ஆளுங்கட்சி ஓரங்கட்டப்பட்டு, திமுக மையப்புள்ளியாக மாறிய அதிசயம்! வென்றும் கண்டுகொள்ளப்படாத விஜய்
சென்னை: தமிழக அரசியல் வரலாற்றிலேயே இதற்கு முன்பு எப்போதும் இல்லாத ஒரு விசித்திரமான காட்சி இன்று சென்னையில் அரங்கேறி வருகிறது. பொதுவாக எந்த மாநிலத்திலும் ஆளும் முதலமைச்சரைச் சந்திக்கவே தேசியத் தலைவர்கள் படையெடுப்பார்கள். ஆனால், தமிழகத்தில் ஆளுங்கட்சியாக இருக்கும் முதலமைச்சர் விஜய் தலைமையிலான தமிழக வெற்றிக் கழகம தேசிய அரசியலில் எந்தத் தாக்கமும் இன்றி ஓரங்கட்டப்பட்டிருக்க, திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் வீட்டு வாசலில் ஒட்டுமொத்த இந்தியாவின் முக்கியத் தலைவர்களும் வரிசை கட்டி நிற்கிறார்கள்!

ஸ்டாலினைச் சுற்றிச் சுழலும் தேசிய அரசியல்!
நாளை நாடாளுமன்றத்தின் சிறப்புக் கூட்டத்தொடர் தொடங்கவுள்ள நிலையில், மத்திய பாஜக அரசு கொண்டு வரவுள்ள தொகுதி மறுவரையறை மசோதாவுக்கு திமுக ஆதரவு அறிவித்துள்ளது. இந்த முடிவைத் திரும்பப் பெற வலியுறுத்தி, காங்கிரஸ் தேசியத் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, சோனியா காந்தி, மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி, மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி உள்ளிட்ட 13-க்கும் மேற்பட்ட 'இந்தியா' கூட்டணி மூத்த தலைவர்கள் இன்று தனி விமானங்களில் சென்னைக்கு வந்துள்ளனர்.
தமிழக சட்டமன்றத் தேர்தலில் திமுக ஆட்சியை இழந்திருந்தாலும், டெல்லி அரசியலின் தலையெழுத்தைத் தீர்மானிக்கும் சக்தியாக மு.க.ஸ்டாலின் இன்றும் இருக்கிறார் என்பதையே இந்த நிகழ்வு காட்டுகிறது.
தேர்தலில் வென்றும் தேசிய அரசியலில் முடங்கிய முதலமைச்சர் விஜய்!
கடந்த ஏப்ரல் மாதம் நடைபெற்ற சட்டமன்றத் தேர்தலில் வெற்றி பெற்று விஜய் முதலமைச்சராகப் பதவியேற்றாலும், தேசிய அளவிலான முக்கியப் பிரச்சினைகளில் ஆளுங்கட்சியான தவெக இதுவரை எந்தத் தாக்கத்தையும் ஏற்படுத்தவில்லை என்ற விமர்சனம் எழுந்துள்ளது:
மக்களவை மற்றும் மாநிலங்களவையில் தவெகவுக்கு ஒரு எம்பிகூட கிடையாது. ஆனால், எதிர்க்கட்சியான திமுகவிடம் 22 மக்களவை எம்பிக்களும், 8 மாநிலங்களவை எம்பிக்களும் உள்ளனர். டெல்லியில் ஒரு அரசியலமைப்புச் சட்டத் திருத்த மசோதா நிறைவேறுமா, தோற்குமா என்பதைத் தீர்மானிக்கும் 'கிங் மேக்கர்' சக்தி ஸ்டாலின் கையில்தான் உள்ளது.
தமிழ்நாட்டின் எதிர்கால எம்பி இடங்கள் 39-லிருந்து 59 ஆக உயரப்போகும் இவ்வளவு முக்கியமான தொகுதி மறுவரையறை மசோதா குறித்து, முதலமைச்சர் விஜய் இதுவரை எந்தவொரு தெளிவான கருத்தையோ, அதிகாரப்பூர்வ நிலைப்பாட்டையோ அறிவிக்கவில்லை.
தமிழகத்தில் விஜய்யின் தவெக அரசில் அங்கம் வகித்து, 2 அமைச்சர் பதவிகளைப் பெற்றுள்ள காங்கிரஸ் கட்சியின் தலைவர்களே கூட, இந்த விவகாரத்தில் முதலமைச்சர் விஜய்யிடம் ஆலோசனை கேட்காமல், நேராக எதிர்க்கட்சித் தலைவர் ஸ்டாலினைச் சந்திக்கச் சென்னைக்கு ஓடோடி வந்துள்ளனர்.
அதிகாரத்தை விட வலுவான அரசியல் செல்வாக்கு!
இதற்கிடையே, நேற்று திருப்பரங்குன்றம் தீபம் ஏற்றும் விவகாரத்திலும் முதலமைச்சர் விஜய் மவுனம் காப்பதைச் சுட்டிக்காட்டிய மு.க.ஸ்டாலின், சனி, ஞாயிறு வீக்கெண்ட் ஓய்வுக்குப் பிறகாவது திங்கட்கிழமை முதலமைச்சர் வாய் திறப்பாரா? எனக் கடுமையாக விமர்சித்திருந்தார்.
மறுபுறம், இன்று காலை ராகுல் காந்தி வெளியிட்ட பதிவுக்குப் பதிலளித்துள்ள ஸ்டாலின், தமிழ்நாட்டின் நலனையும், தமிழ் மக்களின் நலனையும் முதன்மையாகக் கொண்டே நாங்கள் எப்போதும் முடிவெடுக்கிறோம்; வரலாறு எங்களைக் கட்டபொம்மன்களாகத்தான் பார்க்கும், எட்டப்பன்களாக அல்ல எனத் திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளார்.
ஆட்சியில் இருந்தாலும் சரி, எதிர்க்கட்சியாக இருந்தாலும் சரி.. டெல்லி ஆட்சியாளர்களும், தேசிய எதிர்க்கட்சித் தலைவர்களும் தவிர்க்க முடியாத சக்தியாக மு.க.ஸ்டாலின் திகழ்வதும், ஆளுங்கட்சியாக இருந்தும் தேசிய அரசியலில் எந்தப் பங்களிப்பும் இன்றி முதலமைச்சர் விஜய் தனித்து விடப்பட்டிருப்பதும் தமிழக அரசியலில் விவாதப்பொருளாக மாறியுள்ளது.




Click it and Unblock the Notifications
