திருப்பரங்குன்ற தீப விஷயத்தில் ரோட்டுக்கு வந்த கம்யூனிஸ்ட், விசிக! தவெக அப்படியே மிஸ்ஸிங்!
மதுரை: திருப்பரங்குன்றத்தில் தீபம் ஏற்றுவது தொடர்பாக உச்சநீதிமன்றம் கொடுத்த உத்தரவுக்கு, கம்யூனிஸ்ட் கட்சிகள் மற்றும் விசிக ரோட்டில் இறங்கி தங்கள் எதிர்ப்பை தெரிவித்தன. இப்படி இருக்கையில் இந்த பேரணியில் தவெக பங்கேற்காதது விமர்சனங்களை ஏற்படுத்தியிருக்கிறது.
இந்துத்துவா அமைப்பை சேர்ந்த ராம ரவிக்குமார் என்பவர் தொடுத்த மனுவில், திருப்பரங்குன்றம் மலை மீது உள்ள தூணில் தீபம் ஏற்ற கோரிக்கை வைக்கப்பட்டிருந்தது. இந்த மனு மதுரை உயர்நீதிமன்ற கிளை, சென்னை உயர்நீதிமன்றம் என வந்து, கடைசியாக உச்சநீதிமன்றத்தில் வந்து நின்றது.

நவ.20ம் தேதியன்று உச்சநீதிமன்றம் இந்த வழக்கில் இடைக்கால உத்தரவு பிறப்பிக்கிறது. அதில், இந்த ஒருமுறை மனுதாரர் கேட்கும் தூணில் தீபம் ஏற்ற வேண்டும் என்று சொல்லியிருந்தது. ஆனால், மனுதாரர் கேட்கும் தூண் என்பது காலங்காலமாக தீபம் ஏற்றும் தூண் கிடையாது. அது வெறும் கல் தூண். முக்கோணவியல் மூலம் நிலத்தை அளக்க.. ஆங்கிலேயர்கள் நட்ட கல் தூண். அதில் போய் தீபம் ஏற்ற வேண்டும் என்று கேட்பது சாத்தியமில்லை என்று தமிழக அரசு வாதிட்டது.
இந்த வாதங்கள் ஏற்கப்படவில்லை. இப்படி இருக்கையில் நவ.24ம் தேதி, கார்த்திகை தீபத்தன்று வழக்கம் போல தீபம் ஏற்றப்படும் உச்சிப்பிள்ளையார் கோயில் மண்டபத்தில் தீபம் ஏற்றப்பட்டது. எனவே நீதிமன்ற அவமதிப்பு என்று இந்து அமைப்புகள்.. மனுத்தாக்கல் செய்ய, அதை விசாரித்த உச்சநீதிமன்றம் இன்று கட்டாயமாக தீபம் ஏற்ற உத்தரவிட்டது.
இந்த உத்தரவுக்கு ஜனநாயக அமைப்புகள் கடும் எதிர்ப்பு தெரிவித்திருந்தன. இந்து அமைப்புகள் தீபம் ஏற்ற கோரும் பகுதியில் மசூதி இருக்கிறது. இது நாளை பின்பு சட்டம் ஒழுங்கு பிரச்சனையாக வெடிக்கும் என்று எச்சரித்திருந்தன.
இந்திய கம்யூனிஸ்ட் கட்சி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மற்றும் விடுதலை சிறுத்தைகள் கட்சி உள்ளிட்டவை, தீர்ப்புக்கு எதிராகவும், மத நல்லிணக்கத்தை வலியுறுத்தியும் இன்று மதுரை, ராமநாதபுரத்தில் பேரணியை நடத்தின. ஆனால் இந்த பேரணியில் தவெக சார்பில் யாரும் பங்கேற்கவில்லை. உச்சநீதிமன்றம் கொடுத்த தீர்ப்பு குறித்து தவெக எந்த நிலைப்பாட்டையும் எடுக்காதது விமர்சனங்களை கிளப்பியிருக்கிறது. தீர்ப்புக்கு எதிராக வீதிக்கு வரவில்லை எனில்.. தவெக தீர்ப்புக்கு ஆதரவாக இருக்கிறதா? என்கிற கேள்வியை பலரும் எழுப்பியிருக்கின்றனர்.
அதேபோல முதலமைச்சர் விஜய் ஏன் இந்த விஷயத்தில் வாய் திறக்கவில்லை? என திமுக உள்ளிட்ட கட்சிகளும் கேள்வி எழுப்பியிருக்கின்றன.


Click it and Unblock the Notifications
