூடிய ஆதரவு அளிப்பதாக திமுக அறிவித்திருந்தது. இந்த கூட்டத்தில் ஸ்டாலின் பேசுகையில், "தொகுதி மறுவரையறை குறித்து இந்தியாவில் முதல்முறையாக விழிப்புணர்வு ஏற்படுத்தியது திமுகதான். கடந்த ஏப்ரல் மாதம் கொண்டு வரப்பட்ட மசோதாவை நாம் தோற்கடித்தோம். திமுக மட்டும் குரல் எழுப்பாமல் இருந்திருந்தால், வடமாநிலங்களுக்கு தொகுதிகள் அதிகரித்திருக்கும், நமக்கான மக்களவை தொகுதிகளின் சதவீதம் குறைந்திருக்கும். இன்றைக்கு மசோதாவின் நகல் கிடைத்துவிட்டது.
அதில் நாம் முன் வைத்த இரு முக்கியமான கோரிக்கைகளும் இடம்பெற்றுள்ளது. இது நமது 3 ஆண்டு கால தொடர் போராட்டத்திற்கு கிடைத்த வெற்றி. நாம் எதிர்பார்த்த மாதிரியே இந்த மசோதாவில் திருத்தங்கள் வந்துள்ளன. வாள் எடுக்க வேண்டுமா?, கேடயம் எடுக்க வேண்டுமா? என்பதை சரியாகவே தீர்மானித்துள்ளோம்" என தெரிவித்திருந்தார்.
முடிவால் அதிர்ச்சி
தொகுதி மறுவரையறை மசோதாவுக்கு திமுக ஏன் ஆதரவு என்பதையும் அவர் விளக்கியிருந்தார். திமுகவின் இந்த திடீர் முடிவால் காங்கிரஸ் கட்சி அதிர்ச்சி அடைந்துள்ளது. திமுகவும் சமாஜ்வாதி (சரத்பவார்)கட்சியும் ஆதரித்தால் மசோதா நிறைவேறும் என்பதால் காங்கிரஸ் தலைமை இரு கட்சிகளையும் சமாதானம் செய்கிறது.
சென்னை வருகை
அந்த வகையில் இந்தியா கூட்டணி தலைவர்கள் மல்லிகார்ஜுன கார்கே,சோனியா காந்தி, ராகுல், மம்தா பானர்ஜி, தெலுங்கானா முதல்வர் ரேவந்த் ரெட்டி உள்ளிட்டோர் மும்பை சென்று சரத்பவாரிடம் பேச்சுவார்த்தை நடத்துகிறார்கள்.
இந்த நிலையில் திமுக தலைவர் ஸ்டாலினை சந்தித்து தொகுதி மறுவரையறை மசோதாவுக்கு ஆதரவு நிலைப்பாட்டை மறுபரிசீலனை செய்ய வேண்டும் என கோரிக்கை விடுக்கவும், இந்தியா கூட்டணி தலைவர்கள் நேரம் கேட்டனர். ஸ்டாலினும் நேரம் கொடுத்துள்ளார்.
ராகுல் காந்தி ட்வீட்
இதனிடையே ராகுல் காந்தி, தொகுதி மறுவரையறை மசோதாவை தோற்கடிப்பது குறித்து சகோதரர் ஸ்டாலினிடம் பேச இந்தியா கூட்டணி தலைவர்கள் வருவதை சமூகவலைதள பக்கத்தில் குறிப்பிட்டிருந்தார்.
ஆனால் ஸ்டாலினோ, "நீங்கள் என்னை சந்திக்க வருவதே நேர விரயம்" என்பதை போல், சந்திப்பதற்கு முன்பே, "தொகுதி வரையறை மசோதாவுக்கான ஆதரவு நிலைப்பாட்டில் இருந்து பின்வாங்க மாட்டேன்" என்பதை சூசகமாக ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
2 அமைச்சர் பதவிக்காக
தவெகவில் 2 அமைச்சர் பதவிக்காக திமுகவின் முதுகில் குத்திவிட்டு தவெக பக்கம், காங்கிரஸ் கட்சி சொல்லாமல் கொள்ளாமல் சென்றுவிட்டது. அதன் பிறகு காங்கிரஸ் நிர்வாகிகள் மாணிக்கம் தாகூர், பெ விஸ்வநாதன், ஜோதிமணி, பிரவீன் சக்கரவர்த்தி, கத்பர்த் உள்ளிட்டோர் பேசிய பேச்சுக்கள் இருக்கிறதே அப்பப்பா!
கிங்மேக்கர்
தற்போது தொகுதி மறுவரையறை விவகாரத்தில் ஸ்டாலின் ஒரே ஒரு மூவ்தான் செய்தார். ஆனால் பதறியடித்துக் கொண்டு ஒட்டுமொத்த டெல்லியே சென்னைக்கு படையெடுகிறது. இதன் மூலம் தேசிய அரசியலில் திமுக கிங்மேக்கராக உருவெடுத்துள்ளது என்றே சொல்லலாம். ஸ்டாலினால் டெல்லி காங்கிரஸே ஆட்டம் கண்டுள்ளதை திமுகவினர் கொண்டாடி வருகிறார்கள். "வினை விதைத்தவன் வினை அறுப்பான்" என போஸ்ட்கள் பறக்கின்றன.




Click it and Unblock the Notifications
