இந்திய குடியுரிமை பெறுவதற்கு முன்பே ஓட்டுரிமை பெற்ற சோனியா காந்தி? நீதிமன்றத்தில் 2 அறிக்கை தாக்கல்

Subscribe to Oneindia Tamil

டெல்லி: காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் நம் நாட்டின் குடியுரிமை பெறுவதற்கு முன்பு 1980ம் ஆண்டிலேயே தனது பெயரை வாக்காளர் பட்டியலில் சேர்த்ததாக நீண்டகாலமாக நீடித்து வரும் சர்ச்சை தொடர்பான விவகாரத்தில் டெல்லி போலீசார் 2 அறிக்கைகளை நீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ள நிலையில் அதில் உள்ள விவரங்கள் பற்றிய பரபரப்பான தகவல்கள் வெளியாகி உள்ளன.

sonia-gandhis-name-added-on-voter-list-before-she-get-citizenship-delhi-police-submittes-2-report

காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவரும், தற்போதைய லோக்சபா எம்பியுமான சோனியா காந்தி இத்தாலியை சேர்ந்தவர். ராஜீவ் காந்தியை திருமணம் செய்த பிறகும் 15 ஆண்டுகள் கழித்து தான் அவர் இந்திய குடியுரிமை பெற்றார். 1983ம் ஆண்டு ஏப்ரல் மாதத்தில் தான் சோனியா காந்தி இந்திய குடியுரிமையை பெற்றார்.

ஆனால் இந்திய குடியுரிமையை பெறுவதற்கு முன்பாகவே சோனியா காந்தியின் பெயர் வாக்காளர் பட்டியலில் சேர்க்கப்பட்டதாக குற்றச்சாட்டுகள் உள்ளன. இதுதொடர்பாக வழக்கறிஞர் விகாஷ் திரிபாதி சார்பில் டெல்லி கூடுதல் தலைமை நீதித்துறை நடுவர் நீதிமன்றத்தில் நடவடிக்கை கோரி வழக்கு தாக்கல் செய்யப்பட்டது.

இந்த வழக்கு நீதிமன்றத்தில் நடந்து வருகிறது. இந்த குற்றச்சாட்டு தொடர்பாக அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என்று நீதித்துறை நடுவர் வினோத் ஜோஷி உத்தரவிட்டு இருந்தார்.

2 அறிக்கைகள் தாக்கல்

அதன்படி இன்று டெல்லி போலீசார் 2 அறிக்கைகளை நீதிமன்றத்தில் தாக்கல் செய்தனர். நவம்பர் 27 ம் தேதியிட்ட காவல்துறை றிக்கையில், '' புகாரில் கூறப்பட்டுள்ள குற்றச்சாட்டுகள் 'ஐபி எஸ்டேட்' காவல் நிலையத்தின் அதிகார வரம்பிற்குள் வரவில்லை. எனவே உரிய நடவடிக்கை எடுப்பதற்காக இந்த புகார் நியூடெல்லி மாவட்டத்திற்கு மாற்றப்பட்டது. பிறகு துக்ளக் சாலை காவல்நிலையத்துக்கு மாற்றப்பட்டது'' என்று கூறியிருந்தார்.

இதையடுத்து கூடுதல் விவரங்களை நீதித்துறை நடுவர் கேட்ட நிலையில் 2வது அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது. வழக்கு தொடர்பாக மேற்கொள்ளப்பட்டு வரும் நடவடிக்கைகள் தொடர்பான விவரங்கள் இடம்பெற்றிருந்தன. அதில், ''சோனியா காந்திக்கு இந்திய குடியுரிமை வழங்கப்பட்ட தேதியை கோரி ஜேமர் தியான் சந்த் ஸ்டேடியத்தில் செயல்பட்டு வரும் உள்துறை அமைச்சகத்தின் வெளிநாட்டினர் பிரிவிடம் தகவல் கோரப்பட்டுள்ளது. அதில் அந்தோணியோ மைனோ என்ற சோனியா காந்திக்கு 1980 ஏப்ரல் 30ல் இந்திய குடியுரிமை வழங்கப்பட்டது தெரியவந்துள்ளது.

ஆவணங்களை கைப்பற்ற நடவடிக்கை

அதேபோல் சோனியா காந்தியின் 1980 மற்றும் 1983 ஆம் ஆண்டுகளுக்கான வாக்காளர் பட்டியல் பதிவுகள் குறித்த டெல்லி மாவட்ட கலெக்டரிடம் தகவல்கள் கோரப்பட்டது. அப்போது அவரது பெயர் வாக்காளர் பட்டியலில் சேர்க்கப்பட்டு இருப்பது உறுதியானது. ஆனாலும் அவரது பெயர் சேர்க்கப்பட்டது தொடர்பான படிவம் 6 மற்றும் பிற ஆவணங்கள் இன்னும் கிடைக்கவில்லை. அதனை கண்டறிய நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது'' என்று கூறப்பட்டுள்ளது.

