"அது கஷ்டம்".. திருப்பரங்குன்றம் மலையில் மக்களுக்கு அனுமதி உண்டா? தீபமேற்றிய ஓய்வு நீதிபதி விளக்கம்
மதுரை: மதுரை: உச்சநீதிமன்ற உத்தரவை தொடர்ந்து திருப்பரங்குன்றம் மலை உச்சியில் உள்ள தூணில் இன்று தீபம் ஏற்றப்பட்டது. பொதுமக்கள் யாருக்கும் அனுமதி வழங்கப்படவில்லை. நாளை முதல் பொதுமக்களுக்கு அனுமதி வழங்கப்படுமா? என்ற கேள்விக்கு மலை மீதுள்ள தூணில் தீபம் ஏற்றிய ஓய்வு பெற்ற நீதிபதிகள் எஸ் வைத்தியநாதன் விளக்கம் அளித்துள்ளார்.

உச்சநீதிமன்ற உத்தரவை தொடர்ந்து இன்று மாலை 5 மணிக்கு திருப்பரங்குன்றம் மலை உச்சியில் உள்ள தூணில் தீபம் ஏற்றப்பட்டது. கோவில் அறங்காவலர் குழுவினரின் செயல்பாடுகளை உச்சநீதிமன்றம் நிறுத்தி வைத்து உள்ளது.
இதனால் கோவில் நிர்வாகத்தைக் கவனிக்க ஓய்வு பெற்ற நீதிபதிகள் எஸ் வைத்தியநாதன் மற்றும் வி பார்த்திபன் ஆகியோரை பொறுப்பாளர்களாக உச்சநீதிமன்றம் நியமித்து இருந்தது. இதையடுத்து 2 ஓய்வு நீதிபதிகளும் சேர்ந்து மலை உச்சியில் உள்ள தூணில் இன்று தீபம் ஏற்றினர்.
தீபம் ஏற்றிய பிறகு ஓய்வு நீதிபதிகள் வைத்தியநாதன், பார்த்திபன் ஆகியோர் திருப்பரங்குன்றம் மலையில் இருந்து கீழே இறங்கி வந்தனர். அப்போது பத்திரிகையாளர்கள் அவர்களை சூழ்ந்து கேள்விகள் கேட்டனர். அப்போது பத்திரிகையாளர்களின் பல்வேறு கேள்விகளுக்கு ஓய்வு பெற்ற நீதிபதி வைத்தியநாதன் பதிலளித்தார்.
தீபம் ஏற்றியது பற்றி கேள்வி கேட்டதற்கு, ''தீபம் ஏற்றியது சந்தோஷமாக இருக்கிறது. எங்களின் கைகளில் தீபம் ஏற்றியது மகிழ்ச்சியாக இருந்தது. இன்று மாலைக்குள் தீபம் ஏற்ற உச்சநீதிமன்றம் உத்தரவிட்டு இருந்தது. அதனை செயல்படுத்தி உள்ளோம். ஏற்பாடுகள் நன்றாக செய்திருந்தார்கள். கோவில் நிர்வாகம் சார்ந்து நாங்கள் இன்னும் எந்த முடிவும் எடுக்கவில்லை. நானும், ஓய்வு நீதிபதி பார்த்திபனும் சேர்ந்து அமர்ந்து அதுதொடர்பாக முடிவெடுப்போம்'' என்றார்.
இதையடுத்து பத்திரிகையாளர் ஒருவர் எத்தனை நாட்கள் கோவில் உங்களின் கட்டுப்பாட்டில் இருக்கும்? என்ற கேள்வி முன்வைக்கப்பட்டது. அதற்கு அவர், '' அதுவெல்லாம் எனக்கு தெரியாது. உச்சநீதிமன்றம் என்ன சொல்கிறதோ.. அதன்படி நடப்போம்'' என்றார்.
அடுத்து பத்திரிகையாளர் ஒருவர், ''பொதுமக்களுக்கு மலை மீது அனுமதிப்பீர்களா?'' என்ற கேள்வி முன்வைக்கப்பட்டது. அதற்கு அவர், ''இந்த இடத்தை (திருப்பரங்குன்றம் மலை) நீங்களே பார்த்து இருப்பீர்கள்.. பண்ண (பொதுமக்களை அனுமதிக்க) முடியுமானு பாருங்க.. அது கஷ்டம்'' என்றார்.
அதேபோல் ஓய்வு நீதிபதி பார்த்திபனிடம் ''தீபம் ஏற்றினால் பிரச்சனை வரும் என்று சொன்னார்களே?'' என்ற கேள்வியை பத்திரிகையாளர்கள் முன்வைத்தனர். அதற்கு அவர், ''நல்லவேளை ஒன்றும் நடக்கவில்லை. கடவுளின் அருளால் ஒன்றும் நடக்கவில்லை. தமிழ்நாட்டில் ஒருபோதும் மதரீதியான பிரச்சனை வராது'' என்றார்.


Click it and Unblock the Notifications
