109-ல் தடுமாறும் விஜய் அரசு.. அருள் விக்னேஷ் ராஜினாமா செய்தால்? செந்தில் பாலாஜியை விட பெரிய மேட்டர்
சென்னை: தமிழகத்தில் ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்திய விஜய் அரசுக்கு இப்போது பெரும்பான்மை பலம் குறித்த நெருக்கடி இருப்பதாக அரசியல் வட்டாரத்தில் பேசப்படுகிறது. கள்ளக்குறிச்சி எம்எல்ஏ அருள் விக்னேஷ் விவகாரத்தில் நடவடிக்கை எடுக்கத் தயங்குவதற்கும், ஆட்சி கவிழ்ந்துவிடுமோ என்ற அச்சத்துக்கும் தொடர்பு இருக்கிறதா? தொடர்ந்து நம்பிக்கையில்லாத் தீர்மானம் கொண்டுவர திமுக திட்டமிடுகிறதா இதுகுறித்து அரசியல் விமர்சகர் மணி பேட்டியொன்றில் தன்னுடைய கருத்தை தெரிவித்துள்ளார்.
The Fire Media சேனலுக்கு பேட்டி தந்துள்ள மூத்த பத்திரிகையாளர் மணி, "அருள் விக்னேஷ் தவறு செய்த உடனேயே அவரைக் கட்சியிலிருந்து நீக்கியிருந்தாலும், கைது செய்திருந்தாலும் விஜய் அரசுக்கு நல்ல பெயர் கிடைத்திருக்கும். தவறு செய்தவர்கள் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்கிறார்கள் என்ற நம்பிக்கை மக்களிடம் ஏற்பட்டிருக்கும். ஆனால், இதை அப்படி பார்க்காமல் வேறு விதமாக அணுகுவதற்குப் பின்னால் என்ன அரசியல் வியூகம் இருக்கிறது என்பதுதான் கேள்வி.

இதற்கு ஒரே காரணம் மெஜாரிட்டி இல்லாததுதான். அதனால்தான் அவர்கள் அஞ்சுகிறார்கள். இப்போது 118 என்பது பெரும்பான்மைக்கான எண்ணிக்கை. அரசின் எம்எல்ஏக்கள் எண்ணிக்கை 107-ல் இருந்து 108, 109 என்று மாறிக்கொண்டிருக்கிறது. இடைத்தேர்தல்கள் நடந்தாலும் 109, 110 என்ற இழுபறி நிலையே தொடரலாம்.
மெஜாரிட்டி இல்லையே
இந்த சூழலில் சொந்தக் கட்சி எம்எல்ஏவைக் கைது செய்தால், ஒரு வாக்கு வித்தியாசத்தில்கூட அரசு கவிழ்ந்துவிடலாம் என்ற பயம் இருக்கிறது. வாஜ்பாய் அரசுகூட ஒரு வாக்கு வித்தியாசத்தில்தான் கவிழ்ந்தது. ஆட்சியை தக்கவைத்துக்கொள்ள வேண்டும் என்ற அக்கறையும், ஆட்சி கவிழ்ந்துவிடுமோ என்ற தயக்கமும்தான் நடவடிக்கை எடுப்பதில் தாமதத்தை ஏற்படுத்தியிருக்கலாம்.
ஆனால், நடவடிக்கை எடுத்திருந்தால் மக்கள் ஆதரவு கிடைத்திருக்குமே? அந்த புரிதல் அவர்களுக்கு இல்லை. அருள் விக்னேஷை கட்சியில் இருந்து நீக்கியிருந்தாலும் அவர் சட்டமன்ற உறுப்பினராகத் தொடர முடியும். அவருடைய வாக்குரிமையும் உடனடியாகப் பறிபோய்விடாது. எனவே, அரசு கவிழ்ந்துவிடும் என்ற அச்சத்துக்கு அவசியமே இல்லை.