இதன்மூலம் இந்திய குடியுரிமை பெறுவதற்கு முன்பே சோனியா காந்தியின் பெயர் பெயர் வாக்காளர் பட்டியலில் சேர்க்கப்பட்டதா? என்ற குற்றச்சாட்டை ஆய்வு செய்ய, காணாமல் போன பதிவு ஆவணங்களை தேடிவருகிறோம் நீதிமன்றத்தில் டெல்லி காவல்துறை கூறியுள்ளது. இதையடுத்து கூடுதல் தலைமை நீதித்துறை நடுவர் வினோத் ஜோஷி இந்த வழக்கை டிசம்பர் 14ம் தேதிக்கு ஒத்திவைத்து உத்தரவிட்டார்.

வழக்கின் பின்னணி என்ன?

சோனியா காந்தி, முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தியை திருமணம் செய்தார். இவர்களின் திருமணம் 1968 ம் ஆண்டு பிப்ரவரி 25ம் தேதி நடந்தது. சோனியா காந்தி இத்தாலியை சேர்ந்தவர். திருமணத்துக்கு பிறகும் கூட சோனியா காந்தி தனது குடியுரிமையை மாற்றவில்லை. இத்தாலி குடிமகளாகவே தொடர்ந்தார். 15 ஆண்டுகள் கழித்து தான் அவர் இந்திய குடியுரிமை பெற்றார். 1983ம் ஆண்டு ஏப்ரல் மாதத்தில் தான் சோனியா காந்தி இந்திய குடியுரிமையை பெற்றார்.

இந்திய குடியுரிமை பெறுவதற்கு முன்பாக 1980ம் ஆண்டில் சோனியா காந்தியின் பெயர் முதல் முதலில் வாக்காளர் பட்டியலில் இடம்பெற்றதாக பாஜகவினர் கூறி வருகின்றனர். மறைந்த முன்னாள் பிரதமர் இந்திரா காந்தியின் அதிகாரப்பூர்வ இல்லம் அமைந்திருந்த 1, சஃப்தர்ஜங் சாலை முகவரியை கொண்டு சோனியா காந்தி வாக்குரிமை பெற்றுள்ளார்.

2 முறை பெயர் சேர்ப்பு

அந்த முகவரியில் இந்திரா காந்தி, ராஜீவ் காந்தி, சஞ்சய் காந்தி மற்றும் மேனகா காந்தி ஆகியோரின் பெயர்கள் தான் வாக்காளர் பட்டியில் இருந்தது. 1980ம் ஆண்டில், டெல்லி நாடாளுமன்ற தொகுதியின் வாக்காளர் பட்டியல் 1980 ஜனவரி 1ம்தேதியை தகுதியேற்பு நாாளாக கொண்டு திருத்தப்பட்டது. அப்போது வாக்குச்சாவடி 145ல் சீரியல் நம்பர்388ல் சோனியா காந்தியின் பெயர் சேர்க்கப்பட்டதாக கூறப்படுகிறது.

பிறகு 1982ம் ஆண்டு நடந்த போராட்டத்தை தொடர்ந்து சோனியா காந்தியின் பெயர் நீக்கப்பட்டது. பிறகு 1983ல் மீண்டும் சேர்க்கப்பட்டது. சோனியா காந்தியின் பெயர் வாக்குச் சாவடி 140ல் வரிசை எண் 236ல் இருந்தது. அப்போதும் அவர் இந்திய குடியுரிமை பெறவில்லை. ஏனென்றால் வாக்காளர் பட்டியல் திருத்தம் 1983 ஜனவரி 1ம் தேதியை அடிப்படையாக வைத்து மேற்கொள்ளப்பட்டது.

ஆனால் சோனியா காந்திக்கு 1983 ஏப்ரல் 30ம் தேதி தான் குடியுரிமை வழங்கப்பட்டது. இப்படி சோனியா காந்தி இந்தியராகும் முன்பே வாக்குரிமை பெற்றதாக பாஜகவினர் கூறி வரும் நிலையில் வழக்கறிஞர் விகாஸ் திரிபாதி டெல்லி நீதிமன்றத்தில் விசாரணை கோரி வழக்கு தொடர்ந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+