"சும்மா வந்து கைத்தட்டிட்டு தான் போகணும்".. லோக்சபா இடங்களை 850 ஆக உயர்த்துவதால் சசிதரூர் கோபம்
டெல்லி: ''லோக்சபாவில் 543 எம்பிக்கள் இருக்கும்போதே சிரமங்கள் உள்ளன. இதனை 800க்கும் அதிகமாக உயர்த்தும்போது அனைவருக்கும் பேச வாய்ப்பு கிடைக்குமா? இப்போது அமைச்சர்களிடம் கேள்விகளை கேட்கவோ, தங்கள் தொகுதியின் பிரச்சினைகள் குறித்து விவாதிக்கவோ நேரம் கிடைப்பது இல்லை. எம்பிக்களின் எண்ணிக்கை 800க்கு அதிகமாக உயர்ந்தால், பலர் வெறும் கைதட்டுவதற்காக மட்டுமே அங்கு வருவார்கள். அதோடு பாஜக தங்கள் அரசியல் நலன்களுக்காகச் செயல்படுகிறார்களா? என்ற கேள்வி எழுகிறது'' என்று காங்கிரஸ் எம்பி சசிதரூர் கடுமையாக சாடியுள்ளார்.

நாளை நாடாளுமன்றத்தின் சிறப்பு கூட்டத்தொடர் தொடங்கி நடைபெற உள்ளது. நாளை லோக்சபா கூடுகிறது. அப்போது மத்திய அரசு 3 முக்கிய மசோதாக்களை தாக்கல் செய்ய உள்ளது.
நாடாளுமன்றம் - சட்டசபைகளில் மகளிருக்கு 33 சதவீத இடஒதுக்கீடு வழங்குவதற்கான அரசியல் சாசன 132வது திருத்த மசோதா, மாநிலங்களுக்கான தொகுதி மறுவரையறை (இரண்டாவது) மசோதா 2026, யூனியன் பிரதேசங்களுக்கான தொகுதி மறுவரையறை மசோதா 2026 ஆகியவை தாக்கல் செய்யப்பட உள்ளது.
தொகுதி மறுவரையை மசோதா நிறைவேறினால் தற்போதுள்ள 543 லோக்சபா தொகுதிகளின் எண்ணிக்கை 850 ஆக அதிகரிக்க உள்ளது. மக்கள் தொகை அடிப்படையில் இல்லாமல் அனைத்து யூனியன் பிரதேசங்கள், மாநிலங்களுக்கும் 50 சதவீதம் என்ற அடிப்படையில் தொகுதிகளின் எண்ணிக்கை அதிகரிக்கப்பட உள்ளது. அதன்பிறகு 2051ம் ஆண்டு வரை இந்த எண்ணிக்கையில் மாற்றம் இருக்காது.
இந்த தொகுதிகளின் எண்ணிக்கையை உயர்த்துவது என்பது பாஜகவிற்கு சாதகமாக அமையும் என்று எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டி வருகின்றன. அதன்படி காங்கிரஸ், இந்திய கம்யூனிஸ்ட், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் உள்பட பிற இந்தியா கூட்டணி கட்சிகள் இந்த மசோதாக்களுக்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளன. இந்நிலையில் தான் லோக்சபா தொகுதிகளின் எண்ணிக்கையை 850 ஆக அதிகரிக்க காங்கிரஸ் கட்சியின் திருவனந்தபுரம் எம்பி சசிதரூர் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.
ஜார்க்கண்டின் ஜம்ஷெட்பூரில் நடந்த நிகழ்ச்சிக்கு பிறகு சசிதரூர் கூறியதாவது: ''நாடாளுமன்றத்தில் சிறப்பு கூட்டத்தொடரில் தொகுதி மறுவரையறை மசோதா கொண்டு வந்து தாக்கல் செய்யப்பட உள்ளது. மத்திய அரசின் நோக்கம் என்னவென்று எனக்கு புரியவில்லை. இது குறுகிய கால சிந்தனையா? அல்லது அவர்கள் தங்கள் அரசியல் நலன்களுக்காகச் செயல்படுகிறார்களா? அல்லது நாட்டின் நலனைக் கருத்தில் கொள்கிறார்களா? என்பது தெரியவில்லை.
அதேபோல் நாட்டின் நலனுக்காக 800க்கும் அதிகமான எம்பிக்களை கொண்டு திறம்பட செயல்பட முடியுமா? அனைவரும் பேசுவதற்கு வாய்ப்பு கிடைக்குமா? அங்கு விவாதங்கள் நடைபெறுமா? எனக்கு தெரியவில்லை. ஆனால், தற்போதைய 543 எம்பிக்களை கொண்ட லோக்சபாவிலேயே பணிகளை மேற்கொள்வது மிகவும் கடினமாக இருக்கும்போது இது எப்படிச் சாத்தியம் என்று தோன்றுகிறது.
இப்போது அமைச்சர்களிடம் கேள்விகளை கேட்கவோ, தங்கள் தொகுதியின் பிரச்சினைகள் குறித்து விவாதிக்கவோ, 'ஜீரோ ஹவர்' நேரத்தில் பேசவோ வாய்ப்பு கிடைப்பதில்லை. எம்பிக்களின் எண்ணிக்கை 800க்கு அதிகமாக உயர்ந்தால், பலர் வெறும் கைதட்டுவதற்காக மட்டுமே அங்கு வருவார்கள்.
இதனால் பாஜகவின் நோக்கம் என்ன? எதை சாதிக்க விரும்புகிறார்கள்? ஒவ்வொரு தொகுதியிலும் எல்லைகளை மாற்றி அமைப்பதன் மூலம், தங்கள் கட்சிக்கு சாதகமான சூழலை உருவாக்கவே அவர்கள் முயல்கிறார்கள். பாஜக உண்மையிலேயே இந்தியாவின் நலனை பற்றித்தான் சிந்திக்கிறதா? அல்லது அடுத்த இரண்டு முதல் ஐந்து ஆண்டுகளுக்கு பாஜக நலனை பற்றி மட்டும் சிந்திக்கிறதா? என்ற கேள்வி எழுந்துள்ளது என்ற கேள்வி உள்ளது'' என சாடியுள்ளார்.


Click it and Unblock the Notifications
