என் மகன் பிரதமர் ஆகவே முடியாது.. கைவிட்டுடாதீங்க! ராகுலுக்காக ஸ்டாலினிடம் இறங்கி செல்லும் சோனியா!
சென்னை: நாளை நாடாளுமன்றத்தின் சிறப்புக் கூட்டத்தொடர் தொடங்கவுள்ள நிலையில், டெல்லி அரசியலின் ஒட்டுமொத்த கவனமும் இன்று சென்னை பக்கம் குவிந்துள்ளது. மத்திய பாஜக அரசு கொண்டு வரவுள்ள திருத்தப்பட்ட தொகுதி மறுவரையறை மசோதாவுக்கு திமுக ஆதரவு அறிவித்துள்ள நிலையில், அந்த முடிவைத் திரும்பப் பெற வலியுறுத்தி சோனியா காந்தி, ராகுல் காந்தி, மல்லிகார்ஜுன கார்கே, மம்தா பானர்ஜி உள்ளிட்ட எதிர்க்கட்சித் தலைவர்கள் இன்று தனி விமானங்களில் சென்னைக்கு வருகை தந்துள்ளனர்.
வழக்கமாகக் கூட்டணிப் பேச்சுவார்த்தைகளுக்குத் தூதுவர்களை அனுப்பும் சோனியா காந்தி, இந்த முறை உடல்நலத்தையும் பொருட்படுத்தாமல் தானே நேரடியாகக் களமிறங்கி, எதிர்க்கட்சித் தலைவர்கள் அனைவரையும் அழைத்துக்கொண்டு சென்னைக்கு வந்திருப்பது அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

சோனியா காந்தி இவ்வளவு தீவிரமாக இறங்கக் காரணம் என்ன?
மக்களவைத் தொகுதிகளை 543-லிருந்து 850 ஆக உயர்த்தும் இந்த மசோதா நிறைவேறினால், அது தனது மகன் ராகுல் காந்தியின் தேசிய அரசியல் எதிர்காலத்தையும், காங்கிரஸ் கட்சியின் ஆட்சிக் கனவையும் நிரந்தரமாக முடக்கிவிடும் என சோனியா காந்தி கருதுவதாக டெல்லி அரசியல் வட்டாரங்களில் பேசப்படுகிறது.
இந்த மசோதாவின்படி அனைத்து மாநிலங்களுக்கும் ஒரே சீராக 50% இடங்கள் உயர்த்தப்படும்போது, உத்தரப் பிரதேசத்தில் 120 இடங்களும், மத்தியப் பிரதேசம், குஜராத், ராஜஸ்தான், பீகார் ஆகிய மாநிலங்களில் பல நூறு இடங்களும் உருவாகின்றன. வட இந்திய மாநிலங்களில் பாஜக வலுவாக உள்ள நிலையில், 850 தொகுதிகள் கொண்ட மக்களவையில் ஆட்சி அமைக்கத் தேவையான 400-க்கும் மேற்பட்ட இடங்களைப் பிடிப்பது காங்கிரஸுக்குக் கிட்டத்தட்ட சாத்தியமற்றதாகிவிடும் என்ற கவலை சோனியா காந்தியிடம் எழுந்துள்ளது. இது மட்டும் நடந்தால் என் மகன் இனி பிரதமராகவே முடியாது என்று சோனியா வருந்தியதாக கூறப்படுகிறது.
புதிய தொகுதிகளின் எல்லைகளைப் பிரிக்கும்போது பாஜக அரசு தனக்குச் சாதகமாகத் தொகுதிகளை வடிவமைத்து, ஜனநாயகத்தையே முடிவுக்குக் கொண்டு வந்துவிடும் என ராகுல் காந்தியும் இன்று காலை எச்சரித்துள்ளார்.
எந்த எல்லைக்கும் செல்லத் தயாரான சோனியா காந்தி!
இதனால்தான், திமுகவை விட்டுவிட்டு இனிப் பேசுவதில் பயனில்லை.. எந்த எல்லைக்கும் சென்று ஸ்டாலினின் மனதை மாற்றியாக வேண்டும் என்ற முடிவுக்கு சோனியா காந்தி வந்துள்ளார். அதன் விளைவாகவே, காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி, கர்நாடக துணை முதல்வர் டி.கே.சிவக்குமார், தெலங்கானா முதல்வர் ரேவந்த் ரெட்டி, மார்க்சிஸ்ட் பொதுச்செயலாளர் எம்.ஏ.பேபி, கபில் சிபல் உள்ளிட்ட ஒட்டுமொத்த எதிர்க்கட்சித் தலைவர்களையும் ஒரே அணியாகத் திரட்டி இன்று பிற்பகல் 2 மணியளவில் சென்னைக்கு அழைத்து வந்துள்ளார்.
சென்னை சந்திப்பை முடித்துக்கொண்டு, இன்று இரவு மும்பையில் மருத்துவமனையில் உள்ள சரத் பவாரையும் இக்குழுவினர் சந்திக்கின்றனர்
ஸ்டாலின் மனதை மாற்றுவாரா?
இதற்கிடையே, சென்னை புறப்படும் முன்பு ராகுல் காந்தி வெளியிட்ட பதிவில், தமிழ் விரோத சக்திகளுக்கு எதிராகச் சகோதரர் ஸ்டாலின் எப்போதும் பாறையைப் போல நின்றுள்ளார்; நாம் இணைந்து இந்த மசோதாவைத் தோற்கடிக்க வேண்டும என வேண்டுகோள் விடுத்திருந்தார்.
ஆனால், அதற்குச் சற்று முன்பு பதிலளித்த மு.க.ஸ்டாலின், தமிழ்நாட்டின் நலனையும், தமிழ் மக்களின் நலனையும் முதன்மையாகக் கொண்டே நாங்கள் எப்போதும் முடிவெடுக்கிறோம். இதில் ஒருபோதும் சமரசம் செய்துகொள்ள மாட்டோம்; வரலாறு எங்களைக் கட்டபொம்மன்களாகத்தான் மதிப்பிடுமே தவிர, எட்டப்பன்களாக அல்ல எனத் திட்டவட்டமாகத் தெரிவித்துவிட்டார்.
அறிவாலய வட்டாரத்தின் நிலைப்பாடு என்ன?
தமிழ்நாட்டின் 7.18% இடங்களைப் பாதுகாத்து, 2051-ம் ஆண்டு வரை மாநில விகிதம் மாறாது என்ற உத்தரவாதத்தைப் பெற்றுள்ளதால், திமுக தனது முடிவை மாற்றிக்கொள்ள வாய்ப்பே இல்லை என அக்கட்சி வட்டாரங்கள் கூறுகின்றன. சோனியா காந்தி மற்றும் ராகுல் காந்தியின் இந்தக் கடைசி நேரச் சென்னை வருகை, ஸ்டாலினின் உறுதியை அசைக்குமா அல்லது மரியாதை நிமித்தமான சந்திப்போடு முடியுமா என்பது இன்னும் சற்று நேரத்தில் தெரிந்துவிடும்.




Click it and Unblock the Notifications
