"எதிர்க்கிறோம்”.. ஸ்டாலினுக்காக MLA பதவியையே ராஜினாமா செய்ய முன்வந்த தமிமுன் அன்சாரி அதிரடி முடிவு!
சென்னை: மத்திய பாஜக அரசின் புதிய தொகுதி மறுவரையறை மசோதாவை திமுக ஆதரித்துள்ள நிலையில், அந்த மசோதாவில் எதிர்கால அரசியல் அபாயங்கள் உள்ளதால் அதனை எதிர்க்க முடிவு செய்துள்ளதாக மனிதநேய ஜனநாயக கட்சி அறிவித்துள்ளது.
தொகுதிகளின் எண்ணிக்கையை உயர்த்துவதைத் தவிர்த்து, அடுத்த 25 ஆண்டுகளுக்குத் தற்போதைய நிலையே தொடர வேண்டும் என மஜக தலைமை நிர்வாகக் குழு தீர்மானம் செய்யப்பட்டுள்ளதாக தமிமுன் அன்சாரி தெரிவித்துள்ளார்.

திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையில் இன்று, நடைபெற்ற திமுக எம்.பிக்கள் கூட்டத்தில், பாஜக அரசின் தொகுதி மறுவரையறை மசோதாவுக்கு ஆதரவு அளிக்க முடிவு செய்யப்பட்டது. திமுக முன்வைத்த 2 முக்கிய நிபந்தனைகளை, மசோதாவில் இணைத்துக் கொண்டுள்ளதால், தொகுதி மறுசீரமைப்பை ஆதரிக்க முடிவு செய்துள்ளதாக திமுக தெரிவித்துள்ளது.
திமுக கூட்டணியில் இடம்பெற்றுள்ள கட்சித் தலைவர்களையும் அழைத்து இதுகுறித்து தெரிவித்துள்ளது திமுக. இந்நிலையில், திமுக கூட்டணியில் இடம்பெற்றுள்ள மனிதநேய ஜனநாயக கட்சி, தொகுதி மறுசீரமைப்பு மசோதாவை எதிர்ப்பதாக அறிவித்துள்ளது.
நடந்து முடிந்த சட்டசபை தேர்தலில் கொளத்தூர் சட்டமன்றத் தொகுதியில் திமுக தலைவர் ஸ்டாலின் வெற்றி வாய்ப்பை இழந்த நிலையில், அவர் சட்டமன்றம் செல்லவேண்டும் என்பதற்காக, தனது எம்.எல்.ஏ பதவியையே ராஜினாமா செய்யட்டுமா எனக் கேட்டவர் தமிமுன் அன்சாரி. அவர், திமுக தலைவர் ஸ்டாலினின் முடிவை தற்போது எதிர்த்துள்ளார்.
இதுதொடர்பாக மனிதநேயக ஜனநாயக கட்சி வெளியிட்டுள்ள அறிவிப்பில், நாடாளுமன்ற தொகுதிகளின் மறுவரையறை மசோதா எதிர்வரும் நவம்பர் 30 அன்று நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட உள்ளது. மத்திய பாஜக கூட்டணி அரசு தற்போதைய மக்கள்தொகை அடிப்படையில் அல்லாமல்; 1971 மக்கள் தொகை அடிப்படையில் நாடாளுமன்ற மற்றும் சட்டமன்றங்களில் எண்ணிக்கைகளை உயர்த்துவது தொடர்பான சட்ட மசோதாவை தாக்கல் செய்யவிருப்பது குறித்து, மஜக உள்ளிட்ட கூட்டணி கட்சிகளிடம் இன்று திமுக தலைமை கலந்துரையாடி சில விளக்கங்களை கொடுத்தது.