செந்தில் பாலாஜி
முதலமைச்சர் விஜய், யாராலும் தன்னை மிரட்ட முடியாது என்றும், ஒரே ஒரு அதிகார மையம்தான் இருக்கிறது, அது தான்தான் என்றும் ஏற்கனவே பேசியிருக்கிறார். அதை நிரூபிப்பதற்கான வாய்ப்புதான் இந்த விவகாரம். யார் தவறு செய்தாலும் நடவடிக்கை எடுப்போம் என்று உறுதியான அறிக்கையை வெளியிட்டு, சம்பந்தப்பட்டவர் மீது நடவடிக்கை எடுத்திருக்க வேண்டும்.
திமுக ஆட்சியில் செந்தில் பாலாஜி சிறையில் இருந்தபோதும் அமைச்சராகத் தொடர்ந்தது விமர்சனத்துக்கு உள்ளானது. அதைவிடவும் ஒரு படி மேலான பிரச்சினை இது. அன்று ஊழல் குற்றச்சாட்டு. இப்போது பெண்களுக்கு எதிரான குற்றச்சாட்டு. இப்படிப்பட்ட விவகாரத்தில் நடவடிக்கை எடுக்காமல், இன்னொரு பக்கம் ஊழல் ஒழிப்பு பற்றிப் பேசினால் அது நடுநிலையாளர்கள் மத்தியில் எடுபடாது.
திமுகவின் அடுத்த அரசியல் வியூகம் என்ன?
விஜய் நிம்மதியாக ஆட்சி செய்யக்கூடாது என்பதில் திமுக தெளிவாக இருக்கிறது. அருள் விக்னேஷ் ராஜினாமா செய்தாலும், செய்யாவிட்டாலும் அரசுக்கு எதிராக நம்பிக்கையில்லாத் தீர்மானம் கொண்டுவர வாய்ப்பு இருக்கிறது. சட்டப்படி குறிப்பிட்ட கால இடைவெளியில் இதைக் கொண்டுவர முடியும். ஆனால், திமுக இதை அரசைக் கவிழ்க்கும் நோக்கத்தைவிட அரசியல் உத்தியாகவே பயன்படுத்தலாம்.
நம்பிக்கையில்லாத் தீர்மானம் வந்தால் அரசு தோற்றுவிடும் என்று இப்போதே சொல்ல முடியாது. காங்கிரஸ் உள்ளிட்ட கூட்டணிக் கட்சிகளின் ஆதரவும், வாக்கெடுப்பில் சில உறுப்பினர்கள் கலந்துகொள்ளாமல் இருப்பதற்கான வாய்ப்பும் இருக்கிறது. அதனால் அரசு உடனடியாக கவிழ்ந்துவிடும் என்று கருதவில்லை. ஆனால், ஆட்சியை சுற்றிய நிச்சயமற்ற அரசியல் சூழல் தொடர்ந்து நீடிக்கலாம்.
விஜய் அரசு கவிழுமா
இதனிடையே, திமுக தரப்பில் மீண்டும் ஆபரேஷன் மேகாலயா முயற்சி தொடங்கியிருப்பதாகவும் பேசப்படுகிறது. சட்டமன்ற உறுப்பினர்களை ராஜினாமா செய்ய வைப்பதற்காக ரூ.30 கோடி, ரூ.40 கோடி எனப் பணம் செலவழிக்க முயற்சி நடப்பதாகக் கூறப்படுகிறது. இதுபோன்ற முயற்சிகள் மூலம் அரசுக்கு நெருக்கடியை ஏற்படுத்தப் பார்க்கிறார்கள்.
ஆனால், இப்போதைக்கு விஜய் அரசு கவிழ்ந்துவிடும் என்று தோன்றவில்லை. அடுத்த ஆறு மாதங்களுக்கு அரசு நீடிக்க வாய்ப்பு இருக்கிறது. அதே நேரத்தில், திமுகவின் அரசியல் முயற்சிகளால் ஆட்சியைச் சுற்றிய நிச்சயமற்ற தன்மை தொடர்ந்து இருக்கும்" என்றெல்லாம் தெரிவித்துள்ளார்.




Click it and Unblock the Notifications