இது குறித்து மேலும் விவாதிக்க மஜகவின் தலைமை நிர்வாகக்குழு கூட்டம் இன்று மாலை காணொளி வழியாக கூடி விரிவாக விவாதித்தது. முந்தைய பாஜக ஒன்றிய அரசு தற்கால மக்கள்தொகை அடிப்படையிலான தொகுதி உயர்வு என்ற நிலைப்பாடு மாறி; 1971 ஆம் ஆண்டு மக்கள் தொகைக்கு ஏற்ப எல்லா மாநிலங்களுக்கும்; சராசரியாக 50 சதவீத உயர்வு என்ற நிலைக்கு வந்திருப்பதும்; அதில் மகளிருக்கான இடங்கள் அதிகரிக்கப்படும் என தெரிவித்திருப்பதும்; வெளித்தோற்றத்தில் நல்லவைப் போல் தெரிந்தாலும்; இதற்கு பின்னால் உள்ள எதிர்கால அபாயங்களை கூர்ந்து ஆலோசிக்க வேண்டி உள்ளது.
1949 நவம்பர் 25 அன்று அண்ணல் அம்பேத்கர் கூறிய கருத்தை தற்போது ஆழ்ந்து சிந்திக்க வேண்டி உள்ளது. அதாவது சட்டம் எவ்வளவுதான் சிறப்பாக இருந்தாலும்; அதை அமல்படுத்துபவர்கள் தவறானவர்களாக இருந்தால் சட்டமும், விளைவும் தவறாக இருக்கும் என்றார்.
தற்போது, ஒன்றியத்தை ஆளும் மோடி தலைமையிலான பாஜக கூட்டணி அரசு அரசியல் சாசன சட்டத்தையும், நாட்டின் ஜனநாயகத்தையும் பாழ்படுத்திவரும் நிலையில் அவசர அவசரமாக பாஜக கொண்டு வரும் தொகுதி மறுவரையறை மசோதாவின் எதிர்கால சூழ்ச்சிகள் குறித்து ஆழ்ந்து கவலைப்பட வேண்டியுள்ளது.
எனவே இவ்விஷயத்தில் திராவிட கழகத்தின் தலைவர் ஆசிரியர் கி. வீரமணி அவர்களும் இதர ஜனநாயக சக்திகளும் சுட்டிகாட்டி இருப்பதை திமுக தலைமை கவனத்தில் கொள்ள வேண்டும் என இந்நிர்வாகக்குழு கேட்டுக் கொள்கிறது.
தொகுதி மறு வரையறையில் மத- இன- சாதி- மொழி சிறுபான்மையினரின் அரசியல் நலன்களும் மாநிலங்கள் அவையின் மரியாதையும் கேள்விக்குறியாகும் அபாயம் இருக்கிறது என்பதை சட்ட நிபுணர்கள் சுட்டிக்காட்டியுள்ளதையும் புறந்தள்ளி விட முடியாது.
அந்த வகையில், தொகுதிகளின் எண்ணிக்கையை உயர்த்துதல் தொடர்பான ஒன்றிய அரசின் இந்த மசோதாவை எதிர்க்கிறோம். இந்த விஷயத்தில் அடுத்த 25 ஆண்டுகளுக்கு இப்போதைய நிலையே தொடர வேண்டும் என மனிதநேய ஜனநாயக கட்சியின் தலைமை நிர்வாக குழு தீர்மானிக்கிறது.
ஜனநாயகம், சமூகநீதி மற்றும் மதச்சார்பின்மையில் நம்பிக்கை வைத்திருக்கும் அனைத்து அரசியல் கட்சிகளும் இதையே வலியுறுத்த வேண்டும் எனவும் இந்நிர்வாகக் குழு கேட்டுக் கொள்கிறது. இது தொடர்பாக மனிதநேய ஜனநாயக கட்சி உள்ளிட்ட கூட்டணி கட்சிகளை அழைத்து கருத்துகளை பரிமாறிய திமுகவின் ஜனநாயகப் பண்பை இந்நிர்வாககுழு பாராட்டுகிறது.
இவ்வாறு மனிதநேய ஜனநாயக கட்சியின் தலைமை நிர்வாக குழு கட்சியின் தலைவர் மு. தமிமுன் அன்சாரி தலைமையில் கூடி இந்த தீர்மானங்களை நிறைவேற்றி இருக்கிறது. இதற்கு முன்பாக பல்வேறு அரசியல் மற்றும் சட்ட நிபுணர்களிடமும் இதுகுறித்து ஆலோசனைகள் நடத்தப்பட்டது குறிப்பிடத்தக்கது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.



Click it and Unblock the Notifications
